Saturday, April 30, 2005

வானம் வசப்படுமே...

சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 FMல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி வானம் வசப்படுமே...

முயன்றால் வானம் வசப்படும்,
உழைத்தால் வானம் வசப்படும்,
துணிந்தால் வானம் வசப்படும்,
அன்பால் வானம் வசப்படும்,
கருணையால் வானம் வசப்படும்,
திறமையால் வானம் வசப்படும்,
உயரிய சிந்தனையால் வானம் வசப்படும்
என்ற உண்மைகளை வாழ்ந்து காட்டியவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முயற்சிதான் இந்த - வானம் வசப்படுமே...

வானம் வசப்படுமே... ஒலி-யின் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களால் படைக்கப்பட்டு வருகிறது. திரு. பாண்டியன் தனது கம்பீரமும் அதேயளவு சாந்தமும் கலந்த இனிய குரலில் படைக்கும் அறிவிப்புக்களைக் கேட்கும்போதே கேட்பவருக்கு ஒரு ஈடுபாடு வரும். அவருடைய குரலை தேர்ந்தெடுத்த அறிவிப்புகள்/நிகழ்ச்சிகளிலேயே கேட்பதால் தொடர்ந்து (என்னைபோன்ற) ஒலியுடன் குடியிருப்பவர்களுக்கும்கூட இன்னும் ஆர்வம் கூடும்.

திங்கள் முதல் வெள்ளி வரையிலாக கடந்த சில வாரங்களாக ஒலி பரப்பாகிவந்த இந்த நிகழ்ச்சி நேற்று 50-வது நிகழ்ச்சியாக ஒலி பரப்பானது. நேற்றைய அறிவிப்பின் படிஅடுத்த நான்கு வார இடைவெளிக்குப்பின் அடுத்த பகுதி மீண்டும் தொடரும்.

இதுவரை ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளும் ஒலியின் தளத்தில் இணயமேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை இடம்பெற்ற வரலாற்று மாந்தர்கள் யாரென்று தெரிந்து கொள்ள, நிகழ்ச்சியைக்கேட்க...

இப்போது ஒலி, நேயர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்:
இதுவரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறாத வரலாற்று மாந்தர்களை, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டியவர் என்று நீங்கள் நினைப்பவர்களை - ஏன் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துடன் குறுந்தகவல் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இங்கு சக வலைப்பதிவாளர்களிடமும், வலைப்பதிவு வாசகர்களிடமும் நிறைய கருத்துக்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு இட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் ஒலிக்கோ, திரு. பாண்டியன் அவர்களுக்கோ மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொண்டாலும் - ஒலிக்கு அனுப்பி வைக்கிறேன்.

மக்களுக்கு ஊட்டம்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு நாமும் ஊட்டம் கொடுப்போம்.

Tuesday, April 19, 2005

செல்லினத்தின் கொ.ப.செ.

தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா வைபவம் (அவசர அவசரமாக) இனிதே நடந்து முடிந்துள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அதே நேரத்தில், விழா தொடர்பாக சன் டிவியில் விளம்பரம் வந்ததில் இருந்து ஆங்காங்கே புகையும் வந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பில் ஞாயிறு அதிகாலையன்று என்னுள் தோன்றியதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தேன். ஆனால், அதே வேகத்துடன் எழுதவேண்டாம் என்று விட்டு வைத்தேன்.

வெளியிடப்பட்ட வட்டில், இப்போது பெரும்பாலார்கள் பயன்படுத்தும் TSCIIயையே காணோம், தாப்/தாம்தான் என்று சில குழுமங்களில் பரபரப்பு. இன்று நண்பர் பத்ரியின் ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? பதிவைப் பார்த்தவுடன், என்னுள் தோன்றியதை இன்றே பதிவுசெய்யத் தோன்றியது.

