Thursday, December 09, 2004

தமிழ்முரசு - நேற்றும், இன்றும்...

திரு. மாலன் அவர்கள் இங்கு சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ்முரசு நாளிதழில் ஒவ்வொரு புதன்கிழமையும் "சொல்லாத சொல்" என்ற ஒரு பத்தி எழுதி வருகிறார். அதில் நேற்று எங்கே உங்கள் பூ என்று வலைப்பதிவு பற்றி எழுதி, யாழ்.நெட், தமிழ்மணம் பற்றியும் தகவல் கொடுத்திருந்தார்.

அந்த கட்டுரையின் இறுதிப்பகுதியில், நமது சிங்கை பதிவாளர்கள் சிலர் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக நமது ஜெயந்தி சங்கர். அவர் சிங்கப்பூர் டைம்ஸ் என்று தமிழோவியத்தில் எழுதும் கட்டுரைகள், தோழிகள் - வலைப்பதிவில் மறுபிரசுரம் செய்வது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இறுதியில், சிங்கப்பூர் இன்னும் நிறைய வலைப்பூக்களை மலரச்செய்ய வேண்டும். இணையத்தில் தமிழ் அடியெடுத்து வைக்க சிங்கப்பூர் தமிழர்கள்தான் காரணமாக இருந்தார்கள். அந்த முன்னோடி சிங்கப்பூர் இந்த புதிய முயற்சியில் பின் தங்கி இருக்கலாமா? என்று கேட்டு விட்டு,

வேறு ஒரு காரணத்திற்காகவும் சிங்கப்பூர் படைப்பாளிகள் இதில் அக்கறை காட்டவேண்டும். உலகின் முன் தங்கள் படைப்புக்களைத் தடையின்றி வைக்க இதுவோர் வாய்ப்பு. உலகின் பாராட்டுகளைப் பெற்று பெருமிதம் கொள்ளவும், உலகின் விமர்சங்களைக் கொண்டு வளர்ச்சி பெறவும் இலவசமாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பு உதவும். இணையம்தான் உலகின் எதிர்காலம் என்று கூறி சிங்கை எழுத்தாளர்களையும், ஆசிரியர்களையும் வலைப்பதிவு பக்கம் வர அறைகூவல் விட்டிருந்தார்.

மாலனின் கட்டுரை படித்துவிட்டு, நேற்றே உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம் சார்பில் - ஆசிரியர் திரு. பொன்மாணிக்கம் தமிழ் மலர் என்ற ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறார்கள்.

நல்ல முயற்சி. இதுபோல் இன்னும் பலர் வருவர் என்று நம்பலாம்.

உலகின் முன் தங்கள் படைப்புக்களைத் தடையின்றி வைக்க இதுவோர் வாய்ப்பு இதுதொடர்பில் வேறுவிதமான மாற்றுக்கருத்து வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வலைப்பதிவு ஆரம்பம் என்ற முதல்தகவல் மகிழ்ச்சி அளித்தது. என்னைப்பொருத்தவரை, மாலனின் இந்தக்கருத்து எவ்வளவுதூரம் சாத்தியம் என்பது ஒரு ?

சரி இன்றைய தமிழ்முரசு பற்றி இனி:

இரண்டாம் பக்கத்தில் முனைவர் நா. கண்ணண் அவர்களின் இரு நூல்கள் வெளியீடு (விலைபோகும் நினைவுகள், நிழல் வெளி மாந்தர்) பற்றிய தகவல் புகைப்படத்துடன் வந்திருந்தது. அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அடுத்த பக்கம் புரட்டினால், ஒரு முழுப்பக்கத்துக்கு நமது ஜெயந்தி சங்கர் எழுதிய டீன் ஏஜ் ரவுடிகள்... திகிலில் பெற்றோர்! என்ற அவள் விகடன் கட்டுரை பற்றிய எதிர்விளைவு.

கட்டுரை தொடர்பில், பல இளையர்களும், பெற்றோர்களின் எதிர்ப்பு கருத்துக்கள் வந்திருக்கிறது.

விகடன் தரப்பு விளக்கம்:

'கருத்தை மாற்றவில்லை'

கட்டுரை ஆசிரியர் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதி இருந்த கட்டுரையை அவள்விகடனுக்கு ஏற்ற அளவில் குறைத்திருக்கிறோமே தவிர, எந்த வகையிலும் கட்டுரையின் தன்மையை மாற்றவில்லை.

