Friday, November 19, 2004

சவம்

உயிரெழுத்து கவிதை குழுமத்தில் இட்ட நண்பர் கிரிதரின் கவிதையிது.

தவறிவிட்டவரைப் பற்றிய
இந்த கவிதையை
தவற விட்டவர்களுக்காக இங்கே.

சவம்
***

தண்ணீர்ப் பஞ்சத்திலும் தாராளக் குளியலிட்டு
பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணி போர்த்து
காலமும் கண்டிராத சந்தனம் சவ்வாது தீற்றி
படையலுக்கு மட்டுமே பூசிவந்த திருநீரும் அணிந்து
அடுத்தவீடு தாராளமாய் தந்த ஊதுவத்தி மனம் கமழ
அடகுக்கு பயந்து பரணேறிய பித்தளை விளக்கு ஓளிர
திட்டின வாய்களின் அதிசய அழுகைகள் மத்தியில்
போர்வையில் சேதம் மறைத்த நாற்காலியில்
கம்பீரமாய்
புகையுமுன் புகைப்படத்திற்கு காத்திருக்கிறது
சவம்!!

கிரிதரன்

Friday, November 05, 2004

கும்மியடி... கொட்டிக்கும்மியடி...

சமீபத்தில் வந்த
எனக்குப்பிடித்த
இனிமையான
அழகான
அசிங்கமான
நளினமான
வைர
முத்து
பாடலொன்று...

கேட்டிருக்கிறீங்களா...!?

Sunday, October 24, 2004

வலைப்பதிவுகளின் வழி நான் கற்றதும் பெற்றதும்...

சிலகாலமாகவே நம்மில் பலரும் சொல்லிக்கொண்டிருப்பது, முன்னர் திரு. சுஜாதா மட்டுமே எழுதி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் போய், இன்று வலைப்பதிவுகளின் மூலம் பல விடயங்கள் தெரிந்தகொள்ள முடிகிறதென்பது. அந்தவரிசையில் இந்தவார கற்றதும் பெற்றதும் தொடரில் வந்துள்ள சூப்பர்மேன் கிறிஸ்டோஃபர் ரீவ் பற்றியும், பிரெஞ்சு தத்துவஞானி ழாக் டெர்ரிடா பற்றிய விஷயமும்.

இது தொடர்பில் பத்ரி முன்னர் எழுதியிருந்த பதிவைத் தேடி இங்கே முடியவில்லை, மன்னிக்கவும். இந்த கட்டுடைக்கும் (deconstruction of the text) வித்தை பெட்டையின் சில பதிவுகளிலும் இருப்பதாகக் கூட குறிப்பிட்டிருந்தார். அனைவருக்கும் நன்றி.

Friday, October 22, 2004

சீரியஸ் மேட்டர்...

என்ன பண்றது அப்பப்போ ஏதேதோ பதிப்பதின் விளைவு... இந்த தலைப்பு.

சில வாரங்களுக்கு முன்பு திரு. பா.ராவும் திரு. எஸ்.ராவும் சிறந்த நூறு நூல்கள் என்று அவர்கள் படித்த அவர்களுக்கு பிடித்த நூறு நூட்களை பட்டியலிட்டிருந்தார்கள். நண்பர் ஈழநாதன் தனது படிப்பகத்தில் பல நல்ல ஈழத்து நூல்களை அறிமுகம் செய்துவருகிறார்.

இதுபோன்று அல்லது அதைத்தொடர்ந்து வேறு எதாவது நல்ல புத்தகங்கள் பட்டியல் ஏது வெளியிட்டார்களா? ஏதாவது சுட்டி இருந்தால் சொல்லுங்கள். அதுதவிர நீங்களும் உங்களூக்குப் பிடித்த நூல்களை இங்கே பின்னூட்டத்திலே சொல்லுங்களேன். ஏற்கனவே பட்டியலில் இருந்தாலும் பரவாயில்லை, நீங்களும் திரும்ப சொல்லும்போது அதற்குறிய வாக்கு/அபிமானம் கூடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். இந்தப்பட்டியலை திரட்டி மொத்தமாக ஒரே பட்டியலாக பதிக்கலாம்.

தமிழ் புத்தங்கள் மட்டுமல்ல உங்களின் விருப்பம் ஆங்கிலமாக இருந்தால்கூட வரவேற்கப்படும். நல்லபுத்தகங்களை, அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய, நல்ல, இனிமையான புத்தகங்களை ஒன்றுகூடி திரட்டுவோம்.

இதன் பிண்ணனி இரண்டு:
1) நான் வருடத்தொக்கொருமுறை(யாவது) சில நூட்கள் இந்தியாவிலிருந்து வாங்கிவருவது/வரவழைப்பது வழக்கம். அந்த முறை இந்த தீபாவளியின் போது வருகிறது. (சில நண்பர்கள் ஊர் சென்று திரும்புவதால்)

2) நண்பர் ஈழநாதன் முன்னொருமுறை அழைப்புவிட்டிருந்தார், யாராவது ஒத்துழைத்தால் படிப்பகம் போன்று தமிழகத்திலிருந்து வரும் நூட்களையும் பட்டியலிடலாமென்று. அதற்கு இது ஒரு முதல்படி.

அதனால் உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை விரைவில், மிகவிரைவில் எதிர்பார்க்கிறேன்.


சிரிப்பே அறியா சிடுமூஞ்சி...

சிரிப்பே அறியா சிடுமூஞ்சியை நினைத்து இன்று குமாரும் நேற்று ராஜாவும்
இன்னும் சிலரும் மிக வருத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் எனக்கென்னவோ அது ஒரு நகைச்சுவையான, மக்களை ஈர்க்கும் விளம்பரமாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுமே தவிர அதையும் மீறி அதில் தோன்றும் 'பிறன்மனை' பற்றியெல்லாம் என்னைப்போலவே, பெரும்பாலானவர்களும் சிந்திக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. வேண்டுமானால் லியோனி வகை பட்டிமன்றங்களில் 'பிரமாதம்ம்ம்...' என்பதுபோல் இதுவும் சொல்லிக்காட்டப்படும். வேறேதும் அதிர்ச்சியடையுமளவு இதில் அதிகம் ஒன்றுமில்லை.

ஆபாசமான மற்ற விளம்பரங்களைப் பற்றி அல்ல என்னுடைய கருத்து. இதுதான் இதுக்குத்தான்!

அதுபோக இன்னொருவகையில் பார்த்தால், நம் ஊரில் (ஏன் உலகத்தில் பல இடங்களிலும்) இருக்கும் சாதி/மத/சொந்தம்/பணத்துக்காக செய்துகொள்ளும் இதுபோன்ற அதிக வயதுவித்தியாசமான திருமணம் செய்பவர்களுக்கும், அதற்கு துணைபோவர்களுக்கும் கொடுக்கும் சாட்டையடியாக தோன்றுகிறது.

மேலும், இப்போதெல்லாம் பலரும் வேலையில் மூழ்கி குடும்பத்தை, குறிப்பாக மனைவியை/துணையை மறந்து திரியும் இதுபோன்ற சிடுமூஞ்சிகளுக்கு கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.

சரி... சரி... நிறுத்திட்டேன்.