Saturday, April 16, 2005

கற்றதும்... பெற்றதும்... எஸ்.பொ

நன்றி: விகடன்

============================================
கற்றதும்... பெற்றதும்...
சுஜாதா

விட்டான்... கையான்... வீர விளையாட்டு!

எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, ‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’ என்று கேட்டதில், ‘இங்கேதான் சென்னை&94&ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், உறவுகள் என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.

இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் பனியும் பனையும் என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.

எஸ்.பொ\வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.

தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.
என்ன சாதிக்கிறோம்..?

கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்
இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.

எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும் சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.

எஸ்.பொ-வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.

எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட னீமீனீஷீவீக்ஷீ (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.

"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."

இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!

==========================================

நன்றி: சுரதா

4 comments:

வன்னியன் said...

இது சுஜாதாவுக்கில்லை. இதை வாசிக்கும் தமிழ் வலைப்பதிவாளருக்கு. எஸ். பொ. சொல்லும் "தேங்காய்ப்போர்" மட்டக்களப்பில்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் நான் கேள்விப்படவில்லை.
மேலும் கீழே தந்திருக்கும் பத்தி பற்றி.

"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."

'வறாத்துப் பளை' எண்டது ஓர் ஊராய் இருக்க வேணும். உமல் கொட்டை என்று வராமல் 'ஊமல் கொட்டை' என்று வந்திருக்க வேணும். நாங்கள் அப்பிடித்தான் சொல்லுறனாங்கள். (பனங்கொட்டை சிறிது காலத்தின் பின் மாறும் வடிவம். உள்ளுக்கு எதுவுமில்லாமல் எடை குறைந்து, தும்புகள் கழன்று இருக்கும் பருவம்.)
ரவுண் என்பது Town. பொடியன்கள் என்பது ஆண் பிள்ளைகளைக் குறிக்கும். அல்லது இளைஞர்களைக் குறிக்கும்.

ஈழநாதன்(Eelanathan) said...

அப்பா வன்னியரே கொஞ்சம் அடக்கி வாசியும் எஸ்.போ மட்டக்களப்பு மாப்பிள்ளை பிறந்து வளர்ந்தது யாழ்ப்பாணம்.போர்த்தேங்காய் அடித்தல் வீர விளையாட்டோ இல்லையோ தெரியாது.ஆனால் பதினொரு முட்டாள் விளையாட்டான கிரிக்கெட்டைவிட மண்மணம் மிக்கதும் வீரமானதும்.உழைத்துக் களைத்த உழவனின் பொழுதுபோக்கு.யாழ்ப்பாணத்தில் பரவலாக விளையாடப்பட்டது.நான் கூட மாமாமாருக்கு உதவியாய் மிகச் சிறுவயதில் சேற்றுக்குள் தேங்காய் புதைக்க உதவியிருக்கிறேன்.

இதுபற்றி டானியல் அடிமைகள் கதையில் மிக விரிவாக எழுதியிருப்பார்.

வன்னியன் said...

ஆ. அப்பிடியே?
நானெண்டாக் கேள்விப்படேல. சரி அதவிடும்.
அதென்ன பதினொரு முட்டாள் விளயாட்டு? செமயாக் கிழிபடப்போறீர். நானும் உப்பிடிச் சொல்லித் திரிஞ்சு இப்ப விட்டிட்டன். மனம் மாறீட்டன் எண்டில்ல, மற்றாக்களப் புண்படுத்தக் கூடாது எண்டுதான்.
நீர் சொன்னதால அடங்கீற்றன் தலைவா!

எம்.கே.குமார் said...

////"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."/////


"அதுதான் அப்பு சொல்ல வந்தேன் நான். வறாத்தூர்ல(ஊர் பெயர்!) பனயிலையையும் உலர்ந்தகொட்டையையும் அடிச்சவ (நார் வித்து பொழச்சவ!) இப்போ டவுனுக்கு வந்து (டவுன்வாசியாகி) நாட்டாமைத்தனம் பண்ணுற மாதிரியிருக்கு (கதை!). அவங்க வாயை அடைக்க உன்னை மாதிரி பொடிப்பயல்கள் (சிறுபயல்கள்; வயசுக்கு வராத பயல்கள்!) எல்லாம் காணாதப்பு!"

இதுதான் அர்த்தம் (ன்னு நினைக்கிறேன்!). அன்பு பரிசு சுஜாத்தாதான் தரணூமா? நீங்களும் கொடுங்க!

அப்படியே அவரு கொடுத்தா அதை எனக்குப் பாதி வாங்கிக்கொடுங்க. நீங்க பாதி எடுத்துக்குங்க!

எம்.கே.குமார்.