Monday, January 17, 2005

உலகின் முதலாவது தமிழ்க் குறுந்செய்திச் சேவை...

வணக்கம்.

நேற்றிரவு உலகின் முதல் குறுந்தகவல் சேவை அதிகாரபூர்வமாக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் சிங்கையில் நடந்தேறியது. நிகழ்ச்சி பற்றி நண்பர் மூர்த்தி எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சி இது.

கூட்ட நெரிசலில் புகுந்து ஒரு வழியாக உள்ளெ சென்ற எனக்கு ஆங்காங்கே தொங்கிய பதாகைகளில் கண்ட இன்ப அதிர்ச்சி:

செல்லினம்

AnjalMobile வசதியுடைய தொலைபேசியைக்குறிப்பிட(AnjalMobile enabled mobile phones) முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சொல். செல்லினம் இருக்கும் கைத்தொலைபேசியில்தான் தமிழ் குறுந்தகவல் அனுப்ப, தமிழில் பார்க்க இயலும்.

கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு சிறப்பித்தார். அவரின் தகவலை, ஒலியின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் கீதா, நிகழ்ச்சியை ஒலியுடன் இணைந்து நடத்திய ஆனந்தபவன் உணவக உரிமையாளருக்கும், வெளிநாட்டுக்கும் இந்ததகவல் அனுப்ப இயலும் என்று தெரியவைக்க மலேசிய எழுத்தாளர் பேரா. ரெ. கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் ஒலி-க்கும் அனுப்பப்பட்டது.

கவிஞர் அனுப்பிய உலகின் முதல் குறுந்தகவல்:

நேற்றுவரை மூன்று தமிழ் (அதாவது முத்தமிழ்)
இன்றுமுதல் நான்கு தமிழ் -
கைத்தொலைபேசியில் கணிணித் தமிழ்.


பெற்ற தகவலுடைய கைத்தொலைபேசி திரையில் காட்டப்பட்டது.
ஒலி அலுவலகத்தில் கிடைத்த செய்தி ஒலியிலிருந்த அறிவிப்பாளர் மூலம் நேரடியாக வானொலியில் வாசித்து காட்டப்பட்டது. அரங்கமே உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. கவியரசு முத்து நெடுமாறனை தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு புளகாங்கிதம் அடைந்தார். என்னுடலும் ஆனந்தத்தில் பூரித்தது உண்மை. பேரா. கார்த்திகேசு தகவலை பெற்றவுடன், ஒலியை அழைத்து பெற்ற தகவலை வாசித்ததையும் ஒலியில் நேரடியாக ஒலி பரப்பினார்கள்.

பின்னர் இளையருக்காக இன்னொரு தகவல் கேட்டபோது, பாடலாசிரியராக

காதலி...
இனிமேல்,
தமிழில் காதலி
என்றார்.

திரு. முத்து நெடுமாறன் வழக்கம்போல் தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சில் விளக்கவுரை கொடுத்தார். அன்பு என்று உள்ளிட anbu என்று உள்ளிடலாம். பண்பு என்று உள்ளிட panbu என்றால் அது பண்பாக வராது... அதற்கு pan#bu அழுத்த வேண்டும்.
# கீ ன்/ண்/ந் போன்று மாற்ற பயன்படுத்த முடியும். ஒலிக்கு பாடல் கேட்டு தகவல் அனுப்பும் நீங்கள் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, சித்தி போன்ற வித்தியாசம் தெரிய செய்திகள் அனுப்பலாம் (uncle, aunty என்று குறிப்பிடமால்...)

விழா நடைபெற்ற அரங்கு ஒரு பள்ளியின் அரங்கு என்பதால், சற்றே சிறியதாகவும், சில தொழில்நுட்ப இடையூறு கொண்டதாகவும் இருந்தாலும், செல்லினம் தொடர்பான தொழில்நுட்ப ஏற்பாடு மிகுந்த கவனத்துடன், விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்க முயற்சி.



இனி கொஞ்சம் தொழில்நுட்பம் தொடர்பில்...

