Thursday, December 01, 2005

என்னாலா... தமிள் பேசுற...

தமிழை வாழும்மொழியாக தொடர சிஙகையில் தொடர்முயற்சி நடந்துவருகிறது. அதன் ஒரு முயற்சியாக கல்வி அமைச்சு அமைத்திருந்த பாடத்திட்ட மறுஆய்வுக்குழுவின் அறிக்கை சென்றவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் தமிழ்ப் பாட போதனையில் மாபெரும் மாற்றம் அமலாகிறது. தமிழ்ப் பாட போதனை இனிமேல் பேச்சுத் தமிழில் இருக்கும். தமிழ் மொழியில் மாணவருக்கு ஆயுள் முழுதும் நாட்டம் ஏற்படுமாறு செய்யப் பேச்சுத் தமிழில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் எனக் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் பயில்வதில் இருக்கும் சிரமங்களைப் போக்குவதற்காகவும் தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறிய சமூகமாய் உள்ள தமிழ்ச்சமூகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தொடர்ந்து பேச வேண்டும். ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் பேசுகின்ற சூழலை அதிக அளவில் நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வருங்காலத்திலும் வாழும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

வகுப்பறைக்கு வெளியேயும் தமிழ் தழைக்க வழி

தமிழ் வாழும் மொழியாக இருக்கவேண்டுமானால் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் அந்த மொழி வாழ வேண்டும். இது தான் நமக்குள்ள சவால் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்க இளையர் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சொந்தமாகச் செய்வதற் கான வாய்ப்புவசதிகளை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அமைச்சர்.
இளையர்கள் தங்கள் சொந்த பாணியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அவர் களுக்கு முன் பிறந்தவர்கள் விரும்பும் பாணியில் இளையர்கள் செயல்படும் சூழல் இருக்கக் கூடாது. இளையர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தகவல் சாதனங்களில் தங்களின் சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தாங்கள் விரும்பும் பாணியில் வெளியிட அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

நம்முடைய இளையர்கள் பல தரப்பட்ட நடவடிக்கைகளிலும் நேரங்களிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் பொறுப்பைக் குடும்பங்கள், பொதுத்தகவல் சாதனங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் பள்ளிக் கூடங்களுடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கூடத்தை விட்டுச் செல்லும் இளையர்கள் தங்களுடன் தமிழைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் சிறியதாக இருப்பதால் தமிழ் மொழியை வாழும் மொழியாகக் கட்டிக் காக்கும் பணி சீன, மலாய்ச் சமூகத்தைவிட தமிழ் சமூகத்துக்குச் சிரமமிக்கது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ்ச் சமூகம் மிகவும் ஒற்றுமையாக இந்தக் காரியத்தைச் சாதிக்கவேண்டும் என்று சொன்னார்.

தமிழ்ச் சமூகம் பள்ளிக்கூடங்களுடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பாடத் திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க உதவுவதற்காகக் கல்வி அமைச்சு விரைவில் ஒரு குழுவை அமைக்கும் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அறிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தமிழ்ச் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ள தாகவும் பரிந்துரைகள் தொடர்பில் பள்ளிக்கூடங்களுக்கும் மாணவருக்கும் எப்படி எப்படி எல்லாம் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ள சமூக அமைப்புகள் விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளையர்களை இணைத்துக்கொண்டு தமிழ்மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்றுக!

இளையர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும், பகிர்ந்துகொள்ளும் தமிழ்முரசு செய்தித்தாளின் இளையர்முரசு பிற தகவல் சாதனங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்று கல்வி அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழியை வாழும் மொழியாக தொடர்ந்து கட்டிக் காப்பதில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்திகளைத் தருவது மட்டுமின்றி, இளையர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். அத்தகைய வாய்ப்பை தமிழ் முரசின் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வழங்குவதாகவும் தொலைக்காட்சியும் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை வழங்கலாம் என்றும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்ப்பதாக அமையலாம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்ப் பாடத்திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை மேலும் அறிய, கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து...

இது தொடர்பான விரிவான தகவல்களையும், பலரின் கருத்துக்களையும் கடந்த சில நாட்களாக தமிழ்முரசு வெளியிட்டிருக்கிறது அவற்றைப்படிக்க....

தகவல்களுக்கு நன்றி: தமிழ்முரசு, ஒலி மற்றும் கல்வி அமைச்சு.

