Friday, October 28, 2005

இந்தியாவும் சிங்கப்பூரும், இந்தியரும் சிங்கப்பூரரும்...

சமீப காலங்களில் நான் கேள்விப்படும் சேதிகள் மூலம் இந்தியாவும் சிங்கப்பூரும் முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளியல் ஒத்துழைப்புடன் செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தக் கலாச்சார, பொருளியல் தொடர்புகள் பல காலமாக இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் கையெழுத்திடப்பட்ட (29 ஜீன் 2005) சிங்கப்பூர்-இந்தியா பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (Comprehensive Economic Cooperation Agreement (CECA) இதற்கும் பெரும் ஆதராமாக விளங்குகிறது. இந்தியா இம்மாதிரி ஒப்பந்தம் வெளிநாட்டொன்றுடன் செய்துகொள்வது இதுதான் முதல் முறை.

இந்த ஒப்பந்தத்தின் முழுப்பிரதியும், முன்னர் நடந்த கடிதப்பரிமாற்றங்களும் இங்கே...

இந்த ஒப்பந்தத்தின் பயனாக நான் கண்கூடாக கவனித்துவரும் மாற்றங்கள் சிலவற்றை, நான் சிங்கை ஊடகங்கள் மூலம் அறிந்த அளவில், எனக்குத்தெரிந்த/புரிந்த அளவில் இங்கு பகிர்ந்துகொள்ள ஒரு முயற்சி. இது தொடர்பான மேல் விபரங்களையும், இந்தப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன், நன்றி.

கல்வித்துறை:

சமீபத்தில் சிங்கையின் கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும், சில பள்ளிகளின் முதல்வர்களும், ஆசிரியர்களும் டெல்லி, சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு பயணித்து அங்குள்ள பல பள்ளிகளுக்கு வருகைதந்து அவர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று தெரிந்துவந்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.

சிங்கையின் திரு. கண்ணப்பன் செட்டியார் அவர்களின் ஸ்டேன்ஷ்ஃபீல்ட் சென்னையில் ஒரு வெளிநாட்டுக்கல்வி அளிக்கும் ஒரு பள்ளியையும், சிங்கையின் திரு. சந்த்ரு அவர்களின் மாடர்ன் மாண்டசோரி நிறுவனம் டெல்லி குர்காவனில் ஒரு பாலர் பள்ளியையும் அமைத்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் பாரதிய வித்யாபவன் பவன்'ஸ் பன்னாட்டுப்பள்ளியை
கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இங்கு CBSE பாடமுறை பின்பற்றப்படுவதால் பெரும்பாலான வட, தென் இந்தியர்கள் (தமிழ் இருந்தாலும் - தமிழர்கள் குறைவு) இங்கு படிக்கின்றனர். இந்தப்பள்ளிக்கு கிடைத்த வரவேற்பினால், இந்தவருடம் இன்னொரு இடத்திலும் தனது இரண்டாவது பள்ளியை ஆரம்பிக்கிறது. டில்லி பொதுப்பள்ளியும் (Delhi Public School) ஏற்கனவே இங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறது. ஐஐடி-யை இங்கு ஒரு கிளை ஆரம்பிக்கவைக்கும் முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே அணணாமலை, பாரதியார், சென்னை, இந்திரா காந்தி பல்கலைக்கழகங்க்ள் இங்குள்ள நிறுவங்கள் மூலம் பட்டக்கல்வி அளித்து வருகிறது. நீண்ட நாட்களுக்குபிறகு இந்திய தமிழ் பேராசிரியர்கள் உதவியுடன் யுனிசிம்(UniSIM) தமிழ் பட்டக்கல்வியை வழங்க இருக்கிறது. கடந்தமாதத்தில் சென்னை, டில்லியில் சுற்றுலாத்துறை & கல்விஅமைச்சு ஒத்துழைப்பில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள், பலதொழில்கல்லூரிகள், பள்ளிகள் கலந்துகொண்ட ஒரு கல்விக்கண்காட்சி நடந்தது.