1) செல்லினம் (AnjalMobile) MIDP 2.0 (Mobile Internet Device Profile) Java உள்ள கைத்தொலைபேசிகளில் கண்டிப்பாக இயங்கும். என்னுடையது போல (Nokia 6610) உங்கள் தொலைபேசி கொஞ்சம் பழைய வகை என்றால், அதாவது MIDP 1.0 வகை என்றால் தமிழில் மின்னஞ்சல் மட்டும் அனுப்ப இயலும். (மற்ற ஜாவா தொழில்நுட்ப வசதி இல்லாத தொலைபேசி வைத்திருப்பவரகள், தமிங்கிலீஸில் தொடரலாம் அல்லது பக்கத்தில் அனுப்புபவர்களை/பெற்றவர்களைப் பார்க்கலாம்:)

2) செல்லினம் ஜாவா தொழில்நுட்பம் உள்ள பெரும்பாலான தொலைபேசிகளில், WAP/GPRS மூலம் www.murasu.com/sms என்ற தொடர்பின் மூலம் தொலைபேசியில் இறக்கிக் கொள்ள முடியும்.

2அ) AnjalTest 8KB மற்றும் முழு AnjalMobile செயலியே 40KBதான்.

3) AnjalMobile இறக்கியபின் அதை Activate செய்ய இரண்டு சங்கேதஎண்கள் தேவைப்படும். இந்த எண்கள்தான் அவர்கள் வெளியிட்டிருக்கும் செல்லினம் என்ற அட்டையில் இருக்கும். இந்த அட்டை 15 வெள்ளி, அதுபோக வருடத்துக்கு 20 வெள்ளி கட்டணம் இருக்கும். ஆனால், அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த அட்டையை பெற்றுக்கொள்பவர்கள், வருட சந்தா செலுத்த தேவையில்லை. நேற்று விழா அரங்கில் வாங்கியவர்களுக்கு 10 வெள்ளிக்கு விற்கப்பட்டது, வருட சந்தாவும் கிடையாது (ஒரு வெள்ளி சுனாமி நிதிக்கு அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது). அதனால் எதற்கும் இருக்கட்டுமே என்று எனக்கும், நண்பர்களுக்காக முதலில் மூன்றும், பின்னர் ஒன்றும் வாங்கினேன் (என்னுடைய 6610 தொலைபேசியில் பயன்படுத்த முடியாதென்பது வேற விஷயம்:)

4) Sony Ericsson-ல்தான் பெரும்பாலும் சோதனை செய்யப்பட்டது என்றாலும், மற்ற Nokia, Siemens, Motorola, Samsung நிறுவன தொலைபேசிகளிலும் வேலை செய்யும்.முழுமையான பட்டியல் இங்கே. அதுதவிர நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் முடியுமா என்று பரிசோதித்துப்பார்க்க விரும்பினால், GPRS தொடர்பு இருந்தால் Go to address மூலம் http://www.murasu.com/mobile/test.wml போய் AnjalTest இறக்குவதன் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம். அல்லது சும்மா படம் பார்க்க...

5) முக்கிய தகவல்: செல்லினம் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளிட இயலும். அந்த தகவல் இன்னொரு செல்லின தொலைபேசிக்கு அனுப்பும்போது தமிழிலிலேயெ தெரியும், மற்ற தொலைபேசிகளில் ஆங்கிலப்படுத்திய(romanized) தமிழில் தகவல் தெரியும். கண்டிப்பாக junk-ஆக போகாது.
(ஒலி நேயர்களுக்கு கொசுறு: ஒலி 96.8க்கு சிறப்பு ஏற்பாடாக, செல்லினம் பயன்படுத்தி தமிழில் குறுந்தகவல் அனுப்பலாம், மாறாக நாம் வழக்கம்போல தமிங்கிலீஸில் அனுப்பினால் அவர்களுக்கு தமிழில் தகவலைக் காட்டவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

6) நிகழ்ச்சிக்கு Sony Erricson ஆதரவு கொடுத்திருந்தது. அரங்கின் வெளியே, செல்லினத்துக்கு ஆதரவு கொடுக்கும் Planet Telecoms கடை போட்டிருந்தனர். செல்லினம் அட்டையை சிங்கப்பூரில் விநியோகிப்பவர்கள் Claritex, விற்பனையாளர்கள் Planet - சிங்கையின் 10 இடங்களில் இவர்களின் கிளை உண்டு.

