Tuesday, May 24, 2005

வேணுமா... வேணாமா....

தமிழ்... தமிழ்... தமிழ்....

என்று (வலைப்பதிவு)உலகில் எங்கு சென்றாலும் ஒலிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ, அசிங்கமோ தமிழில் ஒலிக்கிறது. தமிழைப் பழித்தாலும் இங்கே வருகிறது, தமிழைப் பாராட்டினாலும் இங்கே வருகிறது. கடந்த சிலவருடங்களாக இணையத்தின் மூலமும், குறிப்பாக இப்போது வலைப்பதிவுகள் மூலமாகவும் முன்னெப்பேதும் இல்லாத அளவு தமிழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் கணிணி மென்பொருட்களை தமிழ்படுத்துததல், தமிழ் வழி கல்வி, தமிழிலேயே அனைத்தையும் படிக்கவேண்டும் போன்ற பல கருத்தாடல்கள் இங்கே.

அதுக்கென்ன இப்போ...
இதான் விடயம்.... ஒரு சந்தேகம்:

சீனாவிலும் (கொரியா, தைவான், ஹாங்காங்), ஜப்பான் போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில், கக்கூசில் எங்கும் இருக்கிறது. ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது என்ற ஒரு கூற்று ஒரு புறமும், அவர்கள் அவர்கள் மொழியிலேயே படிப்பதால் - ஆங்கிலமே தெரியாமல் சிரமப்படுகின்றனர் என்பது இன்னொருபுறமும் தெரியவருகிறது.

இங்கு சிங்கை நூலகத்துக்குச்சென்றால் மாண்டரின்(சீன) மொழியில் எல்லா வகையிலான நூல்களும் வெளிவருகிறது.

Image hosted by Photobucket.com

எங்களுடைய நிறுவனத்தின் சுசோவ் (Suzhou - China) பிரிவிலிருந்து வருபவர்கள் கணிணியிலிருந்து பார்ப்பதெல்லாம் சீன மொழியில்தான் வருகிறது. ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வருத்தப்படுகின்றனர். இதே நிலை ஜப்பானியர்களுடன் தொடர்புகொள்ளும்போதும்.

மெக்ரா-ஹில் போன்ற பிரபல பதிப்பகங்களே புத்தகங்களை வெளியிடுகின்றன. என்னைப்பொருத்தவரை தனிப்பட்டமுறையில் இதுபோன்று நானும் எனக்குத்தெரிந்த தமிழில் படித்துப்புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இதுபோன்ற நிலையை நோக்கித்தான் நாம் முன்னேறுகிறோமா, இதற்காகத்தான் இந்தப் போராட்டங்களா?

Image hosted by Photobucket.com

சீனா, ஜப்பான் போல் இந்தியா மன்னிக்கவும் நம் தமிழகம் (மொழியில் ) ஆவது நல்லதா, கெட்டதா - வேணுமா, வேணாமா?

Monday, May 16, 2005

(என்னுடையதல்லாத) பழைய பதிவுகள்...

ஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்

'அப்பா, ஐ டொன்ட் வான்ட் டு பி எ கேர்ல்' என்று என்னிடம் வந்து அழுதது குழந்தை. விசாரித்தேன். என் மகளின் பள்ளித்தோழி, அவளும் ஒரு இந்தியரின் குழந்தை, அவள் வீட்டில் ஒரு தம்பி பிறக்கப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தன் அம்மாவின் வயிற்றுக்குள் இப்போது இருக்கிறான் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அம்மாவின் வயிற்றை கத்தியால் வெட்டித் தான் குழந்தையை எடுப்பார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறாள். அதிலிருந்து ரெண்டு நாளைக்கு கண்ணில் மிரட்சியுடன், இதே புராணம். பெரிதானால் தன் வயிற்றையும் வெட்டுவார்கள் எனவே நான் பெண்ணாக இருக்க விரும்பவில்லை. இது எப்படி இருக்கு?.....
.......
......
.....