சென்னையிலுள்ளவர்கள் சிங்கப்பூர் கல்வி பற்றி மேலும் அறிய தொடர்புகொள்ள:
http://www.singaporeedu.gov.sg/htm/stu/stu010b.htm#2

மேலும் சிங்கை கலவி/கல்விமுறை பற்றி அறிய:
http://www.singaporeedu.gov.sg/

வங்கித்துறை:

இந்த புதிய ஒப்பந்தம் இங்குள்ள DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்தியாவில் அடுத்த 4 வருடங்களில் 15 கிளைகள் வரை ஏற்படுத்த வகைசெய்கிறது. ஏற்கனவே டிபிஎஸ் வங்கி இந்தியாவில் அதன் சேவையை வழங்கி வருகிறது. அதேபோல் இந்தியாவின் HDFC, ICICI வங்கிகள் டிபிஎஸ்/POSB வங்கிகளுடன் இணைந்து மின்னியல்முறையில் பணமாற்றும் சேவை(tracking வசதியுடன்), தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தும் வசதி போன்றவற்றை வழங்கும். இந்தியன் வங்கி, யூகோ, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஐசிஐசிஐ-யும் ஏற்கனவே ஒரு கிளை ஆரம்பித்து நிறுவனங்களுக்கான கணக்குகளை நடத்தி வருகிறது. இது மேலும் விரிவடையலாம், எளிதாக இங்குள்ள டிபிஎஸ் கணக்குகளிலிருந்து இந்தியாவில் உள்ள கணக்குக்கு இணையம் மூலம் எல்லா பரிவர்த்தனைகளையும் செய்ய இயலும்.

துறைமுகம், விமானங்கள், விமான நிலையம்:

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்கனவே சிங்கையின் துறைமுக ஆணைக்கழகம் (Port Authority of Singapore, PSA) முதலிட்டு நடத்திவருகிறது.

புதிதாக இந்தியாவின் ஏர்சகாரா, சிங்கையின் ஜெட்*ஏசியா நிறுவனங்கள் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னைக்குதான் வழக்கம்போல விலையே தவிர டெல்லி, கல்கத்தாவுக்கு $350க்கெல்லாம் கூட சென்று திரும்ப விமான டிக்கட் கிடைக்கிறது.

இந்தியாவில் கடந்த ஓரிருவருடங்களாக பேச்சுவார்த்தையிலும், டெண்டரிலும் இழுத்துக்கொண்டிருக்கும் பெருநகரங்களின் விமானநிலையங்களை தனியார் ஏற்று நடத்தும் முயற்சியில் சிங்கையின் சாங்கி விமானநிலயத்தை நிறுவகிக்கும் Civil Aviation Authority of Singapore (CAAS), இந்தியாவின் பார்தி (Bharti) நிறுவனத்துடன் களத்தில் இறங்கியிருந்தது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி CAAS சற்றே பின்வாங்கி முதலீடு செய்யாமல் ஆலோசனைச்சேவை மட்டும் செய்யப்போவதாகவும், அபுதாபி விமானநிலையத்தை நிறுவகிக்க முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்!

சுற்றுலாத்துறை:

சிங்கப்பூரின் சுற்றுலா வளார்ச்சித்துறை சிங்கப்பூருக்கு இந்தியரை மேலும் ஈர்க்க, திரைப்படத்துறையை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் இவர்களின் (கூட்டு) முதலீட்டில், ஹிருத்திக்ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிக்கும் "க்ரிஷ்" (Krrish) என்றொரு ஹிந்தித் திரைப்படத்தை ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்குகிறார். படத்தின் ஆரம்பிவிழா பூஜை சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஆர்ச்சர்ட் சாலை, லா பா சாட், ராபின்ஸன் சாலை போன்ற இடங்களில் நடைபெற்றுவருகிறது.

இதுமட்டுமல்லாமல், "The Film in Singapore!" சிங்கப்பூர் என்ற 10 மில்லியன் வெள்ளி திட்டத்தின்கீழ் உலகப்பிரபலங்கள் இங்கு திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்தால் ஏற்படும் செலவில் 50 சதவீதம் வரை சுற்றுலா வாரியம் அளிக்கும் என்றுதெரிகிறது. கடந்தவருடத்தில் நடிகை குஷ்பு-வின் நாடகம் ஒன்று இங்கு படப்பிடிப்பு நடத்தியதாக கேள்விப்பட்டேன் - இந்தத்திட்டத்தின் கீழ்.

மருத்துவச்சுற்றுலா, கல்விச்சுற்றுலா போன்ற சுற்றுலாக்கலுக்கும் ஏற்பாடு செய்கிறது.

