Wednesday, January 26, 2005

Stem Cells - உயிரணு மருத்துவம்...

சன் டி.வியின் சபாஷ் பேட்டிகள் என்று நண்பர் அருண் ஒரு பதிவிட்டிருந்தார். முதலில் ஷாகுல் அமீது பெயர் பார்த்தவுடன் கடந்த சனிக்கிழமை மதியம் வந்த நலந்தானா பற்றிதான் எழுதியிருக்கிறாரோ, முந்திக்கொண்டாரே என்று நினைத்தேன்...

ஆம், ரொம்ப காலத்துக்குப்பிறகு சனிக்கிழமை வீட்டிலிருந்து காலையிலிருந்து (மகள் கார்ட்டூன் நெட்வொர்க்கிலிருந்து கண்விலகியபோதெல்லாம்) சன் டிவி பார்த்திருந்தேன் - அதில் வாய்த்தது சென்ற வார நலந்தானா-வும்.

வழக்கத்திற்கு மாறாக ஷாகுலுடன், 4 மருத்துவர்கள் (ஒருவர் ஆங்கிலம் மட்டுமே பேசும் வெளிநாட்டினர்) அமர்ந்திருந்தனர். எடுத்துக்கொண்ட தலைப்பு ஸ்டெம் செல் (Stem Cells - உயிரணுக்கள்) பற்றியது.

முதல் மருத்துவர் (அந்தப் பெண்மணி Hematologist என்று நினைக்கிறேன). அவர் எளிமையாக, அருமையாக உயிரணு மருத்துவம் பற்றியும், அது தற்போது மருத்துவத்துறையில் வகிக்கும் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார். Thalassemia, Leukemia(இரத்தப் புற்றுநோய்), Anemia (இரத்தசோகை) போன்ற இரத்தசம்பந்தமான அகோரவியாதிகளுக்கு மட்டுமல்லாமல், இருதய, சிறுநீரக, நரம்பியல் போன்ற பல வியாதிகளுக்கும் உயிரணு மருத்துவம், ஒரு தீர்வாக அமைவதாக எடுத்துரைத்தார்.

மற்ற மூன்று மருத்துவர்களுமே Dermatalogist(தோல் வியாதி மருத்துவர்), Plastic Surgens (ஒடடி/வெட்டியல் நிபுணர்கள்:) என்பதால் உயிரணுக்களை Aging பிரச்னைக்கு எப்படி பயன்படுத்தலாம், முக சுருக்கத்தை தள்ளிப்போடுவது போன்றவற்றை எடுத்துச் சொன்னார்கள். அதுபோக, அதில் ஒரு மருத்துவர் சொன்னார் "நாங்கள் உயிரணு என்றொன்று பற்றி தெரியாமலேயே பல வருடங்களாக தொடையிலிருந்தோ, வேறுபகுதியிலிருந்தோ சதையை வெட்டி கன்னக்குழிகள், மற்றப் பகுதிகளை அடைத்தபிறகு - முகம் வழக்கத்துக்கும் மாறாக மிக விரைவில், அதிக பொலிவுடன் திகழ்ந்தது. சமீபத்திய ஆராய்ச்சிதான் சொல்கிறது, அதற்கு காரணம் அதிலுள்ள உயிரணுக்கள்தான்..." என்று.

மற்றப்படி உயிரணுக்கள் அதிகம் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ள தொப்புள்கொடி இரத்தம் (Cord Blood Bank) சேமிப்பைப் பற்றியும் பேசினார்கள். இது பரவலாக்கப்படவேண்டும். தற்போது சேமிக்க ஆகும் செலவு சற்றே அதிகம் - ஆனால் அதன்
பலன் அளவிட இயலாதது. இது பற்றிய மேல் விபரத்திற்கு : சிங்கப்பூரில் உள்ள கார்ட்லைஃப் மற்றும் இதனால் பயனடைந்த விபரங்களுக்கு...

அந்த மருத்துவரே கூறியபடி இந்தியாவிலும் பல இடங்களில் இந்த வசதி இருக்கிறது. இப்படி சேமித்து வைப்பதனால், அந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்கோ, தாத்தா, பாட்டிக்கு வரும் இருதய, சிறுநீரக, இரத்த சம்பந்தப்பட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்கு (HLA ஒத்துவரும் பட்சத்தில்) பயன்படுத்த இயலும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, சொந்தத்தில் திருமணம் செய்துகொண்டவர்கள், தற்போது தாய்மை அடைந்துள்ளவர்கள், அடைய இருப்பவர்கள், திருமண ஏற்பாட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த இரத்தம் சம்பந்தப்பட்ட மேல்விவரங்கள் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது.

பி.கு:
இந்தப் பதிவு தொடர்பான மேல் விபரம், இந்த எச்சரிக்கையின் நோக்கம், அவசியம் அறிய விழைவோர் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

2 comments:

Vijayakumar said...

இந்த தொப்புள் கொடி இரத்த சேமிப்பை நான் அறிந்தது 3 மாதம் முன்னர் தான். கட்டாயம் அதைப் பற்றிய விழிப்புணர்வு வேண்டும் நல்ல பதிவுக்கு நன்றி

Boston Bala said...

relates update:
http://bsubra.blogspot.com/2005/01/study-says-all-stem-cell-lines-tainted.html