இதயத்தை பாதுகாப்பது எப்படி?
சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை...
அடிக்கிற மழைக்குப் பயந்து சூரியன் ஓடிப்போய் எங்கோ ஒளிந்துகொள்ள, சென்னை நகரமே வீட்டுக்குள் முடங்கியிருந்த அந்த சோம்பலான நேரத்தில், வித்தியாசமான ஒரு நிகழ்ச்சிக்காகக் களைகட்டியிருந்தது, மியூசிக் அகாடமி அரங்கம்.
பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் என்.சிவகடாட்சம் நடத்திய, ‘கார்டியாலஜி 2005’ என்னும் கருத்தரங்கம் அது. தமிழகத்தின் முன்னணி இதயநோய் நிபுணர்கள் பங்கேற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆரோக்கியம் தொடர்பான பார்வையாளர் களின் அத்தனை சந்தேகங்களுக்கும் அவர்களிடமிருந்து தெளிவான விளக்கம் கிடைத்தது ஹைலைட்!
‘‘2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு உங்களுக்கு வழிகாட்டத் தான் இந்தக் கருத்தரங்கம்!’’ என்று டாக்டர் சிவகடாட்சம் தொடக்க உரையில் குறிப்பிட்டது, நிகழ்ச்சி முழுக்கவே எதிரொலித்தது. ஒவ்வொரு நிபுணர் தந்த விளக்கமும் ‘ஆரோக்கிய புதையலாகவே விளங்கியது.
திருச்சி, ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான டாக்டர். சென்னியப்பன், உணவுக் கட்டுப்பாடு பற்றி நிகழ்த்திய கேள்வி&பதில் நிகழ்ச்சி, அற்புதமான விருந்து! அதிலிருந்து...
எதற்காக உணவுக் கட்டுப்பாடு?
முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கட்டுப்பாடான உணவு என்றால் என்ன? அதற்கென ஏதாவது அளவுகோல் உண்டா?
கண்டிப்பாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!
இந்த சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?
அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்!
பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.
கொழுப்புச் சத்து பற்றி?
அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும்.
தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்!
மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன. எந்த எண்ணெய் இதயத்துக்கு நல்லது?
‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.
‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம்.
எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.
பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை எதுவுமே இல்லையா?
ஏன் இல்லாமல்? இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!
எந்தக் காய்கறிகள் என்ன சத்தெல்லாம் தருகின்றன என்று சொல்ல முடியுமா?
கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது.
கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது.
எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த இதயநோய் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரன், உடல் எடையை ஒரு உவமையுடன் விளக்கினார்.
‘‘உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’ என்றவர் தந்த ஹெல்த் டிப்ஸ்...
எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.
எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள்.
மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை!
‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’ என்று சொன்ன இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எம்.அசோக்குமார், சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.
‘‘நாம் சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தும் வாழையிலையில், குறுகி இருக்கும் இடது பக்கத்தை ராமர் பக்கம் என்பார்கள். விரிந்திருக்கும் வலது பக்கத்தை அனுமார் பக்கம் என்பார்கள். குறைத்து சாப்பிடவேண்டிய உப்பு, ஊறுகாய், சிப்ஸ், பாயசம் போன்ற வற்றை ராமர் பக்கத்திலும், அதிகம் சாப்பிடவேண்டிய பொரியல், கூட்டு, அவியல் போன்றவற்றை அனுமார் பக்கத்திலும் வைப்பார்கள். இதற்குக் காரணம் இருக்கிறது. வலது கையில் சாப்பிடும் நமக்கு, இடது பக்கத்தில்... அதாவது, ராமர் பக்கத்தில் உள்ளவற்றை அடிக்கடி எடுத்து சாப்பிடுவது சிரமமாக இருக்கும். அதனால், அவற்றை குறைவாகவே உண்ணுவோம். ஆனால், நம் கைக்கு வசதியான அனுமார் (வலது) பக்கத் திலுள்ள காய்கறிகளை அதிகமாக உண்ணுவோம். இப்படி, உணவுக் கட்டுப்பாட்டை விருந்து படைக்கும் முறையிலேயே கொண்டு வந்தவர்கள் நம் முன்னோர்!’’ என்று அவர் சொன்னபோது, பலத்த கரகோஷம்!
‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’’ & ஹார்வி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நரேஷ்குமார் சொன்ன பஞ்ச் இது!
‘‘எடை குறைப்பது என்னவோ பெரிய காரியம் என்று பலரும் சலித்துக்கொள்கிறார்கள். ‘அது ரொம்ப சாதாரண விஷயம்’ என்பதற்கு இதோ ஒரு உதாரணம்!’’ என்ற டாக்டர் சிவகடாட்சம் மேடையில் அறிமுகப் படுத்தியது, நடிகை ஸ்ரீப்ரியாவை!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 105 கிலோ இருந்த ஸ்ரீப்ரியாவின் இப்போதைய எடை 69 கிலோ.
‘‘அதுக்கு மேல என்னால குறைக்க முடியலீங்க’’ என்று சிரித்தபடியே பேசிய ஸ்ரீப்ரியா, ‘‘எங்கப்பா சர்க்கரை நோயாளி. ஹார்ட் அட்டாக்ல இறந்தார். இந்த விஷயம்தான் என்னோட உடல்நலன்ல அக்கறை கொள்ள வெச்சது. என் எடையைக் குறைச்சே ஆகணும்கிறதுல உறுதியா இருந்தேன். வாக்கிங், டயட் இரண்டையும் டாக்டர் சொன்னபடி ஃபாலோ பண்ணி னேன். இதனால என்னோட உயர் ரத்த அழுத்தமும் குறைஞ்சிருக்கு!’’ என்றார், சந்தோஷமாக.
நெஞ்சு வரை வயிறு?
கருத்தரங்கில் கவிதை ஒன்றை வாசித்தார், டாக்டர் சிவகடாட்சத்தின் மனைவி & சாந்தகுமாரி சிவகடாட்சம்.
‘நான்கு வேளை சாப்பாடு
அளவில்லா நொறுக்குத் தீனி
நாலு காலு ஜீவன்கள்
ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி,
நிலை தடுமாறி விழும்வரை
பட்டை அடித்து
நீராவி இஞ்ஜின் கணக்கா
புகை விட்டு
நெஞ்சுவரை வயிறு பெருக்கினால்
நல் இதயம் எங்கே கிட்டும்?’
என்ற அவரது வரிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்! நிகழ்ச்சிக்கு வந்திருந்த அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் பி.சி.ரெட்டியும் தன் உரையில் இதுபற்றி குறிப்பிட்டு, பாராட்டினார்.
கொரியர் கொண்டு வந்தாலும்?
மருத்துவமனைகளின் இன்றைய யதார்த்த நிலையை ஒரு ஜோக் மூலம் சுட்டிக்காட்டினார், விழாவில் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர்.
‘‘ஆஸ்பத்திரிக்கு வந்த ஒரு ஆள், டாக்டர் கிட்ட போய் வாயைத் திறக்கறதுக்குள்ள அவன் வாயில தெர்மா மீட்டரைச் சொருகிட்டார் டாக்டர். அப்படியே பிரஷரும் பார்த்துட்டு, ‘நெக்ஸ்ட்’னு அடுத்த டெஸ்டுக்கு அனுப்பிட்டார். அங்கே அவனுக்கு எக்ஸ்ரே எடுத்தாங்க. அங்கேயும் அவனை யாரும் பேச விடலை. அடுத்ததா, பிளட் டெஸ்ட், ஸ்கேனிங்னு எல்லாம் எடுத்துட்டு, ‘போய் ரிசல்ட் வாங்கிட்டு டாக்டரைப் பாருங்க’னு க்யூவுல உக்கார வைச்சுட்டாங்க.
பக்கத்துல இருந்தவரு, ‘சும்மா காய்ச்சல்னு காட்ட வந்தேன். அதுக்கே காலையிலருந்து ஏகப் பட்ட டெஸ்ட் பண்ணி, உக்கார வச்சுட்டாங்க!’னு அலுத்துக்கவும், நம்ம ஆள் அப்பாவியா சொன்னான் & ‘நீங்களாவது காய்ச்சலுக்காக வந்தீங்க. நான் கொரியர் தபால் கொண்டு வந்தவனுங்க!’’
நன்றி: விகடன்.
18 comments:
நல்ல பதிவு அன்பு.
இதோ இப்பவே போய்க்கிட்டு இருக்கேன் உடற்பயிற்சிக்கு:-))
அன்பு, நல்ல பயனுள்ள தகவல்கள்.
