Wednesday, April 13, 2005

Thursday, March 31, 2005

@#$%^ அப்படின்னா என்ன மம்மி...!?

குழந்தைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...

நம்மில் பலர் தினம்தினம் நம் பிள்ளைகளின் எல்லையில்லா கேள்விகளைக்கேட்டு எரிச்சலுற்றிருப்போம், அதிர்ச்சியடைந்திருப்போம். சிலர் கேள்விகளில் ஆனந்தமும் கொண்டிருக்கலாம்.

Image hosted by Photobucket.com

யோசித்துப்பாருங்கள் குழந்தைகள் உலகத்தை எப்படி தெரிந்துகொள்வார்கள்?

குழந்தை நீலவானத்தைப் பார்த்து, அது ஏன் நீலமாக இருக்கிறது என்று வியக்கலாம். அவர்களுக்கு எப்படித்தெரியும் அவர்களுக்கருகில் இல்லாத பலவற்றைப்பற்றி?

அடிக்கடி கேள்விகள் கேட்டு நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் (அல்லது பல வேளைகளைகளில் தலையச்சொறியச்செய்யும்:) அவர்களை எப்படி சமாளிப்பது?

குழந்தைகள் நினைத்திருக்கலாம் - நமக்கு எல்லாம் தெரியுமென்று. (நமக்குத்தானே தெரியும், நம்ப வண்டவாளம்:) அம்மாக்களே தயவுசெய்து சொல்லாதீர்கள்: "அப்பாவிடம் கேள்" என்று.

உங்களுக்காகவே, உங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:

உங்கள் பதில் சுருக்கமாக இருக்கட்டும்:

பிள்ளைகளின் கேள்விகள் அறிவார்ந்த, பிரமிப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால், உங்கள் பதில் அதேவிதமாக இருக்கவேண்டுமென்பதில்லை. உதராணத்திற்கு, உங்கள் பிள்ளை "சூரியன் ஏன் ஒளிர்கிறது?" என்று கேட்டால், "மரம், செடிகள் வளர்ந்து நம்மை வளமாக வைத்துக்கொள்ள..." எனபதுபோல சுருக்கி பதில் அளியுங்கள். கடல் ஆவியாவதில் ஆரம்பித்து, புறா ஊதா/அக ஊதா - அது இதென்று (நமக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது கூகிளின் உதவியுடன்) பதிலை வளர்க்கத்தேவையில்லை -அது அவர்களுக்குப் புரியவும் போவதில்லை, அந்த வயதில்.

செயல்விளக்கம் கொடுங்கள்:

ஆயிரம் சொல் சொல்ல இயலாததை, நேரடி விளக்கம் எளிதில் செய்யும். கடலில் ஏன் அலைகள் வருகிறது? என்று கேட்டால், ஒரு வாளியில் நீரைநிரப்பி அதை அவர்களையே வேகமாக ஊதச்செய்து எழும்பும் அதிர்வுகளை/அலைகளைக் காட்டுங்கள். அது புரியச்செய்யும், நீங்கள் கொடுக்க நினைக்கும் நீண்டவிளக்கத்தை விட.

உண்மையைச் சொல்லுங்கள்:

கும்மிருட்டு, புயல், பேயென்றெல்லாம் வைத்து எதாவாது தேவதைக்கதை புனையாதீர்கள். உங்கள் குழந்தை, "நான் எங்கிருந்து வந்தேன்?" என்று கேட்டால், "குப்பைத்தொட்டியில் எடுத்தேன், தத்து எடுத்தேன்" என்று தத்து பித்தென்று உளாராதீர்கள். அப்படி கூறுவதால் குழந்தையை குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்த்துகிறீர்கள்.

எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது, ஒரு ஆரஞ்சுவிதையை நான் குழந்தையில் விழுங்கியபோது - அம்மா உன்னுடைய மண்டையில் ஆரஞ்சுமரம் முளைக்கப்போகிறது என்று கூறி, பலகாலம், பல இரவு தலையை அழுத்திப்பிடுத்திக்கொண்டு கஷடப்பட்டிருக்கிறேன் - எங்கே செடி முளைத்துவிடுமோ என்று:)

அளவுக்கதிகமாக பதறாதீர்கள்:

உங்கள் பிள்ளைகள் - பிறப்பு/இறப்பு செக்ஸ் சம்பந்தப்பட்ட துடுக்குதனமான கேள்விகள் கேட்கும்போது தயவுசெய்து நிதானத்தை இழக்காதீர்கள், அதிகம் பதறாதீர்கள். குழந்தைகள் தீவிரவாதிகள் பற்றி கேடகும்போது, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது - அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளத்தான். வீணாக, அவர்களை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைத்து கற்பனைசெய்து உங்கள் இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் பதில் கேட்பவர்களுக்குத் தகுந்ததாக இருக்கட்டும்:

கேட்பவர்களின் வயதுக்குத்தகுந்தாக இருக்கட்டும் உங்கள் பதில்கள். 6 முதல் 10 வயதுள்ளபவர்களுக்கு கற்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் புரியும். அதனால் உங்கள் 3 வயது பிள்ளைக்கு சொல்லும் பதிலையே 7 வயதுள்ள மூத்த பிள்ளைக்கும் சொல்லாதீர்கள்.

பதில்களைத் தள்ளிப்போடுங்கள்:

உங்கள் மகன், வழியில் பார்க்கும் ஒரு மனக்குறையுள்ள பையனைப் பார்த்தோ அல்லது ரயிலில் எதிரில் அமர்ந்திருக்கும் கண்பார்வையற்றவரைப் பார்த்து மிரளும்போதோ, ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகள் கேட்கும்போதோ - மிக அமைதியாக அவன்காதில் சொல்லுங்கள்: "கவலைப்படாதே, வீட்டுக்குபோன பிறகு இது பற்றி விளக்குகிறேன்" என்று. அதன்படி, பின்னர் வீட்டிலிருக்கும்போது, அவனுக்குப் புரியும்படி விளக்குங்கள்.

தேடுங்கள் கிடைக்கும்:

எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. உங்கள் குழந்தைகளை அவர்களுடைய சந்தேகங்களைக்கேட்க ஊக்குவியுங்கள். அவர்கள் குடும்பத்தில் யாரிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத்தெளிவுபெறட்டும். அந்த வகையில் இணையம் ஒரு பெரிய அறிவுக்கருவூலம், ஆனால் அதைப் பிள்ளைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

மொத்தத்தில், நம்மைப்போல அல்ல நம் குழந்தைகள். அவர்களுக்கு இந்த வானமே கூட இல்லை... அவர்களை புரிந்துகொள்வோம், உலகப்புரியச்செய்வோம்.

சகோதரி ஜோசஃபின் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலை நான் இங்கு என்னுடைய மொழிப்படுத்தியிருக்கிறேன். நன்றி, லோரா.