இன்று கணிணியில் தமிழ் பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் தமிழ் எப்படி எப்படியெல்லாம், எந்தெந்த வழியிலெல்லாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று. இந்த கணிணித்தமிழுக்கு வழிவகுத்தவர்கள் எல்லாமே - 90 சதவீதத்துக்கு மேலாக அரசு சார்பற்ற, தன்னார்வமிக்க தொண்டூழியர்கள்தான். ஆனால், இன்று எல்லாத்துக்கும் நாங்கள்தான் காரணம் என்பதுபோல், ஒருபக்கம் பரபரப்பு நடக்கிறது. 30 லட்சம் குறுந்தகடு வெளியிடுவது, பத்திரிக்கைகளுக்கு உடனே கொண்டு சேர்ப்பது போன்றவை பாராட்டப்படத்தக்கது என்றாலும் - பலருடைய உழைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது.

எனக்குத்தெரிந்தவரை தமிழ் கணிணி வளர்ச்சிக்கு வருடாவருடம் நடந்துவரும் தமிழ் இணைய மாநாடு பெரிதும் செய்து வருகிறது. ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், உலகமுழுவதும் தமிழ் கணிணிக்காக பணிசெய்வோருக்கிடையேயான ஒத்துழைப்பு, யுனிக்கோடு அமைப்புடனான தொடர்பு என்று பல வழிகளில் பாராட்டத்தக்க பணிகள் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த குறுந்தட்டு வெளியீட்டில் உத்தமம் என்றழைக்கப்படும் INFITT ன் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

பலகாலம் தமிழுக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு - அமைச்சு மூலம் C-DAC தயாரித்ததாக வட்டு வெளியாகிறது. இதில் பரம்பரை பக்கா அரசியல் ஒருபக்கமும், தமிழ் இணையத்துக்கு உழைப்பவரிடையே நிலவும் அரசியில் ஒருபக்கமும் சேர்ந்து உண்மையை குழிதோண்டிப்புதைக்க ஒத்துழைத்துள்ளது.

ஃபயர் ஃபாக்ஸைப் பொருத்தவரை தமிழாவின் முகுந்த் பிப்ரவரி 22ல் வெளியிட்டார். ஒரு சில தினங்களிலேயே நானும் இறக்கி பயன்படுத்தி வருகிறேன்.

அதன் பின்னர், ழ-கணிணியின் ஜெயராதா மார்ச் 25 அன்று ஃபயர் ஃபாக்ஸ் தமிழில் முடிந்துவிட்டது என்ற ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது என் மனதுள் தோன்றியது: ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல், செய்ததை திரும்பச்செய்து அவர்களுடைய பொன்னான காலநேரத்தை வீணாக்குகிறார்கள் என்று. இருந்தாலும் ழ(RedHat) என்பதால் தனியாக வேண்டுமோ என்று விட்டுவிட்டேன்.

இப்போது புதிதாக, C-DAC மூலம் தாங்கள்தான் (உலகில்) முதன்முதலில் வெளியிட்டோம் என்று இன்னொரு ஃபயர் ஃபாக்ஸ்.

இதற்கு என்ன செய்யலாம் என்று இணையப்பொதுமக்கள் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, வருங்காலத்தில் என்ன செய்யலாம் என்று என்னுள் தோன்றுவது.

1) உத்தமம் ஒரு பொதுவான பதிவு நிறுவனமாய் இருந்து தமிழ் கணிணிப்படுத்ததில் யார் என்ன புதிதான திட்டம் தொடங்கினாலும் அதன் விபரத்தை பதிவு செய்யலாம். திட்டத்தின் முழுவிளக்கம் கொடுக்காமல், ஆரம்பதேதி, செயல்படுபவர்கள் போன்ற விபரத்தை முதலிலேயே தெரிவிக்கலாம். அதுபோல், முடிவு/வெளியீடு தேதி, பதிவிறக்கம் செய்யும் தொடர்பு போன்றவை.