Very useful infos. Thanks a lot
இதயத்தைப் பாதுகாப்பது இதயம் நல்லெண்ணெய்னுல்ல நெனைச்சுட்டு இருந்தேன்!!!
(சும்மா ஜோக்குக்கு!)
உண்மையில் பயனுள்ள கட்டுரை அன்பு அவர்களே.
நல்ல செய்திகள் அன்பு.நான் இது குறித்து 4 வாரங்கள் தொடர்ச்சியாக தமிழோவியத்தில் எழுதி இருக்கிறேன்.
அவசியமான பதிவு.
இப்படி பயனுள்ள பதிவுகளா போட்டுட்டு "குப்பை"ன்னு பேரு வைச்சா எப்படிங்க அன்பு? :)
Curry - மாமிசமா? மாசாலாவா? சரியான்னு தெரியலையே?
அவசியமானதொரு பயனுள்ள பதிவு!
சமீபத்தில் அலுவலகத்தில் நடந்த மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொழுப்பு அதிகமாக இருக்கு என்று கூறினார்கள் அதிலும் கெட்ட கொழுப்பு கூடுதலாக இருக்காம், ம்... இதென்ன பரிசோதித்து சொல்வது நமக்கே தெரியுமே...அதான் நமக்கென்ன நல்ல கொழுப்பா இருக்கும்... இருந்தாலும் தற்போது தான் உடற்பயிற்சி தொடங்கியுள்ளேன்.... நல்ல கட்டுரை அன்பு
நன்றி
பின்னூட்டமிட்ட, வாசித்த, வாக்களித்த... இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பயனுள்ள தகவல் தந்த அவள்விகடனுக்கும் நன்றி...
(இதுக்கெல்லாம் சோடா கேட்டா - ரொம்ப அதிகமோ:)
துளசிக்கா,
நகைச்சுவையெல்லாம் அப்புறம் இருக்கட்டும்... முதல்ல கிளம்புங்க!
(ஊருக்குதான் உபதேசம், எங்க வீட்ல ஏதும் போட்டு கொடுத்துடாதீங்க:)
இளவஞ்சி,
நானும் Curry என்பதை மசாலா என்றே நினைக்கிறேன்...
குழலி,
பாராட்டுக்கள். உடற்பயிற்சியைத் தொடருங்கள்.
பத்மா-,
உங்களுடைய பல கட்டுரைகளை நானும் படிக்கவில்லை, தமிழ்மணம் தாண்டி வேறு இடம் செல்வது அரிது. தமிழோவியம் மிக நன்றாயிருந்தாலும் அடிக்கடி செல்வதில்லை. நீங்கள் அங்கு இடம் கட்டுரைகளை உங்கள் பதிவிலும் சமீபத்தில் இடுகின்றீர்கள் என நினைக்கிறேன், அதை கண்டிப்பாக தொடருங்கள்.
இனி இந்தப் பதிவுக்கு சம்பந்தமான உங்களின் சில எண்ணங்கள்:
உடல் எடையும் உடல் நலமும்
அதிக எடையும் பருமனும் - காரணங்கள்
பசித்து புசிப்போம்
மற்ற இனபிற கட்டுரைகள்...
அனைவருக்கும் மீண்டும் நன்றி.
மிக அற்புதமான ஒரு பதிவு, நிறைய நல்ல விஷயங்கள் அறியத் தந்தமைக்கு என் நன்றி.
எ.அ.பாலா
"மெகாதொடர் பார்ப்பதுகூட ஹார்ட் அட்டாக் வருவதற்கு வழிவகுக்கும்"
‘‘ஒருமுறை வெளியூருக்குச் சென்றிருந்தபோது கடுமையான வயிற்றுவலி. அவசரத்திற்கு பக்கத்திலுள்ள டாக்டரிடம் சென்றேன். டெஸ்ட் பண்ணிவிட்டு, மருந்து எழுதிக் கொடுத்தவர் 25 ரூபாய் ஃபீஸ் கேட்டார். எனக்கு ஆச்சரியம். ‘என்ன சார்... எல்லா டாக்டர்களும் 250 ரூபாய் ஃபீஸ் கேட்கிறார்கள். நீங்கள் மட்டும் 25 ரூபாய் ஃபீஸ் வாங்குகிறீர்களே’ என்று டாக்டரிடம் கேட்டேன். ‘அவங்களெல்லாம் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு அந்த ஃபீஸ் வாங்கறாங்க! நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சவன்தானே’னு அவர் போட்டாரே ஒரு போடு. அப்பதான் புரிந்தது நான் போலி டாக்டரிடம் வந்திருக்கேன் என்று.