Sunday, February 13, 2005

அன்பர்தின வாழ்த்துக்கள்

அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

ஆம், சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் Valentine's Day என்பதை மற்றவர்கள் போல் வெறும் காதலர் தினம் என்று கொச்சைப்படுத்துவதில்லை - அன்பர்கள் தினம் என்று கொண்டாடுகிறது. வானொலியில் பாடல் விரும்பிக்கேட்பதனாலும் சரி, அன்பர்தினம் முன்னிட்டு உல்லாசப்பயணத்துக்கு ஏற்பாடு செய்தாலும் காதலர்கள், கணவன்/மனைவி என்று மட்டுறுத்தாமல், நாம் அன்பு செலுத்தும் அனைவருக்குமான ஒரு நாளாகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனால், அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

மேலும் Valentine's Day தொடர்பில் இந்த வாரயிறுதியில் நடந்த சில நிகழ்வுகளும், தகவல்களும்:

செய்தி 1:
ஒரு காலத்தில் நான் இங்கு சிங்கை வந்தபுதிதில் பலரும் கேட்டிருக்கின்றனர், இந்தியர்கள் பெரும்பாலும் நிச்சயக்கப்பட்ட திருமணம் செய்வீர்களாமே!? தரகர்கள் கொடுக்கும் புகைப்படம் பார்த்து துணையை முடிவுசெய்வீர்களாமே என்று. நேற்று வந்த ஒரு செய்தி சொல்வது மேட்ச்மேக்கிங்க், டேட்டிங்க் நிறுவங்களின் தேவை அதிகரித்திருக்கிறது, ஆதாயமுள்ள ஒரு வர்த்தகதுறையாக முன்னேறி வருகிறது. It's Just Lunch (இது அமெரிக நிறுவனத்தின் சிங்கைப் பிரிவாம்), Two to Tango, Lunch Actually, Hotspots.com ... என்று பல நிறுவனங்கள் அரசின் Social Development Unit (SDU)வுக்கு உறுதுணையாக இருக்கிறது. சிங்கையில் பெரும்பாலும் காதல் திருமணம்தான் என்பதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே கைபிடித்து திரிகின்றனர். அது திருமணத்தில் இணைந்து நல்வாழ்வுக்கும் இட்டுச் செல்கிறது, இடையிலும் பிரிகின்றனர். அதனால், திருமணத்தில் இணைய இயலாத சிலர், காதல் அரங்கேறாத பலர், இன்னும் சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போகும் பலர் என்று இருக்கும் இளையர்களுக்கு இதுபோன்ற நிறுவங்கள் பெரும் வரப்பிரசாதம். இந்த வகையில் அரசின் SDU முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு துணைசென்றிருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் தமிழர்களுக்கென்றும் இருக்கிறதும், சில நேரம் அத்தி பூத்தார்போல் மணமகன்/ள் தேவை வரிவிளம்பரங்கள் தமிழ்முரசில் வருவதுண்டு.

செய்தி 2:
13 முதல் 18 வயதுடைய சிங்கப்பூர இளையர்களில் ஐவரில் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதாலும், கருக்கலைப்பு இன்னபிற செக்ஸ் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாலும் ஒரு தன்னார்வ நிறுவனம் காத்திருப்பதில் அர்த்தமுண்டு - Worth Waiting For... என்ற சொற்றொடர் பதித்த பட்டைகளை(wrist bands) இளையர்களிடையே கொடுத்து தங்களுடைய அன்புக்குரியவர்களிடம் கொடுக்கச் செய்திருக்கிறது.

செய்தி 3:
மற்றொரு நடப்பில், தாய்லாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் Valentine's Day என்பது மற்றொரு சாதாரண மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உண்ணும் விருந்தாக மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 100,000 இளையர்கள் உடலுறவில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக சொல்கிறது.

இதுபோன்றவற்றில் நம் இந்திய இளையர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதும் வரும் செய்திகளில் தெரிகிறது. உலகம் போவதெங்கே...!?

Friday, February 11, 2005

சிங்கை இணையுலக சந்திப்பு - ஒரு சீரியஸ் பார்வை

நேற்று (10/02/05 - வியாழன்) சிங்கையில் நடந்த வலைப்பதிவு, இணைய உலக நண்பர்கள் சந்திப்பு பற்றிய நண்பர் மூர்த்தியின் பதிவின் தொடர்ச்சி இது.

நான் ஒரு 5 மணி சுமாருக்கு செல்லும்போது அங்கு நண்பர்கள் பலர் ஏற்கனவே சங்கமித்து பேசிக்கொண்டிருந்தனர். குறிப்பாக முனைவர் நா. கண்ணன் வட்டார வழக்கு பற்றி. நான் சென்றவுடன் அனைவரும் வரவேற்று உபசரித்து... இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். நீங்களே அன்பாய் தன்னடக்கமில்லாமல் அறிமுகம் செய்துகொள்ளுங்கள், பின் ஒவ்வொருவராய் என்றனர். எனக்கு வழக்கம்போல தொடைநடுக்கம், அதனால் நான் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் வேறொருவர் ஆரம்பியுங்கள் என்று சொல்லிவைத்தேன்:)

என்னுடைய முந்தைய பதிவில் சிவப்பெழுத்தில் எழுதியிருந்தது தவிரவும் அல்லது அதையும் மீறி காதிலும்/மனதிலும் விழுந்த விஷயங்கள் சில:

கூட்டத்தில் பரவலாகப் பேசியது... வலைப்பதிவுக்கு பின்னூட்டம் மிக மிக அவசியம். அந்த வேளையை மூர்த்தி சிறப்பாக செய்கிறார். ஆனால் பலரும் அதைச் செய்வதில்லை. ஒரு பதிவு படித்தபின் தங்களுடைய அபிப்ராயத்தைத் தெரிவிப்பது எழுதுபவருக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும் - அதை வாழ்த்தியிருந்தாலும், திட்டியிருந்தாலும் - எதுவும் எழுதாமல் செல்வதைவிட. குறைந்தபட்சம் நல்லாருக்கு, இல்லை என்று சொல்லலாம் அதற்கு தமிழ்மணத்தின் புதிய மதிப்பிட்டு முயற்சி பெரிதும் உதவும். ஆனால் அதையும் கூட பலரும் பயன்படுத்துவதில்லை.

தமிழ்மணத்தை மேம்படுத்த காசி போடும் முயற்சிக்கு, ஓரளவுக்கு கூட வலைப்பதிபவர்கள் ஒத்துழைப்பது இல்லை. அவர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியவுடன் - தன்னுடைய வலைப்பதிவில் அதை இணைத்துக்கொள்ள முற்படுபவர்கள் தங்களது எழுத்தின் தரத்தை, வலைப்பதிவின் தரத்தை உயத்திக்கொள்ள மெனுக்கடுவதில்லை. அதே போல் இங்கு வலைப்பதிவை படிப்பவர்கள் பெரும்பாலும் கணிணி மென்பொருள் துறையில் இருப்பவர்கள். அதனால், இந்த தொழில்நுட்பம் அறிந்தவர்கள் தமிழ்மணத்தில் காசிக்கு பக்கபலாமாய் இருக்க முன்வரவேண்டும். அதுதான் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.