2) தமிழ் லினக்ஸ், டிஸ்கி, போன்ற பல இணையக்குழுமங்கள் இருந்தாலும், பலரும் பல பிரிவாக (குறிப்பாக RedHat, Mandrake Linux) என்று செயல்படும்போது உத்தமம் ஊடுபாலமாக செயல்படலாம்.

3) உத்தமம் தனது மின்மிஞ்சரியை வருடாந்திர தமிழ் இணைய மாநாட்டுச் சிறப்பிதழாக மட்டும் வெளியிடாமல், மாத மின்னிதழாக மாற்றி - ஒவ்வொரு மாதமும் தமிழ் கணிணியுகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், புதிய அறிவுப்புகள், மென்பொருள்கள், புதிய தளங்கள், தற்போது நடந்துவரும் திட்டங்களின் நிலைகள் போன்ற பல விபரங்களைத் தொகுத்தளிக்கலாம்.

4) புதிதாக வரும் அறிவிப்புகள், வெளியீட்டுகளுக்கு - அது மாநில அரசோ, மத்திய அரசோ, வேறு தன்னார்வ நிறுவனங்களாய் இருந்தாலும், அது உத்தமம் பார்வைக்கு(காவது) குறைந்தபட்சம் சென்று திரும்பவதாய் பார்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற இன்னும் பல ...லாம்கள்.

மைக்ரோசாஃப்ட்

ஒரு காலத்தில் நான், ஏன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - சீன, ஜப்பானிய, கொரிய மொழிகளிலெல்லாம் இயங்குதளங்கள், ஆஃபீஸ் பொதிகள் வெளியிடுகிறது, தமிழில் இல்லை என்றேன். பலரும் சொன்ன பதில், வாங்குபவர்கள் இருந்தால்தான் வெளியிடும் என்றார்கள். ஆனால், இப்போது இயங்குதளம், ஆஃபீஸ் எல்லாம் வருகிறது ஏன்?

நமது முகுந்த் போன்றவர்களின் கைவண்ணம்தான், பில் கேட்ஸையே மறுபரிசீலனை செய்யவைத்திருக்கிறது என்பது உண்மை.

முதல் விடயம், விண்டோஸுக்கு பரம எதிரியாக எளிதில் கிடைக்கும் லினக்ஸ். அதிலும் உள்ளூர் மொழிகளில், ஒப்பன் ஆஃபீஸ் போன்ற விண்டோஸிடன் இணைந்து வராத பல மென்பொருள்களுடன்.

இந்த சிறப்புக் கருதி சிங்கையின் தற்காப்பு அமைச்சு தனது 20,000 கணிணிகளில் பயன்படுத்தும் ஆஃபிஸ் 97க்குப் பதிலாக ஒப்பன் ஆஃபிஸுக்கு மாறப்போகிறது. அதற்கு முக்கியக்காரணம் - செலவு குறைவு. தமிழ் உட்பட சிங்கையின் 4 அதிகாரத்துவ மொழிகளும் இருக்கிறது. இது மற்ற அமைச்சுகளும் இதைப் பின் தொடரும்.

மலேசியாவில் சன் நிறுவனத்தின் ஸ்டார் ஆஃபிஸ் பல அமைச்சுகளில் பயன்படுத்த ஆரம்பித்து சில வருடங்களாகிறது. இந்தியாவிலும் பல அரசு துறைகளில் லினக்ஸ் மற்றும் திறமூல மென்பொருள்கள் உட் புகுந்து விட்டது.

இதற்குப்பதிலாக ஒரு மாற்றுதான், மைக்ரோசாஃப்டின் பாஷா இந்தியா. ஆனால், அதிலும் ஒரு திருப்தி - தமிழ் திட்டத்தை பொறுப்பேற்று செய்து தரும் நிறுவனம் விஷ்வக்

செல்லினத்தின் கொ.ப.செ.