பி.கு:
இந்தப்பதிவு நான் சிங்கைமுரசில் ஓரிரு வாரங்களுக்குமுன்னர் சிங்கை முரசு: என்றும் தமிழ்வாழ... என்ற தலைப்பில் இட்டது. தேவை(!?) கருதி இங்கே மறுபிரசுரம்:)

பாடத்திட்ட மறுபரிசீலனைக்குழுவின் பரிந்துரைப்படி சிங்கை போன்ற வெளிநாடுகளில் தமிழ் வாழ உரைநடைத்தமிழை விட பேச்ச்சுத்தமிழ் கண்டிப்பாக உதவி செய்யும். இது தமிழ்பேச மேலும் தூண்டும். தற்போது பெரும்பாலும் பள்ளியில் கற்கும் உரைநடைத்தமிழை அப்படியே பேசுவதைப் பார்க்கிறோம். இட்து மிகவும் செயற்கையாக இருக்கிறது. இது இங்கு வரும் தொலைக்காட்சி நாடகங்களில், நிகழ்ச்சிகளில்ல் பேசும் இளையர்களிடமும் வெகுவாகாப் பார்க்க முடிகிறது. அவ்வாறு பேச இயலாதவர்கள் தமிழ் பேசுவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

என்னைக்கேட்டால், மாற்றம் பள்ளியிலிருந்து வருவதைவிட வீட்டிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும், தொடர்ந்து தமிழ் வாழ நடைபெற்றுவரும் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

19 comments:

துளசி கோபால் said...

நல்லதுலா. அதுக்குத்தான்லா நான் ஏற்கெனவே பேச்சுத்தமிழில் ப்ளொக் எழுதறேன்லா:-))))

Anonymous said...

முக்கியமாக கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்துக்கு தமிழ் தெரியாது என்பதைச் சொல்ல மறந்து விட்டீர்களே? தமிழ் தெரியாத தமிழர்!!!

ஜோ/Joe said...

நல்ல செய்தி.
தகவலுக்கு நன்றி

தாணு said...

சென்னை மாதிரி இடங்களில்கூட தமிழ் பேசுவது கெளரவக் குரைச்சலாகக் கருதப்படும்போது, சிங்க்ப்பூரில் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது

சிங். செயகுமார். said...

அமைச்சரின் நட வடிக்கைகள் நல்ல முன்னேற்றம் பெறட்டும்! நன் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் அன்பு

"டமிளு வால்க! said...
முக்கியமாக கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்துக்கு தமிழ் தெரியாது என்பதைச் சொல்ல மறந்து விட்டீர்களே? தமிழ் தெரியாத தமிழர்!!!"


மற்றும் சில தமிழ் அமைச்சரை விட்டுடீங்களே

மணியன் said...

நல்ல முயற்சி. பேசும்தமிழ் என்றால் எந்த மாவட்டத் தமிழ் என்று பிரச்னை வருமே , முக்கியமாக சென்னையில் :)

Anonymous said...

தமிழ் தெரியாதவர் எப்படி தமிழர் ஆவார்???
கொஞ்சம் விளக்கவும்!!!!

மதுமிதா said...

தேவையான நேரத்தில் தேவையான பதிவு.
பதிவுக்கு நன்றி அன்பு

Unknown said...

//ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில்//

எங்க? சிங்கப்பூர்லயா? கேன்லா? கொரக்ட்ன்னு ரொம்ப அருமையான ஆங்கிலம்ல அங்க!.

// எப்படி இருந்தாலும், தொடர்ந்து தமிழ் வாழ நடைபெற்றுவரும் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

இதுதாங்க நானும் சொல்ல வாரேன்., ஒரு ரெண்டுங்கெட்டான் சமுதாயம் அல்லவா வளர்கிறது நம்மிடம். இங்க என்னதான் வீட்டுல தமிழ் சொல்லிக்குடுத்தாலும்., நம்ம கேள்வி கேட்டம்னு வையுங்க... ஆங்கிலத்திலதான் பதில் சொல்லுதுங்க. இதற்காக என் பெண்ணைக் கடிந்து கொண்டபோது ஒரு நண்பர் சொன்னார்., ஏங்க., நீங்க இங்க புள்ளய மட்டும் வளருங்க (தமிழ வேணாங்கிறார்). அதுக்கு இன்ட்ரஸ்ட் இருந்துதுன்னா அவளாகவே உங்களைப் பார்த்து தமிழ் பேசுவாள். என்னமோ போங்க! சிங்கப்பூர்லயாவது தமிழ் படிக்க முடியுது.

அன்பு said...