வலைப்பதிவு ஒரு நாட்குறிப்பு என்றாலும் கூட, அது பொதுவில் வைப்பதால் ஒரு திறந்த புத்தகம். அதிலும் தமிழ்மணத்தில் இணைக்கும்போது பலரும் படிக்கிறார்கள், அதனால் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு சமூக அக்கறை வேண்டும். அதனால், நான் நினைத்ததை எழுதுவேன் என்ற ஒரு தாந்தோன்றித்தனம் கூடாது.

ஒவ்வொருவரும் தான் எதற்கு வலைப்பதிகிறோம், தன்னுடைய வலைப்பதிவை அல்லது மொத்தத்தில் தமிழ் வலைப்பதிவுகளை வருங்காலத்தில் எதை நோக்கி எடுத்துச்செல்லப் போகிறோம்... என்ற உணர்வுடன் செயல்படவேண்டும்.

நா. கண்ணன்: ஒரு காலத்துல வலைப்பதிவு ஆரம்பகாலத்துல காசிக்கு சில ஆலோசனைகள், ஊக்கம் கொடுத்திருக்கேன். ஆனால் திடீர்னு அவரே தொழில்நுட்பத்தையும் கத்துக்கிட்டு எங்கேயோ போய்ட்டார். தமிழ்மணம் என்பது தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு மைல்கள். ஆனால், அதை சும்மா நானும் பிளாக் வைச்சுருக்கேன்னு எழுதாமல் பயனுள்ள வகையில் செய்ய ஆக்ககரமாக ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

நா. கண்ணன்: முன்னொருமுறை - வலைப்பதிவு காலத்துக்கு முன்னர் eBook என்றொரு விஷயம் கொண்டு வந்து அதில் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மதம்... போன்றவற்றின் அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளித்து அதை உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் இன்றைய தலைமுறை குழந்தைகள் பங்கு கொண்டு அதைப் படித்து மேலும் அவர்களுக்கு எழும்பும் கேள்விகளை அங்கேயே இட்டு (விநாயகருக்கு ஏன் ஆனைத்தலை இருக்கு? பொட்டு ஏன் வைக்கணும்?) அதற்கு உலகெங்கும் உள்ள விஷய்ம் தெரிந்தவர்கள் பதில் கூறும் படி செய்யவேண்டும். அப்படி செய்தால் அதுதான் உண்மையான eBook ஆக இருக்க முடியும். Organic விஷயமாய் இருப்பதால் அது அப்படியே மேலும் மேலும் வளரும். அதை நமது குழந்தைகள், வருங்கால சந்ததியினர் பலன் பெறுவர். அது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவுகள், இப்போதுள்ள இணையம், தொழில்நுட்பம் செய்ய முடியும். அதை வழிநடத்த, தொழில்நுட்பத்தில் உதவிசெய்ய விரும்பும் ஆர்வளர்கள் என்னைத்தொடர்பு கொண்டால் மேலும் விரிவாகப் பேசலாம். மேலும் Tamil.Net போன்ற வலை, மடலாடற்குழுவிலும் ஏகப்பட்டம் தகவல்கள், ஆராய்ச்சி விஷயங்கள் உண்டு அதையும் யுனிக்கோடு தமிழ் கொண்டு ஒருங்கிணைக்கவேண்டும். தமிழர்கள் நமக்கே உரிய குணம், ஏதாவது இதுமாதிரி பேசினால் - அபாராம், சபாஷ் என்பார்கள் அப்புறம் போய்ண்டே இருப்பாங்க. சீரியஸ் விஷயங்களுக்கெல்லாம் ஈடுபடுவதில்லை. நான் மடலாடற்குழுவிலிருந்தும், வலைப்பதிவிலிருந்தும் அவ்வப்போது சிறிது ஒதுங்குவது இதுபோன்ற விஷயங்களால்தான். என்னைப்பொருத்தவரை - என்ன செய்யப்போகிறோம் என்ற குறிக்கோளுடன் செயல்படவேண்டும். இதுமாதிரி அவ்வப்போது இனிமையாக எச்சரித்து:) சந்திப்பை உருப்படியாக்கினார்கள். அதுபோக அங்கோர்வாட் ஆலய சுற்றுப்பயணம் முடிந்து கொரியா திரும்பும் வழியில் எங்களுடைய சந்திப்பு கேள்விப்பட்டு வந்ததால், பயண அனுபவத்தையும் அங்கு வரலாற்று சின்னம் சிதிலமடைந்திருப்பதையும், சோழமன்னர் தொடர்பிருப்பதையும், அங்கு சந்தித்த லண்டணில் வசிக்கும் இந்தியப்பூர்விக குடும்பத்தின் ஆணிவேர் தேடலையும் எடுத்துகூறினார்கள். மனிதர் சுத்த சைவம், எப்படிதான் கொரியா, கம்போடியான்னு சமாளிக்கிறாரோ!? (கேட்டால் சர்வசாதரணாமாய் சொல்கிறார், பெரும்பாலும் சமைத்துவிடுவேன். அடிக்கடி இட்லி செய்வேன் (அதைச்சாப்பிட்ட நண்பர் யாரோதான் இட்லிக்கடை வச்சிருக்கிறதா சொன்னாங்களோ!?)

நான்

திருமதி. ஜெயந்தி சங்கரின் கதைகள் பலவும், நான் என்றே தன்மையில் பேசி பலவேளைகளில் கதைபடித்துக்கொண்டிருக்கும்போதே இது ஜெயந்தி-க்கு நடந்ததோ என்ற பயம் ஏற்பட்டதாக பலரும் கூறினோம். அதற்கு ...

ஜெயந்தி:
அப்படி ஒரு பயம் ஏற்பட்டால் நான் எதிர்பார்த்ததை அடைந்துவிட்டேன். அதாவது, நான் ஒரு விஷயத்தை கேள்விப்படும்போது அதை அப்படியே உள்வாங்கி மனதுள் நினைத்து நினைத்து அசை போடுகிறேன். அது சில காலம், சில வருடம் கழித்து வரும்போது - விஷய்ம் நடந்தவர்களை முன்னிறுத்தி எழுதுவதை விட, எனக்கே நடந்ததாய் நினைந்து எழுதும்போது இன்னும் ஈடுபாட்டுடன், உள்ளுணர்வுடன் எழுத முடிகிறது.

