Monday, August 30, 2004

அந்திமழையின் மேலும் சில துளிகள்...

***

SPB ஒவ்வொருமுறை பாடிமுடிக்கும்போதும் ஒரு பெண்மணி மேடையின் பின்புறம் இருந்து ஓடிவந்து யார்மூலமாவது அடுத்த பாடலுக்கான பக்கத்தைப் புரட்டுக்கொண்டுவந்து கொடுப்பதும், பாடிய நூலை வாங்கிச்செல்வதும் பல பாடலுக்குத் தொடர்ந்தது. ஆனால் மேடையின் முன்புறமோ, SPB-யிடம் நேரடியாகவோ வந்து வாங்கிச் செல்லவில்லை. ஒருபாடலின் இறுதியில் வழக்கம்போல் நோட்டை வாங்க வந்து ஓரத்தில் நிற்கும்போது SPB "நோட்டை கையை நீட்டிக் கொடுக்காமல், இங்க வாங்கம்மா, இங்க வாங்க, பக்கத்துல வாங்க, முன்னாடி வாங்கன்னு சொல்லிண்டே கிட்டத்தட்ட இழுத்தணைத்து அழைத்து வந்தார்..."
உடனே ஜானகிம்மா சொன்னாங்க, 'அவங்க Mrs. SPB' என்று... இப்போது சிலகாலமாக அவங்களும் உடன்வந்து, இப்படி உதவிகள் பல செய்கிறார்கள் என்று SPB சிலாகித்துக்கூறினார்கள்.

***

பிண்ணனி இசை அளித்த 'ரகுராஜ் சக்ரவர்த்தி' இசைக்குழு எனக்குத்தெரிந்து 80-களின் பின்பகுதியில் இருந்து சென்னையில் பலநேரம் அன்றாடம் நிகழ்ச்சி கொடுக்கும் ஒரு குழு. சென்னையின் பல சுவர்கள் - இவர்களுடைய நிகழ்ச்சி 'ராஜா முத்தையா மன்றத்தில்' நடைபெறுவதாக பெரிய பெரிய சுவரொட்டிகளை சுமந்து நிற்கும். அந்த அனுபவம் பெரிதாகக் கை கொடுத்தது.

***
இவையெல்லாவற்றுக்கும் மேலாக - வேறு பாடக, பாடகியர் இன்றி, இசையமைப்பாளர் யாருடைய ஆளுமையும் இல்லாத ஒரு சுதந்திரம் அவர்களுக்கு மேலும் ஆத்மார்த்தமாக பாட இயைந்தது.

***

இந்த இசை நிகழ்ச்சிகள் ஏன் கடற்கரை கலையரங்கு எஸ்பிளனேட் இசையரங்கில் (Concert Hall) அல்லாமல் நாடக அரங்கில் (Theatre) நடத்தப்படுகிறது? சற்றுமுன் அரங்கவாடகையை ஒப்பிட்டபோது ஒன்றும் அதிக வித்தியாசமில்லை. அவர்கள் குறிப்பிட்டுள்ள எல்லாத்தகுதியுமிருக்கிறது.

இந்த நேரத்தில் எஸ்பிளனேட் பற்றி:

சிங்கையை ஆசிய கலைகள் மையமாக ஆக்கவும், கலைகளை ஊக்குவிக்கவும் பெரும் பொருட்செலவில் 2002ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தக் Esplanade - Theatres On The Bay - கடலோரக் கலையரங்கம். இது சிங்கப்பூரர்களால் அதிகம் ருசிக்கப்படும் டுரியன்* பழ வடிவிலேயே வடிவமைக்கப்பட்டது. சிட்னி ஓபரா ஹவுஸ், விக்டோரியா ஹால் போல இதுவும் பெயர்பெற முயற்சி நடக்கிறது.

*டுரியன் - சிங்கை, மலேசியா வந்திருந்தால் இதைப் பார்த்திருக்கும் வாய்ப்புண்டு. வராதவர்களுக்கு - சிங்கை அரசால் ரயிலில் எல்லாம் எடுத்துச் சென்றால் அதன் நறுமணம் 'வீசும்' என்ற தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அந்த வாடையை சகித்து சாப்பிட ஆரம்பித்தால் விடமாட்டார்கள்!. ருசி பிடித்தவர்களுக்கு பல உணவுவகைகள் டுரியன் சுவையில் கிடைக்கும். நான் இதுநாள் வரை ருசித்ததில்லை. நண்பரொருவர் கூறினார் - வாரயிறுதியில் டுரியன் வியாபாரம் சூடு பிடிக்குமாம், மலிவுவிலை வயாகரா என்பதால்!