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

துளசிக்கா...
அதனாலதான் உங்கள்ட்ட கதைகேக்கறதுக்கு நிறையப்பேர் இருக்கோம்:)

டமிளு வால்க!
அவருடைய திறைமை யுடன் ஒப்பிட தமிழ் தெரியாதது ஒன்றும் பெரிதல்ல என்று சொல்வேன். அதுபோக, அவர் சமீபகாலமாக ஆங்கிலத்தில் எழுதிவைத்தாவது(?) - இந்திய நிகழ்ச்சிகளில் தமிழில் உரையாற்றுகின்றார். அதுபோக அவர் அரசில் இருப்பதால்தான், இதுபோன்ற முன்னெடுப்புகள் சிறப்பாக நடைபெறுகிறது.

தாணு,

சென்னை மாதிரி இடங்களில்கூட தமிழ் பேசுவது கெளரவக் குரைச்சலாகக் கருதப்படும்போது, சிங்க்ப்பூரில் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது

வெளி நாட்டில்/மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழ் ஒரு அடையாளம். அதனால், குறைந்தபட்சம் வீட்டிலாவது தமிழ் பேசி - தமிழை வாழவைக்கவேண்டும். அதற்கு இங்கு அரசும் உதவுவாதால் சிறப்பாகவே இருக்கிறது.

ஒரு செய்தி, என்னுடைய மகள் தமிழில் எழுதிய கடிதத்தை - பெங்களூரில் இருக்கும் தங்கை மகள் வாசிக்க இயலவில்லை. ஆனால் கன்னடம் வெகு அழகாக பேசுகிறாள். அவர்கள் ஒருவேளை, ஓரிருவருடங்கள் கழித்து ஊர் திரும்பி தமிழ்படிக்க எப்படி இயலும். அதை மனதில் கொண்டு பாலர் பள்ளியில் இருந்தே - சற்று தொலைவு/மற்ற சிரமங்கள் இருந்தாலும் - இங்கு தமிழ் படிக்கவைக்கிறோம்.

சிங். செயகுமார்...

மற்றும் சில தமிழ் அமைச்சரை விட்டுடீங்களே

திரு. தர்மன் அவர்கள் போலவே... இலங்கைப்பின்புலம் இருந்தாலும் துணைப்பிரதமர் பேரா. ஜெயகுமார் மற்றும் திரு. விவியன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ் தெரியாதுதான் - ஆனால் அவர்களின் திறமைக்கும், நமது இந்திய பிரதிநிதித்துவத்துக்கும் சில இழக்கத்தான் வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் அதை ஈடுசெய்யும் வகையில் தமிழ் தழைக்க, இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு வெகுவாக உதவியே வருகின்றனர். மேலும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்ல தமிழில் உரையாற்றுகின்றனர்.

இதை நினைத்து நாம் பெருமைப்படலாம்... இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழில் பேசவே ஏதேதோ அங்கீகாரம் சிலவருடங்களுக்கு முன்னர்தான் வழங்கப்பட்டது. ஆனால் வெளிநாடொன்றில்... பலகாலமாக அதிகாரபூர்வமாக தமிழில் பேசலாம். அரசு அறிக்கைக்கள், அறிவுப்புகள் தமிழில் இருக்கிறது, இன்னும் பல... உங்களுக்கே தெரியும்!

மணியன்,
நல்ல முயற்சி. பேசும்தமிழ் என்றால் எந்த மாவட்டத் தமிழ் என்று பிரச்னை வருமே , முக்கியமாக சென்னையில் :)

இது ஒரு அடிப்படைச் சிக்கல். இது பலருக்கும் தெரிந்தே இருக்கிறது. இங்கு சிங்கையில் வட்டார வழக்கு என்று இல்லா விட்டாலும் நானே... அவர்கள் என்பதை - அவங்க, அவுக, அவுங்க என்று இஷ்டத்துக்கு சொல்கிறேன். இதை எப்படி நடைமுறைப்படுத்துவது, எதை ஏற்றுக்கொள்வது. அதற்கு கல்வியமைச்சும், தமிழாசிரியர்களும், பெற்றோர்களும்... இயைந்து சில ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். முதலில் சிலகாலத்துக்கு பேச்சுத்தமிழ் - தேர்வுக்கு உட்படாது. கட்டம் கட்டமாக.... இந்த பேச்சுத்தமிழும் ஒரு கட்டுப்பாட்டுடன், வழிநடத்தலுடன் அமலாகும் என்று தெரிகிறது.

Anonymous,
தமிழ் தெரியாதவர் எப்படி தமிழர் ஆவார்???
கொஞ்சம் விளக்கவும்!!!!