மருத்துவத்துறை:

மருத்துவத்துறையிலும் ஒத்துழைக்கும், மருத்துவர் பரிமாற்ற ஏற்பாடு நடந்துவருகிறது.
சென்ற வாரம் இங்கு வருகைபுரிந்த இந்திய சுகாதரத்துறை அமைச்சர் திரு. அன்புமணி கூறும்போது, சிங்கையில் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மருத்துவர்களை அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், புதுவையின் ஜிப்மர் மருத்துவமனை மூலம் மருத்துவர் பரிமாற்றம் நடக்க இருப்பதாகவும் கூறினார். மேலும், உயிரணு, பறைவைக்காய்ச்சல் ஆராய்ச்சியில் ஒத்துழைக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொழில்துறை:
தொழில்துறையில் பல முன்னேற்றம் நடந்துவருகிறது. இந்தியாவில் தயாராகி இங்கு இறக்குமதி செய்யும் அனைத்துப்பொருளுக்கும் ஒட்டுமொத்த வரிவிலக்கு அளிக்கப்பட இருக்கிறது. இதேவிதமாய் இந்தியாவிலும்.

சிங்கையின் பிரதமர் திரு. லீ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் கூறியது: "இருபக்கமும் உள்ள வர்த்தகர்களுக்கு, பல வாய்ப்புகள் உண்டு அவற்றை பயன்படுத்தி தனது வர்த்தகத்தைப்பெருக்கலாம். வானமே எல்லை " என்று குறிப்பிட்டார். உடனிருந்த இந்தியப்பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும் அதை வரவேற்றார்.

பல புதிய இந்திய நிறுவங்கள் இங்கு தொழில் தொடங்கிவருகின்றன. அதேபோல் சிங்கை அரசுத்துறை நிறுவனமான JTC குழுமத்தின் அசெண்டாஸ் நிறுவனம் பெங்களூரில் டாட்டா குழுமத்துடன் சேர்ந்து ஒரு தகவல்தொழில்நுட்ப பூங்காவையும், பின்னர் ஹைதரபாத்தில் தொழில் பூங்கா மற்றும் வீட்டு வசதியையும், சென்னையின் சிறுசேரியில் சமீபத்தில் ஒரு தகவல்தொழில்நுட்ப வளாகத்தையும் கட்டி நிறுவகித்து வருகிறது. மஹிந்திரா சிட்டி வடிவமைப்பிலும் முதலிட்டு, உதவி வருகிறது. இன்னொரு நிறுவனம் சிறுசேரியில் வீடுகள் கட்டுவதாக சேதி.

இங்கு சமீபத்தில் சிங்கப்பூர்-இந்திய வர்த்தக கூட்டமைப்பு டிபிஎஸ் வங்கியுடன் இணைந்து நடத்திய சிறந்த இந்திய வர்த்தகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் துணைப்பிரதமர் பேரா. எஸ். ஜெயகுமார் பேசும்போது, இந்தியர்கள் மேலும் சிறப்பாக வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் அதற்கு முன்னெப்போதும் விட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

பிஸ்னஸ்டைம்ஸ் நாளிதழ்- நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஒருவருடத்துக்குமேலாக நடத்திய இந்தியாவின் சமூகம், பலம், பலவீனம், தொழில் வளார்ச்சி, வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படியிலான ஆய்வின் முடிவை வெளியிடும் கருத்தரங்கில், கடந்தவாரம் பேசிய கல்வியமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம்,

"இந்தியாவில் குவிந்துகிடக்கும் வர்த்தக வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வு உயர்ந்து கொண்டிருந்தாலும், அது பற்றிய சரியான தகவலை ஒரு பெரிய இடைவெளி பிரிக்கிறது. இதைக் குறைக்க,

- தகவல் சாதனங்கள்
- சிந்தனையாளர் அமைப்புகள் (தெற்காசிய ஆய்வுக்கழகம், என்.டி.யு ஆய்வுக்கழகம், லீ குவான் யூ பொதுக்கொள்கைப்பள்ளி...)
- நிதிக் கழகங்கள்
- பெரிய எண்ணிக்கையிலான இந்தியக்குடிமக்கள்
- வர்த்தக சபைகள்

என்ற ஐந்து பிரிவினரும் பெருவாரியாக உதவலாம். அவர்களிடமிருந்து வர்த்தகர்கள் இந்த நன்மைகளைப் பெறலாம். இந்தியாவைப் பற்றிய முண்ணனி தகவல் பெட்டகமாக சிங்கப்பூர் விளங்கவேண்டும்."