அந்திமழை

ஒரு இனிய இசைமழை அந்தியில் ஆரம்பித்து பின்னிரவு இனிதே நிறைவுற்றது.
ஆம்... பிரபலப் பிண்ணனிப் பாடகர் எஸ்.பி.பாலா, பாடகி ஜானகி ஆகியோரின் அந்திமழை இன்னிசை மழை மன்னிக்கவும், நிகழ்ச்சியைத்தான் குறிப்பிடுகிறேன்.

எஸ்பிளனேட் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்துக்குட் தொடங்கிவிடும் என்று அனைவரும் தெரிந்துவைத்திருந்ததால், மற்ற இந்தியக்கலை நிகழ்ச்சிகளுக்கு வருவது போலல்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்குமுன் பெரும்பாலோனோர் வந்தமர்ந்திருந்தது - நமக்கும் புதியது, நிகழ்ச்சிக்கும் முதல் சிறப்பு.

ஒலி 96.8ன் ரஃபியின் ஒரு சிறிய முன்னுரைக்குப்பின், திருமதி ஜானகி 'செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே...' ஆரம்பித்தார்கள், அரங்கமேகூடி கையொலி எழுப்பியது. அப்புறம், நிகழ்ச்சியின் தலைப்புப்பாடலான 'அந்திமழை பொழிகிறது...' திருமதி ஜானகி, திரு பாலா இருவருமிணைந்து பாடினர் - மீண்டும் ஒரு பெரிய பாராட்டொலி - ரசிகர்களிடமிருந்து. அப்புறம் அதைவிடச்சிறப்பாக 'மலரே மௌனமா...' அனைவரையும் ரசிக்கவைத்தது.

இதற்கிடையில் பாலாவும், ஜானகியும் பாடுவதைவிட அவர்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வு மிகவும் பாராட்டத்தக்கது. பாலா அந்தப் பாடலைப்பற்றி கூறும்போது, 'இந்தப் பாடல் நான் தனியா டிராக் பாடினேன், ஜானகிம்மா தனியா வந்து பாடினாங்க. இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் பாடிய உணர்வு இருக்கும். அதான், எங்களுக்குள்ளிருக்கும் 34 வருட புரிந்துணர்வு. நான் எந்தந்த வரிகள்ள குறும்பு பண்ணுவேன்னு அவங்களுக்குத்தெரியும், அவங்க எங்கங்க சில்மிஷம் பண்ணுவாங்கன்னு எனக்குத்தெரியும். அதன்படி, எங்களால அப்படிப் பாடமுடிந்தது' என்று கூறிவிட்டு, பாடும்போதே ஜானகி அவர்களை கொஞ்சம் சீண்டுவது போல் செய்தார்கள். அதற்கு திருமதி ஜானகி, பாடல் முடிந்தபின் சொன்னார், 'சின்னப் பையன், இப்படித்தான் எதாவது குறும்பு பண்ணிண்டே இருப்பாரு... போறாங்க விடுங்க' என்று சொல்லி சிரித்தார்கள். உடன் பாலா, 'அம்மா... நான் எதாவது தப்பு செஞ்சா அடிங்க... ஹிட்டு மேல ஹிட்டு கொடுத்த நீங்க என்ன 'ஹிட்'டுனா என்ன தப்பு?' என்று கூறி சிர்த்தார்கள். இந்த ஒரு தாய், பிள்ளை சேஷ்டை நிகழ்ச்சி முழுவதும் சர்க்கரையாக இனித்தது.

அப்புறம், 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' உடன் அந்த உணர்வை மாற்ற 'தேனே தென்பாண்டி மீனே...' அப்புறம் பாடல் ஒலிப்பதிவின்போதே பாலாவை சிரமத்துக்குட்படுத்திய 'சங்கீத ஜாதிமுல்லை...' அனயாசாமாக அவருக்குள் கட்டுப்பட்டது. அப்புறம் திருமதி ஜானகியின், 'நெஞ்சினிலே நெஞ்சினிலே...', 'ஊருசனம் தூங்கிடுச்சு' என்று தொடர்ந்தது. அப்புறம் பாலாவின், 'காதலின் தீபமொன்று...'

மீண்டும் ஜானகி 'காற்றில் எந்தன் தீபம்...' ஏற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள். அதைவிட, 'மச்சான... மச்சானப் பாத்தீகளா...' பாடலை கும்மாளமாய்ப் பாடி, அனைவரையும் தாளம்போடச்செய்து பாடலின் முடிவில், அந்தப்பெண் தன்னோட மச்சான், தனக்கில்லாமல் வேறொரு பெண்ணுக்கு நிச்சயமானவுடன், அதே வரிகளை சோகமாக அந்தப்பெண் பாடுவதாகப் பாடியது அனைவருடைய் மனத்தையும் பிழிந்தது உண்மை.