ஒரு நோயாளி டாக்டரிடம் வந்தார். ‘நீங்கள் எழுதிக் கொடுத்த எல்லா மருந்தும் கிடைத்துவிட்டது. மேலே எழுதியிருக்கும் மருந்து மட்டும் கிடைக்கவில்லை சார்! எல்லா மெடிக்கல்லேயும் கேட்டுட்டேன்.’ அதற்கு டாக்டர் சொன்னார். ‘யோவ்... பேனா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்தேன்ய்யா. அதுதான் மேலே இருந்தது’னு சொன்னார்...’’
_இவை கடந்தவாரம் சென்னை மியூசிக் அகாடமியில் டாக்டர். சிவகடாட்சம் நடத்திய இதய நோய் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியில் எஸ்.வி.சேகர் வெடித்த தமாஷ் சரவெடிதான். பற்றாக்குறைக்கு விவேக், ‘‘இந்த விழாவிற்கு எனக்குப் பதில் ஜோதிகாவைக் கூப்பிட்டு இருக்கலாம். இதயத்தைப் பற்றி அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். அதற்காக அவர் ஊற்றிய அளவிற்கு அவ்வளவு எண்ணெய் ஊற்றிடாதீங்க. வாழ்க்கையில் இரண்டு விஷயத்தை அவாய்ட் பண்ணிடு. ஒன்று தம்மு, இரண்டு ரம்மு.
நெஞ்சுவலிக்கு முக்கிய காரணம் மனைவிமார்கள்தான். பெரிய, பெரிய ஜவுளிக் கடையில் பாருங்கள். வெளியில் பிளாஸ்டிக் சேர் போட்டிருப்பார்கள். அதில் கணவன்மார்கள் உட்கார்ந்து இருப்பார்கள். கடைக்குள் நுழைந்த மனைவி ஒருவாரம் கழித்து வெளியே வருவாள். அதற்குள் கணவனுக்குத் தாடி முளைத்துவிடும். எங்கே என்று தேடும் அளவிற்கு ஆகிவிடுவான்.’’ என்று பேசி கூட்டத்தைக் கலகலப்பாக்கினார்.
தான் எப்படி ஒல்லியானேன் என்று ஸ்ரீப்ரியா தனது உடல் இளைப்பு ரகசியத்தைக் கூறினார்.
‘‘ஏற்கெனவே, பல குடும்பத்தில் நிறைய சோகங்கள் இருக்கு. இதில் மெகா தொடர்களைப் பார்த்து அந்தச் சோகத்தில் மூழ்கி, நாளைக்கு சீரியலில் அவளுக்கு என்ன ஆகும் என்று கற்பனைப் பாத்திரங்களுக்காக கவலைப்படுவதுகூட ஹார்ட் அட்டாக்குக்கு வழிவகுக்கும்’’ என்று கூறி ஒரு டாக்டர் அதிர வைத்தார்.
‘அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை...’ என்று கூறிய ‘ஜெயம்’ ரவியிடம் டாக்டர் சிவகடாட்சம் ‘கவலைப்படாதீர்கள். அப்பா குணமாகி விடுவார்’ என்று கூறி தைரியப்படுத்தினார்.
தலைசிறந்த இதய நோய் நிபுணர்களும் டாக்டர்களும் வந்திருந்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய விதம் அருமை. குறிப்பாக திருச்சியிலிருந்து வந்த டாக்டர் சென்னியப்பன் அழகாக தமிழில் பேசி, விளக்கம் கூறி சபாஷ் வாங்கிவிட்டார்.
பி.கு: எதேச்சையா குமுதம் பக்கம் போனபோது... இதே நிகழ்ச்சியைப்பற்றிய குமுதத்தின் கவரேஜ்தான் மேலே நீங்கள் வாசித்தது.