என்று கூறினார்.

பேச்சின் முழு விபரம்:
http://app.sprinter.gov.sg/data/pr/20051019996.htm

இந்த ஆய்வின் முடிவின்படி இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த மாநிலங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பத்து இடங்கள்

1. மகராஷ்டிரா 2. டில்லி 3. தமிழ்நாடு 4. ஆந்திரா 5. கர்நாடகா
6. குஜராத் 7. சண்டிகார் 8. உ.பி 9. பஞ்சாப் 10. ராஜஸ்தான்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சில (இளம்) பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மிலிந்த் டியோரோ அவர்களின் தலைமையில் வந்திருந்தார்கள். அவர்களும் இங்குள்ள அமைச்சர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மற்றும் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி வர்த்தகத்தை பெருக்க வழிவகை செய்தனர். இந்தக்கருத்தரங்கில் சிங்கையின் சமூக வளர்ச்சி, இளையர் மற்றும் விளையாட்டுத்துறை அமச்சர் Dr.விவியன் பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர்களும், அரசும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மிக நல்ல அபிப்ராயமும், ஈடுபாடும் வைத்திருந்தாலும் மக்கள் அளவில் இன்னும் செய்ய நிறைய இருக்கிறது. இந்த அடிப்படைஉறவு மேலும் வளர்ந்தால் இன்னும் பல செய்யமுடியும்.

இதனை வலியுறுத்தத்தான் சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம் முடித்து சிங்கை திரும்பியபோது அமைச்சர் தர்மன் கூறியது:
"இங்குள்ளவர்கள் மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய, வளர்ச்சியடைய மனம்மாற்றம் மிக அவசியம்"

இந்தத்தகவல்கள் பெரும்பாலும் இங்குள்ள தமிழ் ஊடகங்கள்வழி அறிந்ததென்றாலும், ஊடகங்கள் செய்திகள் அளிப்பதன்வழி சேவையைச் செய்தாலும், சிங்கையில் 'இந்திய இந்தியர், சிங்கை இந்தியர்' உறவுக்கு மேலும் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

கடந்தவருடம் இதே மாதம், என்னுடைய வலைப்பூ ஆசிரியர் வாரத்தில் நான் எழுதிய சிங்கையில் இந்தியர் நிலை என்ற பதிவுகள் இதற்கு தொடர்புடையதாயிருக்கும்.

அனைவருக்கும் எனது
தீபாவளி மற்றும்
ரமலான் நோன்புப்பெருநாள்
வாழ்த்துக்கள்.

16 comments:

ஜோ/Joe said...

அன்பு,
பயனுள்ள பல தகவல்கள் .மிக்க நன்றி!

Badri Seshadri said...

அன்பு: CECA பக்கங்களுக்கு நன்றி. எங்கள் அரசை விட சிங்கப்பூர் அரசு இதுபோன்ற ஒப்பந்தங்களை வேகமாக பொதுமக்கள் முன் வைக்கிறார்கள். முழுமையாகப் படித்துவிடுகிறேன்.

நிறைய 'long-term' பயன்கள் உள்ளன. அது எப்படி நடக்கிறது என்று பார்க்கவேண்டும். ஆனால் ஒன்று - இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் குழுக்கள் வந்து பார்வையிட்டுப் போவதால் மட்டும் ஒன்றும் நடக்கப் போவதில்லை!

Ramya Nageswaran said...

அன்பு, விவரமா, சுட்டிகளோட நல்லா எழுதியிருக்கீங்க.. நன்றி

Unknown said...

அருமையான தகவல்கள் அன்பு.
நேரம் கிடைக்கும் போது முழுமையாகப் படிக்கிறேன்.

எம்.கே.குமார் said...