அதன்பின், பாலா அவர்கள் 'இசைக்கு மொழியில்லை, இப்பல்லாம் என்னிடமோ ஜானகியம்மாவிடமோ 'உங்களுடைய தாய்மொழி எது?' என்று கேட்டால் 'இசை' என்போம். இசையென்பது தெய்வ மொழி' என்றெல்லாம் ஓரளவு முன்னுரை பேசிவிட்டு, 'தேர மேரா பீச்சுமே..' ஹிந்தி பாடலை ஆரம்பித்தவுடன் மீண்டும் ரசிகர் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக, 'சங்கரா...' என்ற சங்கராபரண தெலுங்குப்பாடலையும் உச்சஷ்தாயில் பாடி பாராட்டை அள்ளிச்சென்றார். சில பாடல்களுக்குப்பிறகு, குழுப்பாடகி திருமதி ரம்யா-வுடன் இணைந்து 'சக்கரை இனிக்கிற சக்கரை...' ஹிட்டைக் கொடுத்தார்.

அப்புறம் இசைஇமையங்கள் இளையராஜா, விஷ்வநாதன் இணைந்து இசையமைத்த 'தேடும் கண்பார்வை...' பாடலை பாலாவும், ஜானகியும் தனது தேனினுமினிய குரலில் கொடுத்தனர். அப்புறம் 'குட்மார்னிங்க்... டூத்பேஷ்டிருக்கு, பிரஷ் இருக்கு எந்திரு மாமா...' என்று ஜானகி குழந்தை மிகவும் இனிமையாகப் பாடி அனைவரையும் ஆச்சரியத்துக்குட்படுத்தியது.

இடையில் உள்ளூர் பாடகர் விஜய் ஆனந்த், எஸ்.பி.பாலாவுடன் இணைந்து 'என்னம்மா கண்ணு சவுக்கியமா...' பாடலை அருமையாக, தைரியமாகப் பாடினார். பாலாவும் நல்ல ஆதரவு கொடுத்து, பாராட்டுத் தெரிவித்தது அவருடைய உயர்ந்த பண்பைப் பறைசாற்றியது. பாடல்வரியொன்றில், விஜய் 'யானைக்கு சின்ன்பூனை போட்டியா' என்று தொடர்ந்தார். பாலா உடனே சிர்த்துக்கொண்டே, 'யாரு யானை ஆரு பூனை?' என்று கேட்டு அனைவரையும் சிரிக்கவைத்தார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, ஒன்பது நபர் மட்டும் கொண்ட - ஆனால் நவமணிகள் - சென்னை ரகுராஜ் சக்ரவர்த்தி இசைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். அருமையான இசை. எப்போதும்போல, இந்தக்குழுவிலும் என்னை மிகவும் ஈர்த்தவர் தப்ளா கலைஞர்தான். திரு. மதுசூதனனுடைய பத்து விரலும் நர்த்தனமாடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். அதிலும், முன்னேற்பாடு ஏதுமில்லாமல் ரசிகர்கள் வேண்டுகோளுக்கினங்க திருமதி. ஜானகி - ஹிந்தியின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பழைய பாடலான 'மெஹர்...'ருக்கு அவர் வேறொரு தாளத்தில் ஆரம்ப்பித்து - பாலா கொடுத்த குறிப்பை கனநேரத்தில் புரிந்து தாளக்கட்டை மாற்றி பாடலுடன் இயைந்தது அருமை. அதே போல் ஏற்பாடில்லாமல், 10.30 மணிக்கும் மேலாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க பாடிய, 'மார்கழித் திங்களல்லவோ...', 'இஞ்சி இடுப்பழகா' வும் அருமை.

ஆனால், எஸ்பிளனேட் அரங்கில் இதுதான் முதல் இந்திய திரையிசை நிகழ்ச்சியல்ல. கடந்த வருடத்தில் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணாவுடன் வந்து இதே போல் ஒரு சிறிய இசைக்குழுவுடன் ஒரு அருமையான நிகழ்ச்சி கொடுத்தார்.

சரி எது எப்படியிருந்தாலும், பாலாவும் மற்றும் குழுவினரும் பாராட்டியபடி ஒரு அருமையான ரசிகர் கூட்டத்தை சந்தித்த நிறைவு. 2000 பேர் அமர்ந்து அரங்கே நிறைந்திருந்தாலும், கை தட்டல் ஓசை ஒன்றுதான் கேட்டது நிகழ்ச்சியின் இறுதிவரை. மொத்தத்தில் ஒரு அருமையான இசைநிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது என்பது மட்டும் உறுதி.