சித்ரா ரமேஷ்:
அதெப்படி முடியும் ஜெயந்தி? நீங்க ஒரு வேலைக்காரியைப் பற்றி எழுதும்போது அது என்னதான், வேலைக்காரியாய் மாறி நான் என்று எழுதினாலும்... நீங்க ஓரளவு நல்ல நிலையிலிள்ள பெண். அந்த நடுத்தரவர்க்க பெண்ணாகவே... நான் திருடியது தவறு என்பதுபோல் உங்கள் கதை செல்கிறது. ஆனால் அந்த வறுமையில் உழலும் வேலைக்காரி, ஒருவேளை "நாம் தேவைக்காக திருடிவிட்டோம். இதிலிருந்து எப்படி தப்பிப்பது, எப்படி மறைப்பது" போன்ற சிந்தனைகள் வரலாம் அல்லவா?

அருள்:
இதுமாதிரி என்னோட அறிவியல் புனைகதையொன்றில் எழுதியிருந்தேன். ஒருவனுக்கு பெண்ணுடைய உணர்வுகளை கொடுத்து, பின்னர் எடுத்துவிட்டால் அவன் என்னவாய் இருப்பான்!?

நா. கண்ணன்:
இந்த தலைப்பு நீண்ட விவதாத்துக்குரியது. ஆண்டாள் பெண்ணாய் மாறி எவ்வளவுதான் உருகினாலும் அந்த ஆண் உள்ளே இருப்பான் தானே... அப்படியானால் எவ்வளவு சதவீதாம் ஆண்/பெண்ணாய் மாறி எழுதமுடியும்...!? அதனால் நான் - என்பது பற்றிய நிறைய விவரணைகள் தேவை...
(அன்பு: இதுமாதிரி பொருட்பட கூறினார்கள், ஏதோ சொதப்பிருக்கேன்னு தெரியுது, எங்கேன்னு தெர்ல, அது தெரிஞ்சா ஏன் சொதப்பல்:)

அப்புறம் நம்ப அருள்குமரன். அவர் அடிப்படையில் ஒரு ரசாயணப்பொறியாளர். ஒரு காலத்தில் பெயிண்ட் கலக்கிட்டு இருந்தவரு:) இப்போதும் பல்லூடகத்தொழில்நுட்பத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் கணிணித்துறையில் இப்போது முழுநேரப்பணி புரிந்துவந்தாலும் தனது முழுஆர்வத்தில், உழைப்பில் தனியாக ஏதும் கணிணிதுறைசார்ந்த படிப்பேதுமில்லாமல் முன்னேறி கலக்கி வருகிறார். அருள் ஃபிரெஞ் ஆயில் போல Flash சர்வத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து வருகிறார். அது சும்மா படம் காட்டுவதற்கு மட்டுமல்லாமல் சுனாமி கலந்துரையாடல் போன்ற தமிழ் கலந்துரையாடலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இதில் உள்ள சிறப்பு மற்றவை போல் ஏதும் நமது கண்ணியில் இறக்காமல், எழுத்துறு பற்றிய கவலையில்லாமல் எந்தக் கணிணியிலும் செயல்படும் வகையில் அமைத்திருக்கிறார். தொழில்நுட்பம், பல்லூடகம் பற்றியே சிந்திப்பதால் அறிவியல் புனைக்கதைகளும் எழுதி வருகிறார் இப்போது. இதுபோன்ற பல நுட்பங்கள் அவர்கைவசம்... ஆனால் அது அவர்கையிலேயே இருப்பது அவருக்கும் பயனில்லை, அடுத்தவருக்கும் பயனில்லை. அதனால் அவரிடம் உள்ள பல toolsகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். அதுபற்றி சுட்டிகளுடன், விரைவில் அருள் எழுதுவார் என்று நம்புவோம்.

என்னைப்பொருத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே கணிணித்துறையில் கற்று/இருந்து வருபவர்களை விட(என்னைப்போன்று:), மற்ற துறையிலிருந்து மென்பொருள்துறைக்கு மாறுபவர்கள் அதிகவேகத்துடன், ஈடுபாட்டுடன் அதைக்கற்று, புதியன அறிந்து கலக்கி எடுக்கிறார்கள். அதற்கு உதாரணம் தமிழ்மணம் காசி மற்றும் இந்த அருள்குமரன் அவர்கள்.

மற்றொரு அதிசயத்தையும் நேற்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவர்தான் தம்பி ஈழநாதன். அவரைப்பற்றிதான் அவருடைய எழுத்து/பதிவுகள் பேசுகிறதே நான் என்ன சொல்வது? அவர் தமிழ்துறையில்தான் ஈடுபடவேண்டும் ஆர்வமிருந்ததாயும் ஆனால் பெற்றொர் கட்டாயத்தால் பொறியியல்துறைக்கு வந்துவிட்டதாயும் ஆனால் இப்போது முடிந்தவரை தமிழ்துறையில் ஈடுபட்டுவருவதாயும் கூறினார். அவர் பெற்றோருக்கு மனதுள் நன்றி சொன்னேன். இல்லாவிடில் தமிழில் பட்டம் வாங்கிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் ஆசிரியப்பணி செய்திடாமல் - அதைவிட சிறப்பான உலகம் பயனுறும் தமிழ் சேவைகள் செய்துவருகிறார் இப்போது இவர் இருபத்திமூன்று இளையர் என்பது அவரிடம் பேசும்போது, அவரைப்படிக்கும்போது மறந்துவிடுகிறது. அவருடைய நோக்கம் பல தமிழ் நூட்கள், கட்டுரைகள், இதழ்கள் இருக்கிறது, வருகிறது -அதை நம் உலகத்தமிழ் மக்கள் அறியச்செய்ய வேண்டும். அதற்கு ஈழத்தமிழ் இலக்கியம் அதிகம் பரிச்சயமென்பதால் படிப்பகம் மூலம் எழுதிவருகிறேன். அதுபோல் நீங்களும் மற்ற தமிழ் நூல்கள் பற்றி எழுதுங்கள், வாருங்கள் இணைந்து செய்வோம் என்கிறார். மதியின் புத்தகவாசமும் மிகுந்த பலனளிக்க இயலும் என்று நம்புகிறார்.