தமிழும் மற்ற மொழிகளும்...

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பார் பாரதியார். இன்னொரு இடத்தில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என்பார் அவரே. எது உண்மையில் சிறந்த மொழி? ஒவ்வொரு மொழியும் அதை நன்கு அறிந்து ரசிப்பவருக்கு இனிமைதான். ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் போட்டி நடத்துவது, 'என் அம்மாவின் பாசம் உயர்ந்ததா, உன் அம்மாவின் பாசம் உயர்ந்ததா' என்று கேட்பதற்கு சமம். முதலில் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது என்பது வீண்வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. 'கணினிக்கு சம்ஸ்க்ருதம் ஏற்றது, இசைக்கு தெலுங்கு ஏற்றது, இதுக்கு இந்தி ஏற்றது, அதுக்கு ஆங்கிலம் ஏற்றது' என்பதெல்லாம் சரியெனப்படவில்லை.

எது ஒருவருக்கு சமூக அடையாளம்?

என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் சமூகம், பொழுதுபோக்கு, சமயம், அரசியல் என்ற பல விஷயங்களில் ஒருவர் தன் மொழிப் பின்புலத்துக்கேற்பத் தான் பங்கேற்கிறார். இங்கு ஒன்றை அவதானிக்கலாம்: ஒரு நாட்டில் பிறந்தவரை அடையாளப்படுத்தும்போது அவர் நாட்டையோ, மதத்தையோ, நிறத்தையோ யாரும் முன்னிறுத்துவது இல்லை. ஒரு ஆங்கிலேயரை, He is an Englishman என்கிறார்கள், He is an Englandman என்பதில்லை. அதே போல், French, Dutch, Polish, Spanish, Italian, Chinese, Japanese...என்றுதான் சொல்கிறார்கள். முறையே, Franceman, Netherlandman, Polandman, Spainman, Chinaman, Japanman.. என்று சொல்வதில்லை. இது ஏனென்றால், ஒருவர் மதம் மாறலாம், குடியுரிமை பெற்று வேற்று நாட்டு குடிமகனாகலாம், அவரால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரே அடையாளம் தாய்மொழி. அதன் காரணமாகவே இவ்வாறு என்றும் நிரந்தரமான அடையாளத்தால் ஒருவரை அழைப்பது. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, இக்கருத்துடன் ஒத்துப் போனாலோ போகாவிட்டாலோ, தமிழர் குடும்பத்தில் பிறந்து தமிழரோடு வளர்ந்தவர் அனைவரும் சாகும்வரை தமிழரே. புலம்பெயர்ந்தோருக்கும் இது பொருந்தும்.

தமிழ் வாழ ஏதும் செய்ய வேண்டுமா?

'நாம் தமிழுக்கு என்ன செய்தோம்' என்பது அவ்வளவு முக்கியமான கேள்வியல்ல. இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் சுற்றமும் நட்புமே சுருங்கிக் கொண்டு வருகையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் தேவையும் இருக்கிறது? ....
..........
..........
.........

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking)

அன்று ஒரு நாள் Broadband Wireless Router ஒன்றை வாங்கியதில் கிடைத்த அனுபவங்களை (லாபங்களையும்!) எழுதியிருந்தேன். ஒரு ஆர்வத்தில் அதை வாங்கப் போய் அதில் உள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களில் லயித்துப் போய் நிறையத் தெரிந்தும் கொண்டேன். அதில் சிலதை இங்கு பதிக்கிறேன், இதில் புதிதாய் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது பிரயோசனப்படும் என்பதால்................
...............
............

=================================

இதெல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி இருக்குதுன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா... நீங்கள் வலைப்பதிவில் பழம்தின்று எதையோ போட்டவர். அதனால் உங்களுக்கு ஒரு சலாம்... போய்ட்டு வாங்கண்ணே....