Saturday, August 28, 2004

நீளம் தாண்டும் அஞ்சு

ஒலிம்பிக் நீளம்தாண்டுதலின் இறுதிச்சுற்றுக்கு தகுதிச்சுற்றில் அஞ்சு தனது முதல் முயற்சியிலேயே குறைந்தபட்சத்தகுதியான 6.65 மீட்டரைவிட அதிகமாக 6.69 தாண்டிவிட்டதால் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.

ஆனால் இறுதியாட்டத்தில் இப்படியா இந்த மூண்று ரஷ்யப் பெண்களும் 7 மீட்டருக்கு சர்வசாதாரணமாகத் தாண்டுவார்கள்? பாவம், அஞ்சுவின் கனவே 7 மீட்டர்தான் - அவரால் சராசரியாக 6.83மீ தாண்டி 6-வதாகத்தான் வரமுடிந்தது.

ஹீம்... என்னசெய்ய அடுத்த ஒலிம்பிக்லயாவது பதக்கம் வாங்கட்டும் - அப்போ அந்த மூணு பொண்ணுங்களுக்கும் இன்னும் நாளுவயது கூடி வயசாகிடும்ல... அய்யோ இவருக்கும் கூடிடுமே! என்னவோ பண்ணுங்கப்பா இப்படி யாராவது தனிப்பட்ட முறையில் சாதனைசெய்து பதக்கம் வாங்கினாத்தான் ஆச்சு.

ஹாக்கி குழு/நிர்வாகம் சண்டையெல்லாம் வேளைக்கு ஆகாது.

Wednesday, August 25, 2004

தேசியதினப் பேரணி உரை

சிங்கப்பூர் புதிய பிரதமர் லீ சியன் லூங் அவர்கள் கடந்த ஞாயிறு (22/ஆகஸ்ட்) தேசியதினப் பேரணி உரை நிகழ்த்தினார்கள்.

சிங்கப்பூரின் தேசியதினம் (சுதந்திரதினம்) ஆகஸ்ட் 9 என்றாலும் அன்றிரவு தேசியவிளையாட்டரங்கில் மரியாதை அணிவகுப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வாணவேடிக்கை என்று முடிந்துவிடும் - யாரும் உரையாற்றுவதில்லை. அதற்குப் பதில் தொடரும் 2-வது ஞாயிறன்று (இந்தமுறை 22/ஆகஸ்ட்) எதாவது உள்ளரங்கில் கடந்தசில வருடங்களாக தேசியப்பல்கலைக்கழக கலாச்சார மைய அரங்கில் நடப்பது வழக்கம். (இங்குதான் அனைத்துலக அரங்கில் தமிழ் நடக்க இருக்கிறது).

துணைப்பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் (Grassroot Leaders), தொழிலதபர்கள், நிறுவனத்தலைவர்கள், ஊடகப்பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்ட (அது அழைத்துவரப்பட்ட... இது வேற...) பிரதிநிதிகள் ஏறக்குறைய 2000 பேர் கலந்துகொண்டனர். வானொலி, தொலைக்காட்சி, வலை-யில் நேரடி ஒலி/ஒளிபரப்பானது. நமக்கு வழக்கம்போல் 'வசந்தம் சென்ட்ரல்'தான் (தமிழ் சேவை - நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் பிரதமரின் உரை உடனுக்குடன் ஒலிபரப்பப் படும்). இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்து 11.20 வரை சளைக்காமல், வந்திருந்தவர்களுக்கும் இனிமையாக மலாய், மாண்டரின்(சீனம்), ஆங்கிலத்தில் 3 மணி நேரம் தன்னுடைய முதல் தேசியதினப் பேரணி உரை நிகழ்த்தினார்.

முன்வரிசையில் முதல் பிரதமரும் (25 வருடம்) பின்னர் மூத்த அமைச்சரும் (14 வருடம்) இப்போது மதியுரை அமைச்சருமான (Minister-Mentor) பிரதமரின் தந்தை லீ குவான் இயூ மற்றும் முந்தைய பிரதமரும் (14 வருடம்), தற்போதைய மூத்த அமைச்சர் (Senior Minister) கோ சோ டொங் அவர்களும், நிரந்தரத் துணைப்பிரதமர் டாக்டர் டோனி டான், புதிய து.பி பேராசிரியர் ஜெயக்குமார், மற்ற அமைச்சர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

பல முக்கியக் கொள்கை மாறுதல்கள் (இளையர்களை அரசியலில் பங்கேற்க அழைப்பு, உள்ளரங்கு/பேச்சாளர் சதுக்கத்தில் கூட்டம் நடத்த காவல்துறை முன்அனுமதி தேவையில்லை, கேசினோ தொடங்க அனுமதியளிக்கப்படலாம்..., பயன்படுத்தும் அளவுக்கு மட்டும் மின்கட்டணம் இன்னும் பல...)