அன்பின் அன்பு,

///இந்த ஒப்பந்தத்தின் பயனாக நான் கண்கூடாக கவனித்துவரும் மாற்றங்கள் சிலவற்றை, நான் சிங்கை ஊடகங்கள் மூலம் அறிந்த அளவில், எனக்குத்தெரிந்த/புரிந்த அளவில் இங்கு பகிர்ந்துகொள்ள ஒரு முயற்சி////

'சிங்கை-இந்தியா'வின் தற்போதைய பரிவர்த்தனைகளின் முழுவிவரத்தையும் கவனமாக கவனித்து வந்து தெளிவாக எழுதியிருக்கிறீகள்.

வாழ்த்துகள்.

பத்து மாநிலங்களில் மேற்கு வங்காளம் இல்லாவிட்டாலும் கம்யூனிச மே.வ முதல்வர் அங்கு முதலீடு செய்ய இங்கு வந்து அழைத்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள். அதன் முக்கிய விளைவாக ஜெட்ஸ்டார் ஏசியா 150 வெள்ளீயில் (+டாக்ஸ்)இப்போது கல்கத்தாவிற்கு.

பத்ரி சொன்னவற்றில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவிலிருந்து இங்கு வரும் குழு செந்தோசாவிற்கு போய்விட்டு இந்தியாவிற்கு திரும்பிப்போய்விடும். ஆனால் இந்தியாவிற்கு வந்துவிட்டுத் திரும்பும் சிங்கை குழுவை எப்போதும் நான் உன்னிப்பாய்க் கவனிப்பதுண்டு.

திரும்பி வந்தவுடன், கண்டிப்பாய் ஒரு பொருளியல் சட்டத்திருத்தம், பொருளியல் மேம்பாடு ஊக்குவிப்பு என்பதை உடனடியாய் செயலில்காட்டும் அக்குழு.

திரு.தர்மன் இந்தியா வந்துவிட்டு சிங்கை வந்து பள்ளியில் என்னென்ன மாற்றங்களை முன்வைத்தார் என்பதை நாடே ஊன்றிக்கவனித்ததை அன்பு மறுக்கமாட்டார். இப்போது தர்மனின் அடுத்த டூர் சீனா. அங்கிருந்து வந்தபின், அடுத்த மாற்றங்கள் கண்டிப்பாய் உண்டு.

CEBA வைப் பொறுத்தமட்டில் இந்தியாவை விட சிங்கைக்கு உடனடி லாபம் நிறைய உண்டு. Made in Singapore பொருட்களுக்கு இறக்குமதியில் அதிக சவுகரியங்கள் செய்துகொடுத்தபின், நம்புங்கள் எனது கம்பெனி கூட இந்தியாவில் தொழில் ஆரம்பிப்பதைவிட இங்கிருந்து அங்கு எக்ஸ்போர்ட் செய்வது உடனடி அதிக லாபத்தை தரும் என்று கணக்குப் போடுகிறது.

இந்தியாவிற்கு அவ்வொப்பந்தம் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் லாபம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

பவன் ஸ்கூலில் இப்போது 1600க்கும் மேற்பட்ட குழந்தைகள்.

இந்திய தொழிலதிபர்கள் கவனிக்க, சிங்கையில் இப்போது கல்விக்கழகங்கள் பெருத்த லாபகரமானவை.

சேலத்திலிருந்து வந்திருக்கும் ஒரு தனியார் தொலைதூரக்கல்வி நிறுவனம் 3,4 வருட டிகிரிக்கு பணத்தை அள்ளிக் குவிக்கிறது.

////அமைச்சர்களும், அரசும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மிக நல்ல அபிப்ராயமும், ஈடுபாடும் வைத்திருந்தாலும் மக்கள் அளவில் இன்னும் செய்ய நிறைய இருக்கிறது.///

:-) கொஞ்சம் நாகரீகமாக எழுதியிருக்கிறீர்கள். குட்.

திரு.விவியன் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் இந்தியாவின் லஞ்ச லாவண்யங்கள் பற்றி ஒரு பெரிய பல்லவி பாடப்பட்டதை அன்பு குறிப்பிட விரும்பவில்லை போலும். இங்குள்ள நாளேடு அதைப்பெரிதுபண்ணி எழுதியிருந்தது.

அன்பு விரிவான அழகான தொகுப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

எம்.கே.

அன்பு said...