அப்படியில்லாத என்னைப்போன்றவர்களுக்காக இங்கே....

"தமிழ்மணம்" காசி இப்போதான் அத்திபூத்தார்போல் எழுதுகிறார்... அவர் அந்தக் காலத்தில் இதுபோன்ற பல பதிவுகள் எழுதியிருக்கிறார் (என்பது எனக்கும் இன்றுதான் தெரியும்:) மேலே படிக்க, அவருடைய பழைய வீட்டுக்குச் செல்லுங்கள்:
காசியின் பழைய பதிவுகள்...

Saturday, April 30, 2005

வானம் வசப்படுமே...

சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 FMல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி வானம் வசப்படுமே...

முயன்றால் வானம் வசப்படும்,
உழைத்தால் வானம் வசப்படும்,
துணிந்தால் வானம் வசப்படும்,
அன்பால் வானம் வசப்படும்,
கருணையால் வானம் வசப்படும்,
திறமையால் வானம் வசப்படும்,
உயரிய சிந்தனையால் வானம் வசப்படும்
என்ற உண்மைகளை வாழ்ந்து காட்டியவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முயற்சிதான் இந்த - வானம் வசப்படுமே...

வானம் வசப்படுமே... ஒலி-யின் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களால் படைக்கப்பட்டு வருகிறது. திரு. பாண்டியன் தனது கம்பீரமும் அதேயளவு சாந்தமும் கலந்த இனிய குரலில் படைக்கும் அறிவிப்புக்களைக் கேட்கும்போதே கேட்பவருக்கு ஒரு ஈடுபாடு வரும். அவருடைய குரலை தேர்ந்தெடுத்த அறிவிப்புகள்/நிகழ்ச்சிகளிலேயே கேட்பதால் தொடர்ந்து (என்னைபோன்ற) ஒலியுடன் குடியிருப்பவர்களுக்கும்கூட இன்னும் ஆர்வம் கூடும்.

திங்கள் முதல் வெள்ளி வரையிலாக கடந்த சில வாரங்களாக ஒலி பரப்பாகிவந்த இந்த நிகழ்ச்சி நேற்று 50-வது நிகழ்ச்சியாக ஒலி பரப்பானது. நேற்றைய அறிவிப்பின் படிஅடுத்த நான்கு வார இடைவெளிக்குப்பின் அடுத்த பகுதி மீண்டும் தொடரும்.

இதுவரை ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளும் ஒலியின் தளத்தில் இணயமேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை இடம்பெற்ற வரலாற்று மாந்தர்கள் யாரென்று தெரிந்து கொள்ள, நிகழ்ச்சியைக்கேட்க...

இப்போது ஒலி, நேயர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்:
இதுவரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறாத வரலாற்று மாந்தர்களை, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டியவர் என்று நீங்கள் நினைப்பவர்களை - ஏன் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துடன் குறுந்தகவல் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இங்கு சக வலைப்பதிவாளர்களிடமும், வலைப்பதிவு வாசகர்களிடமும் நிறைய கருத்துக்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு இட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் ஒலிக்கோ, திரு. பாண்டியன் அவர்களுக்கோ மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொண்டாலும் - ஒலிக்கு அனுப்பி வைக்கிறேன்.

மக்களுக்கு ஊட்டம்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு நாமும் ஊட்டம் கொடுப்போம்.

Tuesday, April 19, 2005

செல்லினத்தின் கொ.ப.செ.

தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா வைபவம் (அவசர அவசரமாக) இனிதே நடந்து முடிந்துள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அதே நேரத்தில், விழா தொடர்பாக சன் டிவியில் விளம்பரம் வந்ததில் இருந்து ஆங்காங்கே புகையும் வந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பில் ஞாயிறு அதிகாலையன்று என்னுள் தோன்றியதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தேன். ஆனால், அதே வேகத்துடன் எழுதவேண்டாம் என்று விட்டு வைத்தேன்.