இதுபோக நான் சந்தித்த இன்னொரு நபர் திருமதி சித்ரா-வின் கணவர் திரு. ரமேஷ். அவரும் பொறியியல்துறையில் இருந்தாலும் பரந்த வாசிப்பனுபவம். இணையத்தின் அனைத்து மடலாடற்கு குழுக்களுக்கும், இணைய இதழுக்கும் சென்று வாசிப்பது அவர் பேச்சில் தெரிந்தது. இதுபோன்று தமிழார்வம் உடைய இணை இணையக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அதனால்தான் சித்ரா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் கழகம், பட்டி மன்றம், கவிமாலை, இணைய உலகம் என்று கிளைபரப்ப இயல்கிறது. அவர்கள் திண்ணை, மரத்தடியோடு - இங்கு வலைப்பதிவொன்றும் தொடங்கி கலக்க வரவேற்கிறேன்:)

அப்புறம் திருமதி. ஜெயந்தி சங்கர். அவர்கள் முதன்முதலில் அறிமுகமானது/பேசியது அவள்விகடன்/தமிழ்முரசு பிரச்னையின்போதுதான். அப்போது அந்தக் கலக்கதில்தான் மிக மெதுவாக பேசுகிறார் என்று நினைத்தேன். ஆனால் நேற்று சந்திப்பின் போதுதான் தெரிந்தது, அவருடைய சாந்தம், அமைதி, தன்னடக்கம், வெட்கம்... அவர் தன்னுடைய அவள் விகடன் கட்டுரையை குறள் சொல்லி ஆரம்பித்தற்குப் பதில் தமிழ்முரசு லதாவின் தீவெளி கவிதை நூலில் உள்ள என்னாலா மைக்? கவிதை சொல்லி ஆரம்பித்திருந்தால் தப்பியிருப்பார். பிள்ளைகள் நேரம்கொடுக்கும்போதெல்லாம் எழுத்தே தவமாய் நிறைய எழுதுகிறார்.

சரி இதுவரை போதும்... எழுத இருக்கு இன்னும் பல விஷயம், ஆனால் வீடு வா வாங்குது:) அதனால் மீதியை மற்ற மக்கள் கவனிச்சுக்கோங்கப்பா.

சிங்கை வலையுலக சந்திப்பு

நண்பர் மூர்த்தி நேற்று சிங்கையில் நடந்த சந்திப்பு பற்றி சிங்கை இலக்கிய சந்திப்பு என்ற தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்தார்கள். இருந்தபோதிலும் அவர் கவனிக்க/பதிய தவறிய சில விஷயங்களை இடையிடையே இங்கு சேர்த்து பதிவை முழுமையாக்க முயற்சித்திருக்கிறேன்:)

அவருடைய முழுப்பதிவையும் அவரது அனுமதியில்லாமல் இங்கு காப்பி செய்திருந்தாலும், என்னை மூர்த்தியோ, வேறெந்த வழிப்போக்கனோ(ரோ) கேள்விகேட்க முடியாது. அப்படி கேட்க நினைப்பவர்களுக்கு இப்போதே சொல்லிவிடுகிறேன்:
"பல தமிழ் வலைப்பதிவுகள் இதைச் செய்கின்றன."

இனி மூர்த்தியின் பதிவும் ஆங்காங்கே விடுபட்ட விஷயம் சிவப்பு வண்ணத்திலும்....

நேற்று மாலை 4.30க்கு ஆரம்பித்த இந்த சதுர மேஜை மாநாட்டில் மூர்த்தி, எம்கேகுமார், அன்பு, ஈழநாதன், விஜய், ஜெயந்திசங்கர், நா.கண்ணன், அருள்குமரன், மா.கோ அவர்கள், தாமரைக் கண்ணன், செந்தில்நாதன், கவிஞர் பாலு.மணிமாறன், சித்ராரமேஷ்,
ரமேஷ், ராம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நான்*: தண்ணி (வெறும் பச்சைத்தண்ணிதேன்:)

இலக்கியம் தவிர மற்ற எல்லாம் பேசும் இலக்கிய(!) கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக்கூட்டத்தில் அனைவரும் ஆக்கபூர்வமாகவே பேசினார்கள். முதலில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கவிஞர்.பாலு.மணிமாறன் தனது கவிப்பயணத்தை தொடங்கிய காலம் முதல் மலேசியாவின் இதழ் நடத்தியது பின்னர் சிங்கை இலக்கிய வட்டத்தில் தம்மை ஐக்கியமாக்கியது பற்றியும் பேசினார். அவர்தம் பேச்சினில் கடற்கரைச்சோலை கவிமாலை பற்றியும் பிச்சினிக்காடு இளங்கோ பற்றியும் பெரியவர் க.து.மு.இக்பால் பற்றியும் நினைவு கூர்ந்தார்.

நான்*: குளோப் ஜாமூன் (இந்தக் குளோப் கொஞ்சம் சிறியதுதான். நல்ல மெதுவா, அளவான இனிப்போடு, நன்றாக பாகில் ஊறி பக்குவமாக இருந்தது. நன்றிங்க ஜெயந்தி:)

நிறையப் பேசுவார் என நான் எதிர்பார்த்த அன்பு அவர்கள் தன்னடக்கமாக தன்னைப் பற்றிச் சொன்னார்கள். இதழோரம் புன்னகை எப்போதும் சிந்தியபடியே பேசினார். தனது வலைப்பதிவு குப்பை மட்டுமல்ல...கிளறினால் நிச்சயம் ஏதாவது கிடைக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நான்*: சமோசா (கூச்சமே படாம எனக்குப்பிடித்த புதினா சட்னி, அப்புறம் ஏதோ சாஸ் தொட்டுண்டேன். வளையல் செஞ்சு போட்ற அளவு இல்லேன்னாலும், வழக்கம்போல சமோசோவுக்குரிய டெஸ்ட்டோடு இருந்துச்சு:).

அடுத்ததாகப் பேச எழுத கண்ணன் அவர்கள் சாதிகள் வாரியாக பேச்சுமொழி மாறுபடும் என்றார்கள். நான் அவரிடத்தில் இருக்காது... இல்லவே இல்லை என பழைய பல்லவியைப் பாட "இப்படித்தான் என் பதிவிலும் யாரோ பின்னூட்டமிட்டார்!" என்றார். நான் சொன்னேன் அவரிடத்தில்,"ஆமாம்...உங்களைப் போன்றே இன்னொருவர் என்மடல் என்ற வலைப்பதிவில் தென்கொரியாவில் இருந்து கண்ணன் என்று ஒருவர் எழுதினார். அவருக்கு நான் மறுப்பு மொழியிட்டேன்" என்றேன். ஒருவரை ஒருவர் யாரென்று தெரிந்துகொள்ளாமலே பேசப்போக மற்றவர்கள் நகைத்தனர். பின்னர் புரிந்துகொண்டோம். பின்னர் பேச்சு வட்டார வழக்கு பற்றித் திரும்பியது. பிராமண பாஷை பற்றியும் பேசினோம். பல வட்டாரங்களில் பேசப்படும் தமிழ் மொழியைப் பற்றி அலசினோம். அதன்பின்னர் கண்ணன் அவர்கள் தமது ஆரம்பகாலம்(தமிழ்.நெட்) முதலான தமிழ்ப்பணியைப் பற்றி விவரித்தார்கள். தமிழ் இணைய மாநாடு பற்றியும் தமிழ் எழுத்துரு கண்டுபிடித்த தமது முன்னாளைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். சிதிலமடைந்து கிடக்கும் அங்கோர்வாட் கோயிலைப்பற்றிய தனது வேதனையை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். வரலாற்றுக் கட்டுரைகளை இன்னும் தமிழ்.நெட்டில் இணைக்கும் தமது முயற்சிகளைப்பற்றியும் சொன்னார்கள்.