ஒரு வழியாக தலைப்புக்கு வருகிறேன்:)
நண்பர்களிடம் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக, தமிழ் குறுந்தகவல் பற்றிய விடயம் வந்தது. அப்போது என்னைச் சுட்டிக்காட்டி இன்னொரு நண்பர் ஒருவர் கூறியது, "அதான் இங்க இருக்காரே, செல்லினத்தின் கொபசெ" என்றார். அப்போது சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.
ஆனால், அன்று எனக்குள் தோன்றியது இதுதான்:
நான் செல்லினத்துக்கு மட்டுமல்ல. முதன்முதல் கணிணியில் தமிழ் பார்க்க உதவிய நா.கோ அய்யாவின் கணியன் முதல், பின்னர் 1996ல் வாங்கிய கம்பன் எழுத்தோலை, பின்னர் முரசு அஞ்சல் என்று தொடங்கி, டிஸ்கி, யுனிக்கோடு, இ-கலப்பை, தமிழ்மணம் என்ற பல தமிழ் கணிணி/தொழில் நுட்ப முயற்சிகளுக்கு கொ.ப.செ-வாக, பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தே இருக்கிறேன். அதை இப்போதும் தொடர்கிறேன். அது என்னால் இயன்ற உதவியாக நினைக்கிறேன்.

இதை நான் மட்டுமல்ல, கணிணியில் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்துவதை, நல்ல விடயங்களை, நண்பர்களின் உழைப்பைப் பாராட்டி அடுத்தவருக்கு நம்மாள் இயன்ற நாளுபேருக்கு எடுத்து செ(சொ)ல்லாமல் இருப்பது தவறு, துரோகம் என்றே நான் நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் ஓரளவு செய்திருந்தாலே - இன்று தனியாக கூக்குரலிடும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்.

அதனால் இதுவரை இதை செய்யாதிருந்திருந்தாலும், இன்றிலிருந்தாவது தமிழ் கணிணித்துறையில் உள்ள முன்னேற்றங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக!

இந்தப் பதிவின் நீளம்கருதிதான் எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். இருந்தாலும், ஒருவழியாக என்னுள் தோன்றியதை சொல்லி விட்டேன். மேலும், இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள எந்த தனி மனிதருக்கோ, நிறுவனத்துக்கோ நான் சொந்தக்காரனோ, சண்டைக்காரனோ அல்ல. இது என்னுடைய தாழ்மையான கருத்து, அவ்வளவுதான்.


என்றென்றும் அன்புடன்,
அன்பு

Monday, April 18, 2005

உங்க ஊர்லயும் இருக்குதா!?

சிங்கையில் உள்ள இந்திய தூதரகம், தனது வழக்கமான சேவைகளுடன் ஒலி/ஒளி வட்டுக்கள், நாடாக்கள் எல்லாம் கூட இரவலுக்கு கொடுக்கிறதாமே? ஆமாவா!? யாரும் பயன்படுத்தியிருக்கிறீர்களா (தெரியும், இங்கு சிங்கையில் கூட தூதரகத்தில் அருகில் ஜாகை வைத்திருக்கும், ஒருவருக்குமட்டும்தான் பயன் என்று:) இரண்டு காரணம் - மற்றவருக்கு வேலை நேரம் ஒத்துவராது, இன்னொன்று எல்லாமே हिन्डि / हिन्दि

இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)

Saturday, April 16, 2005

கற்றதும்... பெற்றதும்... எஸ்.பொ

நன்றி: விகடன்

============================================
கற்றதும்... பெற்றதும்...
சுஜாதா

விட்டான்... கையான்... வீர விளையாட்டு!

எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, ‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’ என்று கேட்டதில், ‘இங்கேதான் சென்னை&94&ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், உறவுகள் என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.

இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் பனியும் பனையும் என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.

எஸ்.பொ\வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.

தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.
என்ன சாதிக்கிறோம்..?

கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்
இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.

எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும் சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.

எஸ்.பொ-வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.

எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட னீமீனீஷீவீக்ஷீ (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.

"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."

இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!

==========================================

நன்றி: சுரதா

Wednesday, April 13, 2005