மனிதா!
உனக்கு முன்னால் இருந்து மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய்.
வாழ்த்துக்கள்.
உன் அறிவாலும் அறிவியலாலும் தூரத்தையும் நேரத்தையும் சுருக்கிவிட்டாய்.
நன்றி.
இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்கைக்கோள் பறக்க விடுவாய்.
மகிழ்ச்சி.
மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்துவிடுவாய்.
அற்புதம்.
ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய்.
அபாரம்.
ஒன்றை மட்டும் மறந்துவிடாதே.
மனிதநேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும்.
நமக்கு முன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்றுமண்டலத்தில் இன்னும் இருக்கிறது.
இருக்கட்டும்.
* * * * * * * * *
கவிப்பேரரசு வைரமுத்துவின் "சிகரங்களை நோக்கி" (கவிதை/கதை/கட்டுரை) நூலின் அடிவாரத்தில் கவிஞரின் வரிகளவை. இந்த நூலின் முதல்பதிப்பு 1992-ல் வெளியானது. அன்று முதல், எனக்குப்பிடித்த கவிஞரின் புத்தகங்களில் தலையாயதாக இன்று வரை இருந்து வருகிறது. இதுவரை படிக்காத, ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் - தேடிப் படியுங்கள், கண்டிப்பாக ரசிப்பீர்கள்.
No comments:
Post a Comment