"இது சஞ்சிகை ஆசிரியர் செய்த தவறு"
- எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர்

"நடந்தது என் தவறல்ல. நான் அனுப்பிய கட்டுரை வெட்டப்பட்டு மாற்றாப்பட்டு வெளியிடப்பட்டதைப் பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்! சிங்கப்பூர் வளர்ப்புமுறை மற்றும் இளையர்கள் தொடர்பான ஒரு கட்டுரை வேண்டும் என்று 'அவள் விகடன்' சஞ்சிகை ஆசிரியர் என்னிடம் சில வாரங்களுக்கு என்னிடம் சில வாரங்களுக்கு முன்பு கேட்டபோது நானும் எழுத சம்மதித்தேன்.

ஆசிரியர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டபடி சில தினங்களில் நான் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பி வைத்தேன். அந்தக் கட்டுரையில் கெட்ட விஷயங்களை மட்டும் அல்லாது நல்ல விஷயங்க்ளைப் பற்றியும் எழுதப்படிருந்தன. ஆனால் அவை ஏதும் வெளியிடப்படவில்லை.

சிராங்கூன் ரோட்டு புத்தகக் கடையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட சஞ்சிகையைப் பார்த்ததும் அனைவரையும் போல நானும் அதிர்ச்சி அடைந்து ஆசிரியரை இணையத்தின் வழி தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்டுரை மிகவும் நீளமாக இருந்தது என்றும் கட்டுரையை 'அவர்கள்' பாணியில் எழுத வேண்டி இருந்தது என்றும் கூறினார்கள். என் கட்டுரையை இப்படி வெட்டியதற்கு அவர்களிடம் நான் விளக்கக் கடிதம் ஒன்றையும் கேட்டிருக்கிறேன். அந்த சஞ்சிகையில் நான் எழுதுவது இதுதான் முதன் முறை."

இது எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக இன்னொரு கருப்பு கட்டமொன்று சொல்கிறது:
திருமதி ஜெயந்தி சங்கர் கட்டுரையைக் குறித்து போலிசார் விரைவில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர்.

இந்த விஷயம் தொடர்பில், என்முன் இப்போது இருக்கும் ஒரே கருத்து: ஜெயந்தி இந்த விஷயத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் விடுபடவேண்டும் என்பது மட்டும்தான்.

Tuesday, December 07, 2004

7-வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு

இந்த வார இறுதியில் 7-வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு இங்கு சிங்கையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு(க்காக சிங்கை) வருகைதரும் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்(றோம்).

நமது வலைப்பதிவு குழுமத்தில் இருந்து மாநாட்டில் கட்டுரை படைக்கும் நண்பர்கள்:

- அருள் குமரன் (நாளைய உலகின் தொழில்நுட்பங்களில் தமிழ்)
- பத்ரி (தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்-வணிகத் தளம்)
- வெங்கடேஷ் (பன்மொழி செய்தித் திரட்டுதலை நோக்கி)
- சுபாஷிணி (கல்வி கற்றல்-கற்பித்தலில் Artificial Intelligence)
- முனைவர். கண்ணன் (இலக்க சேமிப்பு: இடர்கள், இலக்குகள், இணைப்புகள்)
- மாலன் (வலைப்பூக்கள் : வளர்ந்து வரும் மாற்று ஊடகங்கள்)

மற்றும் மின்-மஞ்சரியில் கட்டுரை எழுதிய காசி, ஏற்பாட்டுக் குழுவின் ரமா சங்கரன் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

மாநாடு மாபெரும் வெற்றிபெற...
உங்களில் பலரைப்போல் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
lsanbu@gmail.com

பி.கு:
நான் முன்னொருமுறை வலைப்பூவில் எழுதியபடி 'முதுகலை' என்பதை தவறாகப் புரிந்துகொண்டு தற்போது மேலும் படித்துவரும்(M.Tech) தேர்வு அடுத்தவாரம் இருப்பதாலும், வாரயிறுதியில் வகுப்பு இருப்பதாலும் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது என்று கண்டுகொள்ளாமல் இருந்துவந்தேன், இதுவரை. இன்றுதான் முடிந்தால் போகலாமே என்று, உத்தமம் பக்கம் போனால் பதிவு 4-ந்தேதியே முடிவடைந்து விட்டது போலிருக்கிறது. இருந்தபோதும் மாநாடு நடைபெறும் திரு. அருள்மகிழ்நன் அவர்களின் 'கொள்கை ஆய்வுக்கழகம்' எனது பள்ளியின் (ISS) அருகிலேயே இருப்பதால், இடைவேளையிலோ(எனக்கோ/உங்களுக்கோ) அல்லது பின்னேரம் சந்திக்க இயலும். அதனால் உங்கள் நேரம் அனுமதித்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.