வெளியிடப்பட்ட வட்டில், இப்போது பெரும்பாலார்கள் பயன்படுத்தும் TSCIIயையே காணோம், தாப்/தாம்தான் என்று சில குழுமங்களில் பரபரப்பு. இன்று நண்பர் பத்ரியின் ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? பதிவைப் பார்த்தவுடன், என்னுள் தோன்றியதை இன்றே பதிவுசெய்யத் தோன்றியது.

இன்று கணிணியில் தமிழ் பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் தமிழ் எப்படி எப்படியெல்லாம், எந்தெந்த வழியிலெல்லாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று. இந்த கணிணித்தமிழுக்கு வழிவகுத்தவர்கள் எல்லாமே - 90 சதவீதத்துக்கு மேலாக அரசு சார்பற்ற, தன்னார்வமிக்க தொண்டூழியர்கள்தான். ஆனால், இன்று எல்லாத்துக்கும் நாங்கள்தான் காரணம் என்பதுபோல், ஒருபக்கம் பரபரப்பு நடக்கிறது. 30 லட்சம் குறுந்தகடு வெளியிடுவது, பத்திரிக்கைகளுக்கு உடனே கொண்டு சேர்ப்பது போன்றவை பாராட்டப்படத்தக்கது என்றாலும் - பலருடைய உழைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது.

எனக்குத்தெரிந்தவரை தமிழ் கணிணி வளர்ச்சிக்கு வருடாவருடம் நடந்துவரும் தமிழ் இணைய மாநாடு பெரிதும் செய்து வருகிறது. ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், உலகமுழுவதும் தமிழ் கணிணிக்காக பணிசெய்வோருக்கிடையேயான ஒத்துழைப்பு, யுனிக்கோடு அமைப்புடனான தொடர்பு என்று பல வழிகளில் பாராட்டத்தக்க பணிகள் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த குறுந்தட்டு வெளியீட்டில் உத்தமம் என்றழைக்கப்படும் INFITT ன் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

பலகாலம் தமிழுக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு - அமைச்சு மூலம் C-DAC தயாரித்ததாக வட்டு வெளியாகிறது. இதில் பரம்பரை பக்கா அரசியல் ஒருபக்கமும், தமிழ் இணையத்துக்கு உழைப்பவரிடையே நிலவும் அரசியில் ஒருபக்கமும் சேர்ந்து உண்மையை குழிதோண்டிப்புதைக்க ஒத்துழைத்துள்ளது.

ஃபயர் ஃபாக்ஸைப் பொருத்தவரை தமிழாவின் முகுந்த் பிப்ரவரி 22ல் வெளியிட்டார். ஒரு சில தினங்களிலேயே நானும் இறக்கி பயன்படுத்தி வருகிறேன்.

அதன் பின்னர், ழ-கணிணியின் ஜெயராதா மார்ச் 25 அன்று ஃபயர் ஃபாக்ஸ் தமிழில் முடிந்துவிட்டது என்ற ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது என் மனதுள் தோன்றியது: ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல், செய்ததை திரும்பச்செய்து அவர்களுடைய பொன்னான காலநேரத்தை வீணாக்குகிறார்கள் என்று. இருந்தாலும் ழ(RedHat) என்பதால் தனியாக வேண்டுமோ என்று விட்டுவிட்டேன்.

இப்போது புதிதாக, C-DAC மூலம் தாங்கள்தான் (உலகில்) முதன்முதலில் வெளியிட்டோம் என்று இன்னொரு ஃபயர் ஃபாக்ஸ்.

இதற்கு என்ன செய்யலாம் என்று இணையப்பொதுமக்கள் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, வருங்காலத்தில் என்ன செய்யலாம் என்று என்னுள் தோன்றுவது.