நான்*: குட்டி வளைய முறுக்கு, மிக்ஸர் (கண்ணன் சார் பேச்சு சுவாராசியத்தில் ரொம்ப நல்லாருந்துச்சுது, ஹால்டிராம் மிக்ஸர் கூட. தோசா கார்னர் முறுக்கு அருமை, நமக்குப்பிடிச்ச ஐட்டம்னுதானே அத வாங்கினேன்:)

அதன்பின் தோழர் செந்தில்நாதன் பேசினார். இலக்கியத்தில் தமக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட அவர் தாம் நல்ல ஒரு பார்வையாளர் மட்டுமே என்றார். அன்றாடம் தாம் வலைப்பதிவுகள், மரத்தடி, ராயர் போன்ற குழுமங்களுக்கு வருவதாகவும் ஆனால் கருத்துக்கள் எதுவும் எழுதுவதில்லை என்றும் சொன்னார். அவரை வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து எழுதுமாறு எல்லோரும் அன்போடு கேட்டுக் கொண்டோம்.

நான்*: சீடை சைஸ்ல ஆனா சதுரவடிவில கிடைக்கும் கிடைக்கும் ஒரு இனிப்பு வஸ்து, பிஸ்கட்னு கூட சொல்லலாம் (அதுவும் தோசா கார்னரில் கிடைக்கும் என்னோட ஃபேவரிட்...:)

அடுத்து பேச எழுந்த அல்வாசிட்டி விஜய் தான் அமெரிக்காவில் பணிபுரிந்தபோது நண்பர்களோடு சேர்ந்து அல்வாசிட்டி ஆரம்பித்ததாகச் சொன்னார். தற்போதைய வலைப்பதிவிலும் அவர்கள் எழுதுவதாகவும் ஆனால் தாமே நிறைய எழுதுவதாக சொன்னார். அல்வா யாருக்குக் கொடுத்தீங்க என்று சித்ரா கேட்க, "இப்போது அவரின் பேச்சே அல்வாதான்" என்று கண்ணன் அவர்கள் சிரிக்க அனைவரும் சிரித்தோம்.

நான்*: எனக்குப்பிடித்த மசால் கடலையை யாராவது பிரிப்பாங்களான்னு சீரியஸா பார்த்துட்டிருந்தேன். (அப்படி அப்பப்போ சீரியஸ் போஸெல்லாம் கொடுத்துட்டு இருந்தேன்... சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும்போது மட்டும்தேன் சிரிச்சு/வழிஞ்சுட்டிருந்தேன்.... அதெ பெர்சா மூர்த்தி 'இதழோரப் புன்னகை' ன்னு கவிதை மாதிரி எழுதியிறுக்கிறார், எனக்கு தற்பெருமை பிடிக்காதென்ற உண்மை தெரிந்தும்:)

ஏதாவது கிராதகமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட மூர்த்தி எழுந்து "தான் ஒரு கணினி வன்பொருள் பொறியாளன் என அறிமுகம் செய்துகொண்டு 'எழுத்தைத் தவிர மற்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதாக'ச் சொன்னார்! மற்றவர்களுக்கு வியப்பு. தாம் நல்ல படைப்புகளாகத் தருவதில்லை என்று ஒப்புக்கொண்ட அவர் அன்புவைபோன்ற நல்ல பதிவுகள் எழுதுவது மிகச் சிலரே என்றார். அவர்தம் பேச்சில் பின்னூட்டம் எப்படி ஒரு எழுத்தாளருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது என காரசாரமாகப் பேசினார். பின்னூட்டம் என்பது ஒரு எழுத்தாளருக்கு மிகவும் அவசியம் என ஒருமனதாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது! இடையில் குறுக்கிட்ட சித்ரா ரமேஷ் அவர்கள்,"வழிப்போக்கன்" பற்றிய பழைய நினைவுகளைக் கிளறினார். அதற்கு கமல்மேல் தனக்கு வெறுப்பு இல்லை என்றும் கமலுக்குபின் அரவிந்தசாமி, மாதவன் என்றதாலேயே விட்டுக் கொடுக்காமல் வாதிட்டதாகச் சொன்னார். அதன்பின் தமது முத்தமிழ்மன்றம் பற்றியும் சொன்னார்.

நான்*: மசால் கடைலை போலவேதான், எனக்குபிடித்த அந்தக் காராச்சேவும். கடைசிவரக்கி பிரிச்சே தொலைக்கல... (வருத்தந்தாண்ணே.... நாமளே எல்லாத்தையும் பிரிக்க முடியுமா!?). இதுல்ல இன்னும் உச்சம்... குமார் இருந்த எல்லா கவரையும் (வேணும்ணே)
தூக்கிப்போட்டுட்டு - கடைசியா பிரிக்காத சேவையும், கடலையையும், நீங்களே எடுத்துட்டுப்போய்டிரீங்களா அன்புன்னு ஒரு கடைமைக்கு கேட்டார். நானும், பராவல்ல நீங்க ரூம்லதான இருக்கிறீங்க நீங்க எடுத்துட்டுபோங்கன்னு சொன்னேன் (பெரிய தானப்பிரபுவாட்டம்). ஒண்ணும் பிரிச்னையில்லேயேன்னு பேச்சுக்கு ஒரு கேள்வி கேட்டுட்டு (என்னோட பதிலுக்கூட காத்திருக்காம) பேக் பண்ணிட்டார். (குமாரு ... நல்லா சாப்பிட்டு நல்லா இருங்கோ.... இது வாழ்த்துப்பா, வயித்தெல்லாம் ஒண்ணுஞ்செய்யாது, டோண்ட் ஒரி:)

அடுத்ததாகப் பேசிய ரமேஷ் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார். இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர். அவர்தம் பேச்சில் சாருவும், ஜெயமோகனும் அடிக்கடி வந்துபோனார்கள். சிங்கையில் நடக்கும் அனைத்து இலக்கியக் கூட்டங்களிலும் இவரை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டது இதுதான் முதல்முறை.