ருசியான வரவுசெலவு கணக்கு - மாடர்ன் கலோரி
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எவ்வளவு சாப்பிட்டோம் என்றோ, சாப்பிட்ட உணவிற்கு ஏற்றாற் போல எவ்வளவு சக்தியைச் செலவழித்தோம் என்றோ நம்மில் யாரும் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் நாம் ‘சிக்’கென்று இருப்பதற்கான ரகசியமே இந்த இரண்டையும் கவனத்தில் கொள்வதுதான். உதாரணத்துக்கு இதோ ஒரு ருசியான வரவு செலவுப் பட்டியல்!
இது வரவுக் கணக்கு
உணவு கலோரி
அரிசி சாதம் 100 கிராம் 151
ப்ரைடு ரைஸ் 100 கிராம் 210
கோதுமை பிரட் (ஒரு ஸ்லைஸ்) 65
வாழைப்பழம் (ஒன்று) 105
பேரீச்சம்பழம் (10) 230
வனிலா ஐஸ்கிரீம் (1 கப்) 270
மீன் வறுவல் (50 கி) 140
காளான் 60 கிராம் 20
முட்டை முழுவதும் வேகவைத்தது 75
ஒரு கரு மட்டும் வேகவைத்தது 60
வெள்ளைக் கரு மட்டும் வேகவைத்தது 15
முட்டை வறுவல் 90
ஆம்லெட் 100
பீட்சா (சுமார் லு கிலோ) 1300
இது செலவுக் கணக்கு
60 கிலோ எடையுள்ளவர் ஒரு மணி
நேரத்தில் செலவழிக்கும் கலோரி
சும்மா படுத்திருக்கும்போது` 60
உட்கார்ந்து வேலை செய்யும்போது 90
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வேலை செய்யும் போது 150
வாக்கிங் 210
மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நடப்பது 240
வேகமாக ஜாக்கிங் 360
மூச்சிரைக்க ஓடுவது 540
ஜாலியாக நீச்சல் 360
டென்னிஸ் 420
கூடைப்பந்து விளையாடுவது 480
சைக்கிள் ஓட்டுவது (மணிக்கு 25 கி.மீ. வேகத்தில்) 600
புத்தகம் படிப்பது, சாப்பிடுவது, எழுதுவது 90
தரை துடைப்பது, குப்பை கூட்டுவது, அயர்ன் செய்வது 132
குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது 210
நன்றி: குமுதம் சிநேகிதி
மேலே....
பீட்சா (சுமார் லு கிலோ) 1300
என்பது
பீட்சா (சுமார் 1/2கிலோ) 1300
அவசியமான பதிவு.
பயனுள்ள தகவல்கள்.
நன்றிகள்.
அனைவருக்கும் தேவையான அத்தியாவசியமான பதிவு அன்பு
நன்றி
7 வருஷமா காலைல ஒரு மணி நேரம்நடக்கிறேன்.
இரண்டு மாதமா நடக்கவே போகவில்லை.
செயல்களில் வேறுபாடு தெரிகிறதுங்கறது உண்மை அன்பு
அது சரி இந்த பதிவுக்கு வர்றப்ப
///
இதுவரை
முறை என்னையும் சேர்த்து இந்தக்குப்பையைக் கிளறியிருக்கிறோம்...(னு ஒரு ஐதீகம்!)///
அப்படின்னு வலது பக்கம் எண்ணிக்கையோடு இருந்ததே
எப்படி அந்த எண்ணிக்கை சாத்தியம்
கொஞ்சம் சொல்லுங்களேன்
அன்பு மது-,
நல்ல சேதி. என்னைப்போல சாக்குபபோக்கு சொல்லாமல், நடையை என்றென்றும் தொடருங்கள். பாராட்டுக்கள்.
கடந்தவாரயிறுதியில் நடந்த வசந்தஒளி 2005 விழா கொண்டாட்டத்தின் போது சுகாதார மேம்பாட்டு மையம் இந்தியர்களுக்கென்றே Aerobics ஆரோக்கிய ஆட்டம் என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் (தனிதனியே) ஒரு ஒலி/ஒளி வட்டு வெளியிட்டது. இதமான இந்திய இசையுடன் கூடிய வட்டு... உங்களுக்கு வசதியான நேரத்தில், உங்களுக்குப் பிடித்த உடையில்... என்ற கருப்பொருளுடன்.
Anbu ungaluku ellarilaum evlo anbu iruntha ippidi ubayogaman pathivu poduvinga.
நல்ல பதிவு.
ஜெயஸ்ரீ
Post a Comment