சிங்கையின் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் தொலைக்காட்சி படைப்பாளரும், 'அஃறினை உயர்தினை' சிறுகதை நூலின் ஆசிரியரும், சிங்கையில் பலர் தமிழ் பேச முன்னுதாரணமாய் திகழ்ந்தவரும், பழகுவதற்கினிய நண்பருமான திரு. உதுமான் கனி அவர்கள் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்கள்.
நேற்றிரவு சிங்கையின் வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பான 'சூப்பர் நண்பர்கள் 04/05' போட்டியின் இறுதிச்சுற்றில் தலைமை நீதிபதியாக பணியாற்றிக்கொண்டிருந்தார், தன் இன்முகத்துடன். நிகழ்ச்சி முடிந்தபின் அரங்கிலேயே மயக்கமுற்றநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு - காப்பாற்றமுடியாமல் இறப்பு நேரிட்டிருக்கிறது.
கடந்த சிலவாரங்களுக்கு முன் திரு. மாலனின் புத்தகவெளியீட்டு விழாவில்தான் அவரை முதலும்/கடைசியுமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அவர் பேசும்போதும் சரி, பின்னர் நண்பர் வெங்கடேஷின் நூல் வெளியீட்டில் பேசும்போதும் சரி, அவர் தன்னடக்கத்துடன் குறிப்பிட்டது: "நான் இந்த நூலை பெற்றுக்கொள்வதற்குண்டான என்னிடம் உள்ள ஒரே தகுதி காலம்சென்ற நா.கோவிந்தசாமி அவர்களின் மாணவன் என்பது மட்டும்தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றி" என்றார். கணிணிக்கு முதன்முதலில் தமிழ் சொல்லிக்கொடுத்தவரும், முதல் தமிழிணைய மாநாடு சிங்கையில் ஏற்பாடு செய்த திரு. நா.கோ-வையும் இதுபோன்ற ஒரு திடீர் மரணம்தான் அழைத்து சென்றது.
நேற்றிருந்தவர் இன்றில்லை, காலை வானொலியில் செய்தி கேட்டதிலிருந்து மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அன்னாருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்...
1 comment:
அன்பு,
கடந்த இரண்டாண்டுகாலமய் அவரை அறிவேன்.
மிகச்சிறந்த பண்பாளர்.பார்க்கும்போதெல்லாம் என் மேன்பாடுகளை பற்றி விசாரிப்பார்.
ஆறு வயதில் தாய்.தந்தையை இழந்த அவர்,தன் சொந்த முயற்சியால் உயர்ந்தார்.
சிங்கை மாணவர்களிடையே தமிழ் வளர்ப்பது குறித்தே
எப்போதும் பேசிக்கொண்டிருப்பார்..
அவரின் வசீகர புன்னகைக்குத்தான் நான் முதலில அடிமையானேன்.
இன்று ,அந்த மிகச்சிறந்த நண்பரை இழந்து தவிக்கிறேன்.
Post a Comment