7) SMS விலையைப் பொருத்தவரை தமிழ்குறுந்தகவலும், வழக்கமாக அனுப்பபடும் SMSல் ஒன்றாகத்தான் எடுத்தக்கொள்ளப்படும்.

நிகழ்ச்சிக்கு மாணவர்களை அதிகம் எதிர்பார்க்கிறோம் என்று ஒலி அழைப்பு விடுத்தாலும் விடுத்தது. 7 மணி நிகழ்ச்சிக்கு 7 மணி சில நிமிடங்களுக்கு செல்லும்போதே அரங்கு மாணவக்கண்மணிகளால் நிரம்பி அழகியபாண்டியன் பேச ஆரம்பித்திருந்தார். மூலையில் கிடைத்த ஓரிடத்தில் ஒற்றைக்காலில் (மறுகால் கீழேவைக்க இடமில்லை, கால்மாற்றி சமாளிக்கவேண்டியிருந்தது) நின்றிருந்தேன். விழாஆரம்பத்தில் மறைந்த திரு. உதுமான்கனி அவர்களுக்கு ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது - வெளியில் இன்னும் பலநூறு பேர்கள் அரங்கம் நிறைந்து, நிற்கவும் இடமில்லாததால் வெளியில் தவிக்கின்றனர் என்று...

உலகின் முதலாவது தமிழ்க் குறுந்செய்திச் சேவை.
இப்படிதான் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது, விளக்க கையேடுகளில், செல்லினம் அட்டையில் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல்குறுந்தகவல் இதுதானா என்ற கேள்விக்கு என்னைப்பொருத்தவரை, பொதுமக்கள் கைக்கு வருவது இதுதான் முதன்முறை.

என்னுடைய
முந்தையபதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி இதற்கு முன்னர் குறுந்தகவல் MMS-ஆக கடந்தவருடமே அறிமுகப்படுத்தினார் முத்து.

பின்னர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூரில் (அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டின்போது, அப்போதும் ஒலியின் கீதா உள்ளிடுவது திரையில் காட்டப்பட்டது...) குறுந்தகவல் SMS-ஆகவே கடந்தவருட இறுதிவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நேற்று நடந்த நிகழ்ச்சியில்தான் பொதுமக்கள் கைக்கு வருகிறது என்று நினைக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், நேற்றைய நிகழ்ச்சிக்கு கிடைத்த மக்கள் குறிப்பாக இளையர்களின் ஆதரவு மிகுந்த சந்தோசமளித்தது. கண்டிப்பாக இணையத்தில் தமிழ் புழக்கத்துக்கு ஈடாக கைத்தோலைபேசியிலும் தமிழ் தவளும் காலம் மிக அருகில். கவிஞர் கூறியபடி, இந்த புதிய தொழில்நுட்பத்தால் இரண்டு விளைவுகள்:
1. இளையர்களிடம் தமிழின் புழக்கம் அதிகமாகும் (தமிழ் மேல் காதல்).
2. தமிழில் காதல்.

நேற்றைய நிகழ்ச்சியில் கவியரசு வைரமுத்துவின் உரை தமிழைப்பற்றியதாக இல்லாமல், தமிழரைப்பற்றியதாக குறிப்பாக சிங்கை இளையர்கள், பெற்றோரைப் பற்றிய கவலைகளாக, அறிவுரைகளாக அவரே கூறியதுபோல் மனிதம் பற்றி பேசுவதாக அமைந்தது இன்னும் சிறப்பு.

1 comment:

suratha yarlvanan said...

பல தொங்கு கேள்விகளுக்கு ஒரே இடத்திலேயே சந்தேகங்களை தீர்த்துக்கொண்டேன் .பதிவுக்கு நன்றி