மற்றும் சில சலுகைகளாக - திருமணமாகாதவர்கள், குழைந்தை பெற்றுக்கொள்ள் நேரமில்லாதவர்களுக்காக, (முன்மாதிரியாக அரசு ஊழியர்களுக்கு) வாரத்தில் 5 நாள் வேலை,

12 வயதுக்குள்ள குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வைத்திருக்கும் வேலையால் தீர்வை (இப்போது $350) குறைப்பு,

வருமானவரி தள்ளுபடி ஒரு குழந்தை மட்டும் உள்ளவருக்கும் நீட்டிப்பு... என்று சில சலுகைகள் அறிவித்தார்.

ஒரே சீனக் கொள்கை மறு உறுதி செய்யப்பட்டது. தைவானுக்கு சிங்கப்பூர் ஆதரவு கிடையாது...

எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரும் எதிர்பார்த்தபடி இல்லாமல் சிரித்தமுகத்துடன், நகைக்சுவை இழையோட, எந்தவித அலுப்புமில்லாமல் 3 மணி நேரம் நின்று கொண்டே உரையாற்றியது மிகச்சிறப்பு.

பிரதமரின் முழு உரைக்கு...

எதில் முதலீடு செய்யலாம்?

சும்மா ஒரு சமூகசேவைதான்... எதில்/எப்படி முதலீடு செய்யலாம்னு யோசிச்சிட்டே இருந்துடாதீங்க, இதைப்படிங்க அல்லது திருப்பதி உண்டியல்ல போடுங்க.What’s the right investment mix for you?

Monday, August 23, 2004

அனைத்துலக அரங்கில் தமிழ்

அனைவருக்கும் வணக்கம்.

இந்தவார இறுதியில் அனைத்துலக அரங்கில் தமிழ் என்றொரு இருநாள் நிகழ்வை சிங்கை தேசியப்பல்கலைக்கழக - கலைகள் மன்றம் நடத்துகிறது. தமிழும்,தமிழரும் பற்றி கவிஞர் மு. மேத்தா, நடிகர் கமல், சுதா ரகுநாதன், நம்ப முரசு நெடுமாறன், சிங்கையின் உண(ர்)வோடியைந்த NTUC FairPrice-ன் சந்திரதாஸ், எஸ்.பொ ஆகியோர் உரையாற்றுகிறார்கள். சிறப்பாக இருக்கும்... (எனக்கு வாரயிறுதி வகுப்பு இருந்தால் கூட முத்து பேசும்போது போய்விட்டு வரவேண்டும்.)

சிலவருடங்களாகவே இந்த நல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த வருடம், திரு ப.சிதம்பரம், திருமதி. பத்மா சுப்ரமணியம், இயக்குநர் பாலச்சந்தர் & சிலர் கலந்து கொண்டதாக நினைவு.

சிங்கையில் இருப்பவர்கள் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கு முடிந்தால் எழுதுகிறேன்.

Tuesday, August 17, 2004

புதுசல்ல கண்ணா புதுசல்ல...

இன்னிக்கு சன் செய்தியில், கலைஞர் திருமணமண்டபத்தில் - மறைந்த திரு முரசொலி மாறனின் அஞ்சல் தலை, கவரை திருமதி சோனியா வெளியிட திருமதி மாறன், கலைஞர், முரசொலி மாறன் பெற்றுக்கொண்டனர். தயாநிதி மாறன் பரிசுகளை எடுத்துகொடுத்து உதவிசெய்தார். வழக்கம்போல் கலைஞரின் நிழல் சண்முகசுந்தரம் பின்னாடி உட்காந்திருந்தார். (சபாநாயகர்) சோம்நாத் சட்டர்ஜி, (ஹிந்து) என். ராம் மேடையில் இருந்தனர். மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், ரகுபதி இன்னும் ஏனைய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் விழாவை கீழே அமர்ந்து கண்டு களித்தனராம்.

திருமதி. சோனியா பேசும்போது - கலைஞரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டிய, 'பொடா சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும், சென்னைக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தாச்சு, செம்மொழி சட்டம் விரைவில் வரும்' என்றார்கள்.

கூட்டத்துலேயே சோனியா மேடம் பேசிட்டதால, கலைஞரும் அவர்பங்குக்கு அம்மா தலைமையில் கூட்டணிஆட்சி தொடரவேண்டும், அதுக்கு கம்யூனிஸ்டும் ஒத்துழைக்க வேண்டுமென்றார்.