நான்*: பிரிக்காத மசால் கடலையயும், காராச் சேவையும் பார்த்துண்டே - மீண்டும் ரிங்க்முறுக்-ஸ்

சித்ரா ரமேஷ்! இவரைத் தெரியாத சிங்கப்பூர் தமிழர் இருக்கமுடியாது. ஞாயிறு தமிழ்முரசைத் திறந்தால் இவரின் படைப்பு ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். கவிதை, கதை, கட்டுரை என எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். திண்ணையில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தோழியர் பதிவில் இவரின் பின்னூட்டங்களை நிறைய பார்க்கலாம். கூச்சமின்றி அனைவரோடும் நன்கு கலகலவெனப் பேசினார். இவரை வலைப்பூ உலகத்துக்கு வருக வருக என வரவேற்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

நான்*: ஆறிப்போன டீ (சாரி... பேச்சு முறுக்கில்(இது வேற முறுக்குண்ணே) நான் ஆறவைத்த டீ:)

தன்னடக்கமாகப் பேசினார் மூத்த சகோதரி ஜெயந்தி. தனது கதைகள் பற்றி சொன்னார். தமது கதைகளில் நான் என்று ஆரம்பித்து எழுதினால் அது உண்மையில் நான் அல்ல என்றும் தாம் அந்த கதாபாத்திரமாகவே மாறி தம்மை அந்த இடத்தில் வைத்துப் பார்த்து கதை எழுதுவதால் அக்கதைகளில் உயிரோட்டம் இருப்பதாகக் கூறினார். அதன்பின்னர் சிங்கப்பூர் இளையர்பற்றிய தமது கட்டுரையின் சிதைவு பற்றியும் விகடன் ஆசியர்குழுமம் பற்றியும் தனது கசப்பு அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார். எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறார். நல்ல சிந்தனைவாதி. அற்புதமான பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்!

நான்*: அந்த குட்டி பிஸ்கட்

ஈழநாதன் தனது எழுத்து அனுபவங்களை வரிசைப்படுத்துமுன் தாம் இலக்கிய உலகில் சின்னவர் என்று நகைப்பூட்டினார்.
அதன்பின்னர் தனது கவிதைகள், படிப்பகம், சலனச்சுருள் பற்றிச் சொன்னார். அவர்தம் பேச்சில் பத்மநாப அய்யர் பற்றியும் நிறையச் சொன்னார். அய்யர் என்பதைப் பலர் தவறாகப் பேசியதாகச் சொன்னார். தச்சு வேலை செய்பவர் தச்சர் என்பதுபோல புரோகிதம் செய்பவர் அய்யர். எனவே அது தவறில்லை என்றார். உடன் குறுக்கிட்ட கண்ணன் அவர்கள் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்ற தனது அனுபவத்தை விளக்கினார். கமல் போன்றே பார்ப்பணீயத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர் அய்யர் என்றார். ஈழத்து இலக்கியங்களைப்பற்றியும் இலக்கிய வாதிகளைப் பற்றியும் நிறையப் பேசினார்.

நான்*: ஹால்டிராம் மிக்ஸர்

வெள்ளை மனதோடு முத்துப்பல் காட்டி அடிக்கடி சிரிக்கும் எம்கேகுமார் அவர்கள் தாம் வெண்ணிலாப் பிரியன் என்ற பெயரில் எழுதிய கவிதைகள் பற்றிச் சொன்னார். தனது வலைப்பூ பற்றியும் தமிழோவியத்தில் தாம் எழுதும் "மஜூலா சிங்கப்பூரா" தொடர் பற்றியும் சொன்னார். சிங்கப்பூரைப்பற்றி இதற்கு முன் எழுதிய தோழி ஜெயந்திசங்கர் அவர்களே பாராட்டினார். இது நல்ல தொடர் என்று நாங்கள் அனைவரும் பாராட்டினோம். தோழி ஜெயந்தியின் கட்டுரையையும் குமாரின் கட்டுரையையும் கண்ணன் அவர்கள் தமது வலையில் ஏற்றி பத்திரப்படுத்த அனுமதி வேண்டினார்கள். தோழி அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். குமார் அவர்களின் கட்டுரை இன்னும் முழுமை பெறவில்லை. பெற்றதும் ஒப்புக்கொள்வார்.

நான்*: அதே முறுக்கை எப்படித்தின்றதுன்னு... அதைக்கொஞ்சம் எனக்குப்பிடித்த புதினா சட்னில டிப் பண்ணி கொஞ்சம்....

தான் கணினி படிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே ஆரம்பித்த அருள்குமரன் தனக்கும் கணினிக்கும் உண்டான தொடர்பு பற்றி ஆரம்பம் முதல் விளக்கினார். தாம் செய்த அசைபடங்கள், மேக்ரோமீடியா ப்ளாஷ் படங்கள் பற்றி நிறைய சொன்னார். சென்ற தமிழ் இணைய மாநாட்டில் தமக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றியும் விளக்கினார். தாம் செய்த, செய்து கொண்டிருக்கும் மென்பொருள் முயற்சிகளை அச்செடுத்து கொண்டு வந்திருந்தார். தாம் கண்டுபிடித்த வித்தியாசமான தூதுவர் முயற்சிகளையும் தமிழ்மென்பொருள் உள்ளீடு இல்லாமலேயே தூதுவரில் தமிழில் எழுத முடியும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். ஆச்சர்யத்தில் வாய்பிளந்தேன். முழு ஈ தங்குதடையின்றி உட்சென்று வந்தது. இதுபற்றி தனியாக பட்டறை ஒன்றை நடத்துவது என்று தீர்மானித்தோம். நா.கண்ணன் அவர்கள் ஊக்கமளித்தார்.

நான்*: திடீர்னு சித்ரா ரமேஷ், ஜெயந்தி எதோ தாங்களுக்குள்ளே பேசிண்டே எழுந்து நடக்க ஆரம்பிக்க, கண்ணன் சாரும் கொஞ்சம் புரிஞ்சா மாதிரி புது எடம், எங்கிருக்கோன்னு பின்னாடியே போனார். அருள் பேசிண்டிருக்கும்போது கூட்டம் கலைஞ்சதால கொஞ்சம் மிரண்டார், ரமேஷ் பயோ-பிரேக்னு ஏதோ சொன்னதால அப்படியே சிரிச்சுண்டு எல்லாரும் எழுந்து காலார அந்தப்பக்கம் நகண்டார்கள். அப்பக்கூட நான் எழுந்திருக்கிலையே..... கடைமையே கண்ணாய், விட்டகுறை தொட்டகுறையைத் கவனித்தேன்:)

அடுத்து பேச எழுந்த தாமரைக்கண்ணன் அவர்கள் ஏழாவது அறிவு பற்றியும் எட்டாவது அறிவு பற்றியும் பேசினார். அதற்கு கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும் துணைக்கு அழைத்தார். "எங்கே போய்விடப்போகிறீர்கள். அகத்தியர்தானே..நான் அங்கேயும் இருக்கிறேன்..விரைவில் வருகிறேன்" என விஜய் காதிற்குள் மூர்த்தி மெல்ல கிசுகிசுத்தார்! எக்ஸ்ட்ரா பவர் பற்றி உங்களுக்கு எப்படித்தெரியும் என சித்ரா அவர்கள் கிடுக்கிப்பிடி போட தமக்கு கற்பனையில் தெரியும் என்றார்! அகத்தியரில் தாம் எழுதிவரும் கட்டுரைகள் பற்றி விளக்கினார். தமது பேச்சினூடே தனக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்த மா.கோ அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

நான்*: என்ன செய்றது ... மீண்டும் பச்சத்தண்ணி.