1) உத்தமம் ஒரு பொதுவான பதிவு நிறுவனமாய் இருந்து தமிழ் கணிணிப்படுத்ததில் யார் என்ன புதிதான திட்டம் தொடங்கினாலும் அதன் விபரத்தை பதிவு செய்யலாம். திட்டத்தின் முழுவிளக்கம் கொடுக்காமல், ஆரம்பதேதி, செயல்படுபவர்கள் போன்ற விபரத்தை முதலிலேயே தெரிவிக்கலாம். அதுபோல், முடிவு/வெளியீடு தேதி, பதிவிறக்கம் செய்யும் தொடர்பு போன்றவை.

2) தமிழ் லினக்ஸ், டிஸ்கி, போன்ற பல இணையக்குழுமங்கள் இருந்தாலும், பலரும் பல பிரிவாக (குறிப்பாக RedHat, Mandrake Linux) என்று செயல்படும்போது உத்தமம் ஊடுபாலமாக செயல்படலாம்.

3) உத்தமம் தனது மின்மிஞ்சரியை வருடாந்திர தமிழ் இணைய மாநாட்டுச் சிறப்பிதழாக மட்டும் வெளியிடாமல், மாத மின்னிதழாக மாற்றி - ஒவ்வொரு மாதமும் தமிழ் கணிணியுகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், புதிய அறிவுப்புகள், மென்பொருள்கள், புதிய தளங்கள், தற்போது நடந்துவரும் திட்டங்களின் நிலைகள் போன்ற பல விபரங்களைத் தொகுத்தளிக்கலாம்.

4) புதிதாக வரும் அறிவிப்புகள், வெளியீட்டுகளுக்கு - அது மாநில அரசோ, மத்திய அரசோ, வேறு தன்னார்வ நிறுவனங்களாய் இருந்தாலும், அது உத்தமம் பார்வைக்கு(காவது) குறைந்தபட்சம் சென்று திரும்பவதாய் பார்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற இன்னும் பல ...லாம்கள்.

மைக்ரோசாஃப்ட்

ஒரு காலத்தில் நான், ஏன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - சீன, ஜப்பானிய, கொரிய மொழிகளிலெல்லாம் இயங்குதளங்கள், ஆஃபீஸ் பொதிகள் வெளியிடுகிறது, தமிழில் இல்லை என்றேன். பலரும் சொன்ன பதில், வாங்குபவர்கள் இருந்தால்தான் வெளியிடும் என்றார்கள். ஆனால், இப்போது இயங்குதளம், ஆஃபீஸ் எல்லாம் வருகிறது ஏன்?

நமது முகுந்த் போன்றவர்களின் கைவண்ணம்தான், பில் கேட்ஸையே மறுபரிசீலனை செய்யவைத்திருக்கிறது என்பது உண்மை.

முதல் விடயம், விண்டோஸுக்கு பரம எதிரியாக எளிதில் கிடைக்கும் லினக்ஸ். அதிலும் உள்ளூர் மொழிகளில், ஒப்பன் ஆஃபீஸ் போன்ற விண்டோஸிடன் இணைந்து வராத பல மென்பொருள்களுடன்.

இந்த சிறப்புக் கருதி சிங்கையின் தற்காப்பு அமைச்சு தனது 20,000 கணிணிகளில் பயன்படுத்தும் ஆஃபிஸ் 97க்குப் பதிலாக ஒப்பன் ஆஃபிஸுக்கு மாறப்போகிறது. அதற்கு முக்கியக்காரணம் - செலவு குறைவு. தமிழ் உட்பட சிங்கையின் 4 அதிகாரத்துவ மொழிகளும் இருக்கிறது. இது மற்ற அமைச்சுகளும் இதைப் பின் தொடரும்.

மலேசியாவில் சன் நிறுவனத்தின் ஸ்டார் ஆஃபிஸ் பல அமைச்சுகளில் பயன்படுத்த ஆரம்பித்து சில வருடங்களாகிறது. இந்தியாவிலும் பல அரசு துறைகளில் லினக்ஸ் மற்றும் திறமூல மென்பொருள்கள் உட் புகுந்து விட்டது.