நல்ல கேள்வி. இந்த அடையாளத்தை தொலைப்பதைத் தவிர்க்கத்தான் இந்தப்பாடு.
ஆனால், 'என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது' என்பது இப்போதெல்லாம் பெருமையாக அல்லவா இருக்கிறது. தாணு அதைத்தானே சொல்கிறார்.

APDIPODU,

//ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில்//
எங்க? சிங்கப்பூர்லயா? கேன்லா? கொரக்ட்ன்னு ரொம்ப அருமையான ஆங்கிலம்ல அங்க!.


நீங்கள் சொல்வது சரிதான். அதையும் அரசு உணர்ந்தே இப்போது Speak Good English இயக்கங்களை ஆரம்பித்து ஊக்குவிக்கிறது.

இதுதாங்க நானும் சொல்ல வாரேன்., ஒரு ரெண்டுங்கெட்டான் சமுதாயம் அல்லவா வளர்கிறது நம்மிடம்.
இந்தப் பிரச்னை வெளிநாட்டில் இருப்பதால் அல்ல... பெங்களூரில், டெல்லியில், பம்பாயில் ஏன் சென்னையிலேயே இருக்கிறது.

ஜோ/Joe said...

அன்பு,
உங்கள் பொறுமைக்கும் ,அருமையான பதில்களுக்கும் தலைவணங்கி பாராட்டுகிறேன்.

அன்பு said...

ராஜ்,

நீங்கள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரை (NMP) (அதிகாரபூர்வமாக) நியமிக்கும் அதிபராகவே இருந்தால்கூட சற்றே சிரமம் - எனக்கு அடிப்படைத் தகுதியே இல்லாததால்!

ஜோ,
நன்றி.
அப்புறம், என்ன அடிக்கடி இப்பல்லாம் தலை/மண்டைஓடுன்னு பேசிட்டிருக்கீங்க:)

ஜோ/Joe said...

//இப்பல்லாம் தலை/மண்டைஓடுன்னு பேசிட்டிருக்கீங்க//
Nadchathiramahi mandai kalanthuruchunnu Ninaikkuren ..he he

அன்பு said...

அன்பு ராஜ்,

என்னுடைய பதிலில் சிரிப்புப்புக்குறி தேவையான இடத்தில் போடாமல் விட்டிருந்தாலும், நான் அதை நகைச்சுவையாகத்தான் எழுதினேன், நம்புங்க சார்...

அனைவருக்கும்,

பேச்சுத்தமிழை வளர்க்கும் முயற்சியாக ஒலி 96.8ல் படைப்பாளர்கள் (எனக்குத்தெரிந்து விமலா) மாணவர்களுக்கென்றே சிறப்பு நேரம் ஒதுக்கி கலந்துகொள்ளச்செய்கின்றார்கள். தமிழ்முரசில் தொடர்ந்து மாணவர்முரசு முழுக்க மாணவர்களே உள்ளடக்கம், வடிவமைப்பு உட்பட ஆசிரியர் பொறுப்பேற்கின்றார்கள். வசந்தம் தொலைக்காட்சியின் 'எதிரொலி' நிகழ்ச்சியில் பங்கேற்க மாண்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது (தொடர்புகொள்ள tamilca@mediacorpnews.com). அதனால் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்புவோம்.

ஞானவெட்டியான் said...

வட இந்தியாவில் "ஹிங்கிலீஷ்", தமிழகத்தில் "தமிங்கிலம்", தொல்லைக் காட்சி அழுவாச்சிகளில், "ஷங்கர், ஷக்தி, வெல்லாட்டுக்கு...."

இந்த காலகட்டத்தில் வசிக்கும் நாமென்ன செய்ய இயலும்?

மஞ்சூர் ராசா said...

நல்லா இருக்கு.
நம்மூர்லெ எப்ப வரும்?

(பேச்சுத் தமிழ்?)

Anonymous said...

சந்துல சிந்து பாடற மாதிரி இருந்தாலும், சும்மா கில்லி மாதிரி ஜிவ்வுன்னு எழுதறம்மா! நான் மெட்ராஸ்காரன், கொஞ்சம் அப்படி இப்படிதான் பேசுவேன். ஆனா மனசு தங்கம். வரட்டா?

http://360.yahoo.com/isr_selva

நிலா said...

Anbu
Join the chain:

http://nilaraj.blogspot.com/2006/03/blog-post_03.html

Anonymous said...

வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ்!

அம்புட்டுத்தேன் நான் சொல்றது..