எனக்கு ஒண்ணு மட்டும் புரியல்ல... இந்த அஞசல் தலை-லாம் அரசுதான வெளியிடும். மாநிலக்கட்சிகள் வெளியிடமுடியுமா....?

எண்ணன்ணே சொல்றிங்க... ஆங்..... என்ன... ஓ...
நடந்தது அரசு விழாதான்றீங்களா? அதனாலதான் அந்த போஸ்ட்மாஸ்டர் ஜெனரலையும் ஒரு சேர்ர போட்டு ஒக்கார வச்சுருந்தாங்களா?

அப்போ சரிண்ணே... நமக்கென்ன வந்துச்சு....


Friday, August 13, 2004

புத்தக அலமாரி

வாவ்.... விகடன் புக் கிளப்! வேற.... நல்லாதான் இருக்கு. ஆனால், ஒரு சில பக்கங்கள் குமுதம் வாடை அடிக்குதுள்ள!?

இருந்தாலும் பெரிய கடுப்பு, இப்படி முழுதும் மாத்துணவங்க - யுனிக்கோடுக்கு மாத்தித்தொலைக்க வேண்டியதுதான...

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

அந்த வரிசையில் (எந்த வரிசையிலா? முந்தைய பதிவைப் படியுங்கள்) இந்த தொடரும் பயனுள்ள ஒன்று...சமயலறை மருத்துவம் கிட்டத்தட்ட இதே தலைப்பில் என்னிடம் ஒரு புத்தகம் உண்டு, யாருக்காவது மெல் விபரம் வேண்டுமென்றால் - பிரதி சனி காலை 10-12க்குள் சிங்கை ஹில்டன் விடுதியில் சந்தியுங்கள்....

ஆனந்த விகடன் - ஹெல்ப் லைன்

விகடனில் விகடன் தாத்தாவையே பேண்ட் போடவைத்துவிட்டதை (சன் டிவி விளம்பரத்தில்) முன்னிட்டு பல புதிய பகுதிகள்/தொடர்கள் வந்திருக்கிறது.

அதில் குறிப்பிடத்தக்க ஒன்று இந்த ஆனந்த விகடன் - ஹெல்ப் லைன்
நமக்கு, நமது மக்களுக்கு பயனுள்ள ஒரு தொடர். எழுத்து மிக நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கொஞ்ச நாளுக்கு முன்னாடி பத்ரி தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தாரே 'உள்ளிருந்து கொண்டு கதவை அடைத்துக்கொண்ட ஒரு குழந்தை பற்றி' அந்த விஷயத்தில் கூட 101ஐ அழைக்கலாமான்னு ரட்சிகா ஆண்டிட்ட கேக்கலாம் அல்லது 101-டமே...

Wednesday, August 11, 2004

சிங்கப்பூர் - நேற்று இன்று நாளை...

சிங்கப்பூருக்கு இது மிகவும் முக்கியமான வாரம்...
1965ல் மலேயாவிலிருந்து (இப்போது மலேசியா) பிரிந்ததில் இருந்து சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் இயூ பிரதமர் பதவிவகுத்து வந்து ஏறக்குறைய 25 வருடங்களுக்குப்பின்னர் திரு கோ சோக் டோங்-கிடம் 28 நவம்பர் 1990ல் ஒப்படைத்து விட்டு, பிரதமர் கோவின் அமைச்சரவையில் 'மூத்த அமைச்சர்' பதவியில் இருந்து வந்தார்.

நேற்று...

14 வருடங்களுக்குப்பிறகு, நேற்று 10/ஆகஸ்ட்/2004 காலை 10 மணியளவில் (ஏற்கனவே திட்டமிட்டபடி) அதிபர் எஸ் ஆர் நாதன் அவர்களை சந்தித்து தனது பதவி விலகலைக் கொடுத்துவிட்டு புதிய பிரதமராக தனது அமைச்சரவையில் முதல் துணைப்பிரதமராக இருக்கும் திரு லீ சியான் யாங் - அவர்களை பிரதமராக நியமிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அதனை ஏற்று காலை 11 மணிக்கு தன்னை சந்தித்த திரு லீயை அதிபர் நாதன் புதிய பிரதமராக பதவியேற்கும்படி கூறி புதிய அமைச்சரவையையும் அமைக்கப் பணித்துள்ளார்கள்.

அதன்படி சிறிது நேரத்தில் தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை, புதிய பிரதமாராகப் பதவியேற்கும் திரு லீ வெளியிட்டார். அதில் அவர் இது வரை வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பை மட்டும் வைத்துக்கொண்டு, புதிய நாணய வாரியத் தலைவராகவும் (Monetary Authority of Singapore - MAS), மூத்த அமைச்சராகவும் பிரதமர்பதவி துறந்த திரு கோ பதவியேற்கிறார். இதுவரை மூத்த அமைச்சர் பொறுப்பிலிருந்த தனது தந்தைக்கு 'மதியுரை அமைச்சர்' (Minister Mentor) என்ற பதவி கொடுத்துள்ளார்கள்.