்வ்இதுவரை இந்தப்பதிவை வாசித்த, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

குமார், நீங்களெல்லாம் இருக்கின்றீர்கள் என்ற தைரியத்தில்தான் எனக்குத்தெரிந்ததை ஆரம்பித்துள்ளேன், எதிர்பார்த்ததுபோல நீங்களும் பல விபரம் இட்டுள்ளீர்கள் நன்றி. இன்னும் விரிவாக எழுத நினைத்து, பல நாள் தள்ளி போட்டதில் சிலவிபரங்கள் விட்டுவிட்டேன் - சில வேண்டுமென்றே:)

கண்டிப்பாக சிங்கப்பூர் குழு ஆதாயமில்லாமல் இந்தியா செல்வதில்லை. முழு ஏற்பாட்டோடு சென்று ஒவ்வொரு நாளையும், தேவையானவற்றுக்கு செலவு செய்து இங்கு வந்தவுடன் அதை செயல்படுத்துவதில் இறங்கி விடுகின்றனர் என்பது உண்மை. அதுபோல் சிங்கைக்கு உடனடி லாபம் என்பதைவிட, சிங்கை ஒப்பந்தத்தை/வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்கிறது.

மேலும் தெரிந்த விபரங்கள் பகிர்ந்துகொள்ளுங்கள், நண்பர்களே...

பத்மா அர்விந்த் said...

விவரமான தகவல்களுக்கு நன்றி அன்பு.

அன்பு said...

குமார்,
நேற்றே குறிப்பிட மறந்துவிட்டேன். விவியன் கலந்துகொண்ட கருத்தரங்கின் 'டுடே' செய்தியை
Starting Business in India?
Here's What not to do
இணைத்துள்ளேனே. பெரும்பாலும் நிறைய எழுதமுடியாமல், அங்கங்கே சுட்டி இணைத்துள்ளேன்.
நன்றி.

தாணு said...

எனக்கு வாசிக்கவே ரெண்டு நாள் ஆகும் அன்பு. அதன்பின் விவாதிக்கலாம். தீபாவளி நல்வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

அன்பு,

நல்ல புதிய தகவல்கள். நன்றி.எப்படியோ மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது நடந்தா
சந்தோஷம்தானே?

இன்னும் அப்பப்ப விவரங்களை எழுதுங்க.

அன்பு said...


.....
இந்தத்தகவல்கள் பெரும்பாலும் இங்குள்ள தமிழ் ஊடகங்கள்வழி அறிந்ததென்றாலும், ஊடகங்கள் செய்திகள் அளிப்பதன்வழி சேவையைச் செய்தாலும், சிங்கையில் 'இந்திய இந்தியர், சிங்கை இந்தியர்' உறவுக்கு மேலும் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.


இன்றைய (சிங்கை) தமிழ்முரசின் தலைப்பு/முதல்பக்கச் செய்தி:

சென்னை வீடுகளில் பாம்புகள் படையெடுப்பு!

உள்ளே ஆங்கிலப்பக்கத்தில்:

Fish, snakes, scorpians... all in Chennai homes!

அன்பு said...

அன்பின் ராஜ்,
அது ஒரு செய்தி என்பதற்கும்,
அதுதான் முதல்பக்க/தலைப்புச்செய்தி என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மற்றப்படி இந்தியசெய்திகள் பெரும்பாலும் வெட்டி/ஒட்டல்தான் என்பது தெரிந்த சேதி. அதிலும் சினிமாப்பக்கம் பார்த்தால் சிரிப்பாய் வரும்:)

Anonymous said...

Hello Anbu,
Thanks for putting all the info in a place.
Best Wishes

அன்பு said...

சிங்கப்பூரின் முதல் இந்திய சட்ட நிறுவனமாக "நிஷித் தேசாய் அசோசியேட்ஸ் (Nishith Desai Associates)" இங்கு துவக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திக்கு...

இந்நிறுவனம் Ceca பற்றி வழங்கிய ஒரு படைப்புக்கு...

அன்பு said...

Ceca பற்றிய சுருக்கமான விபரத்துக்கு...

நன்றி http://www.bridgesingapore.com/ இந்தத் தளத்தில் சிங்கை-இந்தியா தொடர்பான பல தகவல்களும், வர்த்தகம் தொடர்பான பல கேள்விகளுக்கான விடைகளும் நிறைந்திருக்கின்றன.

Anonymous said...

அன்பு, மிக பயனுள்ள தகவல்கள். நன்றி!

பாரதி