Monday, August 30, 2004

அந்திமழை

ஒரு இனிய இசைமழை அந்தியில் ஆரம்பித்து பின்னிரவு இனிதே நிறைவுற்றது.
ஆம்... பிரபலப் பிண்ணனிப் பாடகர் எஸ்.பி.பாலா, பாடகி ஜானகி ஆகியோரின் அந்திமழை இன்னிசை மழை மன்னிக்கவும், நிகழ்ச்சியைத்தான் குறிப்பிடுகிறேன்.

எஸ்பிளனேட் கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்துக்குட் தொடங்கிவிடும் என்று அனைவரும் தெரிந்துவைத்திருந்ததால், மற்ற இந்தியக்கலை நிகழ்ச்சிகளுக்கு வருவது போலல்லாமல் குறிப்பிட்ட நேரத்துக்குமுன் பெரும்பாலோனோர் வந்தமர்ந்திருந்தது - நமக்கும் புதியது, நிகழ்ச்சிக்கும் முதல் சிறப்பு.

ஒலி 96.8ன் ரஃபியின் ஒரு சிறிய முன்னுரைக்குப்பின், திருமதி ஜானகி 'செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே...' ஆரம்பித்தார்கள், அரங்கமேகூடி கையொலி எழுப்பியது. அப்புறம், நிகழ்ச்சியின் தலைப்புப்பாடலான 'அந்திமழை பொழிகிறது...' திருமதி ஜானகி, திரு பாலா இருவருமிணைந்து பாடினர் - மீண்டும் ஒரு பெரிய பாராட்டொலி - ரசிகர்களிடமிருந்து. அப்புறம் அதைவிடச்சிறப்பாக 'மலரே மௌனமா...' அனைவரையும் ரசிக்கவைத்தது.

இதற்கிடையில் பாலாவும், ஜானகியும் பாடுவதைவிட அவர்களுக்கிடையே உள்ள புரிந்துணர்வு மிகவும் பாராட்டத்தக்கது. பாலா அந்தப் பாடலைப்பற்றி கூறும்போது, 'இந்தப் பாடல் நான் தனியா டிராக் பாடினேன், ஜானகிம்மா தனியா வந்து பாடினாங்க. இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் பாடிய உணர்வு இருக்கும். அதான், எங்களுக்குள்ளிருக்கும் 34 வருட புரிந்துணர்வு. நான் எந்தந்த வரிகள்ள குறும்பு பண்ணுவேன்னு அவங்களுக்குத்தெரியும், அவங்க எங்கங்க சில்மிஷம் பண்ணுவாங்கன்னு எனக்குத்தெரியும். அதன்படி, எங்களால அப்படிப் பாடமுடிந்தது' என்று கூறிவிட்டு, பாடும்போதே ஜானகி அவர்களை கொஞ்சம் சீண்டுவது போல் செய்தார்கள். அதற்கு திருமதி ஜானகி, பாடல் முடிந்தபின் சொன்னார், 'சின்னப் பையன், இப்படித்தான் எதாவது குறும்பு பண்ணிண்டே இருப்பாரு... போறாங்க விடுங்க' என்று சொல்லி சிரித்தார்கள். உடன் பாலா, 'அம்மா... நான் எதாவது தப்பு செஞ்சா அடிங்க... ஹிட்டு மேல ஹிட்டு கொடுத்த நீங்க என்ன 'ஹிட்'டுனா என்ன தப்பு?' என்று கூறி சிர்த்தார்கள். இந்த ஒரு தாய், பிள்ளை சேஷ்டை நிகழ்ச்சி முழுவதும் சர்க்கரையாக இனித்தது.

அப்புறம், 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி' உடன் அந்த உணர்வை மாற்ற 'தேனே தென்பாண்டி மீனே...' அப்புறம் பாடல் ஒலிப்பதிவின்போதே பாலாவை சிரமத்துக்குட்படுத்திய 'சங்கீத ஜாதிமுல்லை...' அனயாசாமாக அவருக்குள் கட்டுப்பட்டது. அப்புறம் திருமதி ஜானகியின், 'நெஞ்சினிலே நெஞ்சினிலே...', 'ஊருசனம் தூங்கிடுச்சு' என்று தொடர்ந்தது. அப்புறம் பாலாவின், 'காதலின் தீபமொன்று...'

மீண்டும் ஜானகி 'காற்றில் எந்தன் தீபம்...' ஏற்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள். அதைவிட, 'மச்சான... மச்சானப் பாத்தீகளா...' பாடலை கும்மாளமாய்ப் பாடி, அனைவரையும் தாளம்போடச்செய்து பாடலின் முடிவில், அந்தப்பெண் தன்னோட மச்சான், தனக்கில்லாமல் வேறொரு பெண்ணுக்கு நிச்சயமானவுடன், அதே வரிகளை சோகமாக அந்தப்பெண் பாடுவதாகப் பாடியது அனைவருடைய் மனத்தையும் பிழிந்தது உண்மை.