இதற்குப்பதிலாக ஒரு மாற்றுதான், மைக்ரோசாஃப்டின் பாஷா இந்தியா. ஆனால், அதிலும் ஒரு திருப்தி - தமிழ் திட்டத்தை பொறுப்பேற்று செய்து தரும் நிறுவனம் விஷ்வக்

செல்லினத்தின் கொ.ப.செ.

ஒரு வழியாக தலைப்புக்கு வருகிறேன்:)
நண்பர்களிடம் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக, தமிழ் குறுந்தகவல் பற்றிய விடயம் வந்தது. அப்போது என்னைச் சுட்டிக்காட்டி இன்னொரு நண்பர் ஒருவர் கூறியது, "அதான் இங்க இருக்காரே, செல்லினத்தின் கொபசெ" என்றார். அப்போது சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.
ஆனால், அன்று எனக்குள் தோன்றியது இதுதான்:
நான் செல்லினத்துக்கு மட்டுமல்ல. முதன்முதல் கணிணியில் தமிழ் பார்க்க உதவிய நா.கோ அய்யாவின் கணியன் முதல், பின்னர் 1996ல் வாங்கிய கம்பன் எழுத்தோலை, பின்னர் முரசு அஞ்சல் என்று தொடங்கி, டிஸ்கி, யுனிக்கோடு, இ-கலப்பை, தமிழ்மணம் என்ற பல தமிழ் கணிணி/தொழில் நுட்ப முயற்சிகளுக்கு கொ.ப.செ-வாக, பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தே இருக்கிறேன். அதை இப்போதும் தொடர்கிறேன். அது என்னால் இயன்ற உதவியாக நினைக்கிறேன்.

இதை நான் மட்டுமல்ல, கணிணியில் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்துவதை, நல்ல விடயங்களை, நண்பர்களின் உழைப்பைப் பாராட்டி அடுத்தவருக்கு நம்மாள் இயன்ற நாளுபேருக்கு எடுத்து செ(சொ)ல்லாமல் இருப்பது தவறு, துரோகம் என்றே நான் நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் ஓரளவு செய்திருந்தாலே - இன்று தனியாக கூக்குரலிடும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்.

அதனால் இதுவரை இதை செய்யாதிருந்திருந்தாலும், இன்றிலிருந்தாவது தமிழ் கணிணித்துறையில் உள்ள முன்னேற்றங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக!

இந்தப் பதிவின் நீளம்கருதிதான் எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். இருந்தாலும், ஒருவழியாக என்னுள் தோன்றியதை சொல்லி விட்டேன். மேலும், இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள எந்த தனி மனிதருக்கோ, நிறுவனத்துக்கோ நான் சொந்தக்காரனோ, சண்டைக்காரனோ அல்ல. இது என்னுடைய தாழ்மையான கருத்து, அவ்வளவுதான்.


என்றென்றும் அன்புடன்,
அன்பு

Monday, April 18, 2005

உங்க ஊர்லயும் இருக்குதா!?

சிங்கையில் உள்ள இந்திய தூதரகம், தனது வழக்கமான சேவைகளுடன் ஒலி/ஒளி வட்டுக்கள், நாடாக்கள் எல்லாம் கூட இரவலுக்கு கொடுக்கிறதாமே? ஆமாவா!? யாரும் பயன்படுத்தியிருக்கிறீர்களா (தெரியும், இங்கு சிங்கையில் கூட தூதரகத்தில் அருகில் ஜாகை வைத்திருக்கும், ஒருவருக்குமட்டும்தான் பயன் என்று:) இரண்டு காரணம் - மற்றவருக்கு வேலை நேரம் ஒத்துவராது, இன்னொன்று எல்லாமே हिन्डि / हिन्दि

இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)