எப்போதும்போல திரு டோனி டான் - துணைப்பிரதமராக திரு லீயின் அமைச்சரவையிலும் தொடர்வார்கள். (திரு நெடுஞ்செழியனை ஞாபகம் இருக்கிறதா!?) இவர் அடுத்த ஜீனில் பதவி ஓய்வு பெரும்போது இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் திரு வோங் கான் செங் துணைப்பிரதமராவார்.

திரு கோவின் அமைச்சரவையில் சட்ட, வெளியுறவு அமைச்சராக இருந்த திரு ஜெயக்குமார் அவர்கள் துணைப்பிரதமர் ஆகிறார்கள். அத்துடன் தான் பார்த்துவந்த சட்டம், வெளியுறவு கொள்கையையும் (மட்டும், வெளியுறவு திரு. ஜார்ஜ் யோவுக்கு...) தொடர்வார்கள்.

திரு தர்மன் சண்முகரத்னம் முழுக் கல்வியமைச்சர் பதவியுடன், நாணய வாரியத் துணைத்தலைவர் பதவியும் கூடுதலாக வகிப்பார்கள்.

திரு பாலாஜி சதாசிவம் துணை சுகாதார அமைச்சராகிறார்.

திரு விவியன் பாலகிருஷ்ணன் - சமூக, இளையர், விளையாட்டுத்துறை

மேலும் சிலர் பதவிஉயர்வு பெற்றுள்ளார்கள்,
சில புதியவர்கள் அமைச்சர் பதவி பெற்றுள்ளார்கள்
சிங்கை வரலாற்றில் முதன்முதலாக
பெண் அமைச்சர்கள் இருவர் (திருமதி லிம் லீ ஹிவா, திருமதி யூ ஃபூ யீஷுன்) பதவியேற்க இருக்கின்றனர்.

இன்று

நாளை இரவு பதவியேற்க ஏற்பாடு நடந்து வருக்கிறது,
(நான் இங்கு பதிந்து கொண்டிருக்கிறேன்...)

நாளை

திரு. லீ சியான் யாங் இரவு 8 மணியளவில் பிரதமர் பதவியேற்க உள்ளார்கள். அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கும். திரு லீயைப்பற்றி எழுதும்போது நம்ப மு.க.ஸ்டாலின் ஞாபகம் வராமலிருந்தால் உலக அரசியல் தெரியாதென்றாகிவிடும். இங்கும் வெளிப்படையாக இல்லையென்றாலும் அந்த முணுமுணுப்பு உண்டு. அதேபோல் இங்குள்ள Straits Times பத்திரிக்கையில் கருத்துக்கணிப்பு நடத்தி திரு லீ பிரதமர் பதவிக்கு முழுத்தகுதி உடையவர், முன்னாள் பிரதமர்/முன்னாள் மூத்த அமைச்சர் மகன் என்று இல்லாவிட்டாலும் அவர் பதவிக்கு தகுதியுடையவர் என்று முடிவு தெரிவித்தது.

எது எப்படியிருந்தாலும், புதிய பிரதமர் சிங்கப்பூரை புதிய உட்சத்துக்கு கொண்டுசெல்வார் என்று நம்பலாம். வாழ்த்துக்கள்.

(இப்போதைக்கு இது போதும்... ஆங்காங்கே ஹைபர்லிங்க் கொடுக்கலாம்னு நெனச்சேன், அவசரத்துல முடியல - நாளைக்கு முடிந்தால் இணணக்க முயற்சிக்கிறேன்).



Thursday, August 05, 2004

சும்மா ஆராய்ச்சிதான்...

படம் போடுறது இவ்ளோ சுளுவுதானா..? எதுவுமே ஆராய்ச்சி பண்ணாதாம்பா தெரியுது இல்ல...!
ஆராய்ச்சி இன்னும் முடியல...

இது சர்தார்ஜி ஜோக் - அல்ல...

It's Balle, Balle in Canadian Parliament

Wednesday, August 04, 2004

சாதனைச் செல்வி: மாளவிகா!

இந்தப் பெண்ணின் வாழ்க்கையைப்பற்றி முன்னர் படிக்காமல் விட்டிருந்தால் - படிக்க: சாதனைச் செல்வி: மாளவிகா!

Tuesday, August 03, 2004

நவீன அம்மா

அம்மா,
பால் கொடுக்கவில்லையென
உன்பால் எனக்கில்லை கோபம்!