அதன்பின், பாலா அவர்கள் 'இசைக்கு மொழியில்லை, இப்பல்லாம் என்னிடமோ ஜானகியம்மாவிடமோ 'உங்களுடைய தாய்மொழி எது?' என்று கேட்டால் 'இசை' என்போம். இசையென்பது தெய்வ மொழி' என்றெல்லாம் ஓரளவு முன்னுரை பேசிவிட்டு, 'தேர மேரா பீச்சுமே..' ஹிந்தி பாடலை ஆரம்பித்தவுடன் மீண்டும் ரசிகர் கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக, 'சங்கரா...' என்ற சங்கராபரண தெலுங்குப்பாடலையும் உச்சஷ்தாயில் பாடி பாராட்டை அள்ளிச்சென்றார். சில பாடல்களுக்குப்பிறகு, குழுப்பாடகி திருமதி ரம்யா-வுடன் இணைந்து 'சக்கரை இனிக்கிற சக்கரை...' ஹிட்டைக் கொடுத்தார்.

அப்புறம் இசைஇமையங்கள் இளையராஜா, விஷ்வநாதன் இணைந்து இசையமைத்த 'தேடும் கண்பார்வை...' பாடலை பாலாவும், ஜானகியும் தனது தேனினுமினிய குரலில் கொடுத்தனர். அப்புறம் 'குட்மார்னிங்க்... டூத்பேஷ்டிருக்கு, பிரஷ் இருக்கு எந்திரு மாமா...' என்று ஜானகி குழந்தை மிகவும் இனிமையாகப் பாடி அனைவரையும் ஆச்சரியத்துக்குட்படுத்தியது.

இடையில் உள்ளூர் பாடகர் விஜய் ஆனந்த், எஸ்.பி.பாலாவுடன் இணைந்து 'என்னம்மா கண்ணு சவுக்கியமா...' பாடலை அருமையாக, தைரியமாகப் பாடினார். பாலாவும் நல்ல ஆதரவு கொடுத்து, பாராட்டுத் தெரிவித்தது அவருடைய உயர்ந்த பண்பைப் பறைசாற்றியது. பாடல்வரியொன்றில், விஜய் 'யானைக்கு சின்ன்பூனை போட்டியா' என்று தொடர்ந்தார். பாலா உடனே சிர்த்துக்கொண்டே, 'யாரு யானை ஆரு பூனை?' என்று கேட்டு அனைவரையும் சிரிக்கவைத்தார்கள்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, ஒன்பது நபர் மட்டும் கொண்ட - ஆனால் நவமணிகள் - சென்னை ரகுராஜ் சக்ரவர்த்தி இசைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். அருமையான இசை. எப்போதும்போல, இந்தக்குழுவிலும் என்னை மிகவும் ஈர்த்தவர் தப்ளா கலைஞர்தான். திரு. மதுசூதனனுடைய பத்து விரலும் நர்த்தனமாடுகிறது என்றுதான் சொல்லவேண்டும். அதிலும், முன்னேற்பாடு ஏதுமில்லாமல் ரசிகர்கள் வேண்டுகோளுக்கினங்க திருமதி. ஜானகி - ஹிந்தியின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பழைய பாடலான 'மெஹர்...'ருக்கு அவர் வேறொரு தாளத்தில் ஆரம்ப்பித்து - பாலா கொடுத்த குறிப்பை கனநேரத்தில் புரிந்து தாளக்கட்டை மாற்றி பாடலுடன் இயைந்தது அருமை. அதே போல் ஏற்பாடில்லாமல், 10.30 மணிக்கும் மேலாக ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க பாடிய, 'மார்கழித் திங்களல்லவோ...', 'இஞ்சி இடுப்பழகா' வும் அருமை.

ஆனால், எஸ்பிளனேட் அரங்கில் இதுதான் முதல் இந்திய திரையிசை நிகழ்ச்சியல்ல. கடந்த வருடத்தில் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணாவுடன் வந்து இதே போல் ஒரு சிறிய இசைக்குழுவுடன் ஒரு அருமையான நிகழ்ச்சி கொடுத்தார்.

சரி எது எப்படியிருந்தாலும், பாலாவும் மற்றும் குழுவினரும் பாராட்டியபடி ஒரு அருமையான ரசிகர் கூட்டத்தை சந்தித்த நிறைவு. 2000 பேர் அமர்ந்து அரங்கே நிறைந்திருந்தாலும், கை தட்டல் ஓசை ஒன்றுதான் கேட்டது நிகழ்ச்சியின் இறுதிவரை. மொத்தத்தில் ஒரு அருமையான இசைநிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது என்பது மட்டும் உறுதி.

3 comments:

எழில் said...

அன்பு,

நிகழ்ச்சியினை மிகவும் அருமையாகப் படமெடுத்துப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் வருணனையை, அந்தப்பாடல்களை மனதிற்குள் ஓட விட்டுக்கொண்டே படித்தேன். இசைமொழி இனிது!

Unknown said...

அன்பு, நீங்க ஒவ்வொரு பாடலும் சொல்லும்போது மனசுக்குள்ளே அந்தப் பாடல் ஒலிக்குது. அது தான் ஜானகி, எஸ்பிபி வெற்றின்னு நினைக்கிறேன்.

Anonymous said...

அந்திமழை பொழிகிறது...

படிக்கும்போது பார்க்கும் உணர்வை, கேட்கும் உணர்வை ஏற்படுத்த முடியுமா?
அப்படி முடியும் என்றால் எந்த அளவிற்கு ரசித்து எழுதப்பட்டிருக்க வேண்டும்?
இங்கு அந்தி நேரம், மழை ஒன்றும் பொழியவில்லை... ஆனால் இவர் பதிவில் இன்று 'இசை மழை' பொழிகிறது.

திரு. சாகரன், வலைப்பூவில்