சிங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மா.கோ அவர்கள் அடுத்து பேசினார். முரசு அஞ்சல் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் தமது குளோபல் தமிழ் இணையம் பற்றியும் சொன்னார். தமது பேச்சில் தமிழ் உலகம் பழனி அண்ணாவை நினைவு கூர்ந்தார். ராணுவத்தில் காப்டனாக இருந்து மேஜர் ஆனது பற்றியும் சிங்கையின் இலக்கியப் பயணம் பற்றியும் விளக்கினார். அவர் தனது பேச்சில் நியூமராலஜி பற்றிச் சொன்னார். ஒருவரின் பெயர் கொண்டே அவரின் குணநலன்களைச் சொல்லிவிடமுடியும் எனவும் பிறந்த தேதி கொண்டும் தன்னால் எல்லாம் கூறமுடியும் என்றும் சொன்னார். ஒன்றுமே இல்லாமல் ஒருவரோடு பேசிப்பார்த்தும் தன்னால் அவர்களின் பண்புகளைக் கூறமுடியும் என்றும் ஆணித்தரமாகச் சொன்னார். தமிழ் இலக்கிய உலகில் தமக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார். என்ன செய்ய? வேதனையாகத்தான் இருந்தது.

நான்*: மூர்த்தி காலையில் வேலைக்குபோகணும், கிளம்புறேன் என்றார். அப்புறம் நாங்கெல்லாம் எங்கோ போறோம்னு நினைச்சேன்:) அப்புறம் பார்த்தா தலிவரு இப்போ மலேசியா/ஸ்குடாய் ஜொகூரில் இருக்காராம். வாரயிறுதியில் மட்டும்தான் இங்கு சிங்கப்பூர் விஜயமாம்.

இப்போதுதான் எனக்குப்பிடித்த ஒரு மிக மிக சந்தோசமான ஒரு அறிவிப்பை சித்ரா ரமேஷ் வெளியிட்டார். இருங்க... அப்படியே எல்லாரும் சரவண பவன் போய் டிஃபன் சாப்பிடலாம்.... ஆஹா... இன்பத்தேனாய் பாய்ந்தது.

மொத்தத்தில் இந்த இலக்கிய சந்திப்பு பயன்மிக்கதாய் அமைந்தது எனலாம். நிச்சயம் வருவார் என நம்பியை நம்பினோம். அவரும் மானசாஜென் என்றழைக்கப்படும் ரமேஷ்சுப்ரமண்யம் அவர்களும் நட்டு என்றழைக்கப்படும் பனசை நடராஜன் அவர்களும் தோழி ரமாசங்கரன் அவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வருத்தத்தைத் தந்தது. அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட வேலைப்பளுவால் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த சந்திப்பில் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நான்*: இதுவரை உட்கார்ந்து எடுத்தது போதாதுன்னு நின்னுண்டு புகைப்படம் எடுத்துட்டு இருந்தாங்க. இருந்தாலும் நம்ம கண்ணு அந்த பிரிக்காத மசால கடலை மற்றும் காராச்சேவு மேல்தான். அப்போ எனக்கும் குமாருக்கும் நடந்த டயலாக்கையும் இறுதியில் (அவரே) செய்துகொண்ட ஒப்பந்தத்தையும்தான் மேலே படிச்சிட்டீங்களே:)

சிற்றுண்டி தயார் செய்த சித்ராரமேஷ் அவர்களுக்கும் இடம் தந்து உதவிய அவரின் தம்பி ராம்ஜி அவர்களுக்கும் மிகுந்த நன்றி கூறி அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நேரமாகிவிட்ட காரணத்தால் நானும், மாகோ அவர்களும் தாமரைக் கண்ணன் அவர்களும் வெளியேறினோம். மற்றவர்கள் அனைவரும் இரவு உணவில் கலந்துகொண்டார்கள். சிங்கை நண்பர்கள் சந்திப்பு மட்டுமே என நினைத்திருந்த இந்த கூட்டம் உலகக் கூட்டமாகிவிட்டது. நான் மலேசியாவில் இருந்து சென்றிருந்தேன். கண்ணன் அவர்கள் தென்கொரியாவில் இருந்து வந்திருந்தார்கள். இரவு 8.30 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது. நான்கு மணி நேரமும் எனது கேமராவை மறந்து(!) அமர்ந்திருந்த என்னால் புகைப்படம் இணைக்க முடியவில்லை. தோழர் எம்கேகுமார் இணைப்பார்.

நான்*: மூர்த்தி, ஜெயந்தி, மாகோ, தாமைரக்கண்ணன், பாலு அல்லாம் கிளம்பிட்டாங்க. அப்படியே பொடிநடையா சரவண
பவனுக்கு நடையைக்கட்டினோம். அங்கு ஸ்வாக பண்ணியது: மசால் தோசை சொல்லி இல்லாததால் கிடைத்த 'நெய் ரோஸ்ட்', டிக்ரீ காஃபி, வெங்காய பஜ்ஜி. அப்புறம் எதிர உட்கார்ந்து எனக்குப்பிடித்த நாணையும், மட்டர் பன்னீரையும் அருள் ஒருகை பார்த்துக்கொண்டிருந்தார். அதையும் பார்த்துக்கொண்டே எனக்குக் கொடுத்த பணியை இனிதே நிறைவு செய்தேன்.

இப்போ சொல்லுங்க நீங்களே... என்னோட இத்தனை வேளைக்கிடையே, நான் பேசலைன்னு மூர்த்தியோ மற்றவரோ வருத்தப்பட்டால் நான் என்ன செய்யமுடியும். அவர்களுக்கு இந்த வலைப்பதிவு(லகம்) தக்க பதில் சொல்லும் என்று கூறிவிட்டு கடமையா அடுத்த சந்திப்ப எதிர்நோக்கி காத்திருக்க வேண்டியதுதான்.

எனிவே... மூர்த்தி, சித்ரா, குமாரு, ஜெயந்தி மற்றும் அனைவருக்கு ரொம்போ தேங்க்ஸ். இதுமாதிரி அடிக்கடி மீட் பண்ணுங்க, நமக்கு சும்மா ஒரு மெயில் தட்டினா ஓடியாந்து நிப்பேன்:)

இதுதவிரவும் மக்கள் சீரியஸா பேசிண்டிருந்த பல விஷயங்கள் காதில்ல விழுந்துச்சு அதை இன்னொரு பதிவில்.

பி.கு:
* நான் -

நான், இலக்கணத்தில் ஒருமை, நடைமுறையில் பன்மை. நான் எனப்படுவது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம் - கவியரசு வைரமுத்து.

என்னுடைய கதையில் வரும் 'நான்' எல்லாம் நானில்லை. அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி அந்தப்பாத்திரமாக மாறி நானாகவே பேசும்போது, அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளை இன்னும் சிறப்பாக கொண்டு வர இயல்கிறது - சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்.

இதுல்ல வர நான்- லாம் நாந்தாங்க. அந்த கடைசி நாண் தவிர:)