நீ கொடுக்கும் முத்தம்கூட
கடிகாரத்தின் துணையோடுதானே!

எந்தக் கோட்டையைப் பிடிக்க
அரைவேக்காடு அரிசியை
அள்ளிப்போட்டுக்கொண்டு
இப்படி ஓடுகிறாய்?
என்னுடைய 'டாட்டா'
காற்றில் வீணாய்ப்போகிறதே!

பள்ளிப் புத்தகத்தில்
'நிலா நிலா வா வா!', என
அம்மா சோறு ஊட்டுகிறாள்!
ஆனால்,
புறமுதுகிட்ட வீரனைப்போல்
சோர்ந்து திரும்பும் நீ,
அவசரச் சட்டம்போல்
சமையலறையில் புகும் உனக்கு,
அப்பாவின் புதுப்புது அர்ச்சனைகள்!
நீ தட்சணை கொடுத்தும்,
ஏன் இந்த அர்ச்சனைகள்?

நீ தூங்கம்மா, தூங்கு,
நான் உனக்குத்
தாலாட்டுப் பாடுகிறேன்!

- ஆர். ஆனந்தி

'தினத்தந்தி குடும்பமலர் - 25/07/2004' வந்த இந்தக் கவிதை இன்று
தினம் ஒரு கவிதையாக வெளியாகியுள்ளது.

நல்ல கவிதை கணையாழியில்தான்
வெளிவரவேண்டுமென்பதில்லை.
குடும்பமலர், வாரமலரிலும் வரலாம்.
நல்ல கவிதைகளைத் தேடி, தேடி
தினம் ஒரு கவிதை
கொணர்ந்தமெக்கு சேர்க்கும்
நண்பர் சொக்கனுக்கு
கோடானுகோடி நன்றி.



Monday, August 02, 2004

ரகிசியமாய்... ரகிசியமாய்....

பேரு மட்டும்தான் - ரகசியா... இல்லை சாரி ரகிசியா...

மஞ்சள் மகிமை

என்ன தலைப்பே ஒருமாதிரியா இருக்குதா...?
மஞ்சளோட மகிமை தெரிந்து அங்க உள்ள பசங்க patent வாங்கி வச்சாட்டுனுங்க, இங்க நம்ம ஊட்டு பொண்ணுங்க மஞ்சளைத் துறந்து Gillette பக்கம் போய்ட்டாங்க என்ன பண்றது, கலிகாலம்....மங்களகரமான மஞ்சள் - ராஜம் முரளி

அழைப்பு மையம்

"வேலைக்குப் போனாதான் படிச்சதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்.
பணத்தைக்கொட்டி, கஷ்டப்பட்டுப் படிச்சுருக்கோம்.
வீட்டு மொட்ட மாடியில நிலாவை முறாச்சுப் பார்த்துட்டு,
ஒருநாள் கல்யாணம் பண்ணிட்டு அதே நிலவை
வேற வீட்டு மாடியிலுருந்து பாத்திட்டு இருக்க முடியாது."

என்னமா பேசுறாங்க பாருங்கப்பா...
ஒருபக்கம் 'அழகி தற்கொலை'ன்னு படிக்கறப்ப
கவலையா இருந்தாலும் - இந்த துர்கா, அகல்யா, சுஜாதா பேச்சைக் கேட்டால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது, சந்தோஷம். கால் சென்டர் - அகல்யா

குப்பையைப் பற்றி...

மகா சனங்களே வணக்கம்.

இதுவரை 'குப்பை'யைப்பற்றி வலைப்பூக்களில் பிரபலங்கள் பரபரப்பாக எழுதிவந்தார்கள். இந்தவாரம் முதல் குப்பையைப்பற்றி ஒரு சிறப்புத்தொடரே வெளியிட ஆனந்தவிகடன் குழுவில் அவர்களாகவே முடிவுசெய்து (சத்தியமா நான் காசு ஏதும் கொடுக்கலிங்க, மேலும் இது ஆதரவாளர் தொடரும் அல்ல...) குப்பையென்பது இது குடும்ப சமாசாரம் (பொம்பளங்க சமாசாரம்னு எழுதி, அகில உலக மாதர் சங்கம் கொடி பிடிச்சுட்டாங்கண்ணா... - தப்பிச்சேன்) என்பதால் அவள்விகடனில் தொடர் வருகிறது. பிரபல (பெண் - அப்படின்னு சொல்லலமோ அதுக்கும் எதாவது மாதரணி திட்டுவார்களோ!?) எழுத்தாளர் அனுராதா ரமணணும், புகழ்பெற்ற சினிமா, தொலைக்காட்சி பிரபலம் நளினி ராமராசர்(சரியா தெரியல...) அவர்களும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

அதனால... மேல படிங்க...