Tuesday, May 24, 2005

வேணுமா... வேணாமா....

தமிழ்... தமிழ்... தமிழ்....

என்று (வலைப்பதிவு)உலகில் எங்கு சென்றாலும் ஒலிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ, அசிங்கமோ தமிழில் ஒலிக்கிறது. தமிழைப் பழித்தாலும் இங்கே வருகிறது, தமிழைப் பாராட்டினாலும் இங்கே வருகிறது. கடந்த சிலவருடங்களாக இணையத்தின் மூலமும், குறிப்பாக இப்போது வலைப்பதிவுகள் மூலமாகவும் முன்னெப்பேதும் இல்லாத அளவு தமிழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் கணிணி மென்பொருட்களை தமிழ்படுத்துததல், தமிழ் வழி கல்வி, தமிழிலேயே அனைத்தையும் படிக்கவேண்டும் போன்ற பல கருத்தாடல்கள் இங்கே.

அதுக்கென்ன இப்போ...
இதான் விடயம்.... ஒரு சந்தேகம்:

சீனாவிலும் (கொரியா, தைவான், ஹாங்காங்), ஜப்பான் போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில், கக்கூசில் எங்கும் இருக்கிறது. ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது என்ற ஒரு கூற்று ஒரு புறமும், அவர்கள் அவர்கள் மொழியிலேயே படிப்பதால் - ஆங்கிலமே தெரியாமல் சிரமப்படுகின்றனர் என்பது இன்னொருபுறமும் தெரியவருகிறது.

இங்கு சிங்கை நூலகத்துக்குச்சென்றால் மாண்டரின்(சீன) மொழியில் எல்லா வகையிலான நூல்களும் வெளிவருகிறது.

Image hosted by Photobucket.com

எங்களுடைய நிறுவனத்தின் சுசோவ் (Suzhou - China) பிரிவிலிருந்து வருபவர்கள் கணிணியிலிருந்து பார்ப்பதெல்லாம் சீன மொழியில்தான் வருகிறது. ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வருத்தப்படுகின்றனர். இதே நிலை ஜப்பானியர்களுடன் தொடர்புகொள்ளும்போதும்.

மெக்ரா-ஹில் போன்ற பிரபல பதிப்பகங்களே புத்தகங்களை வெளியிடுகின்றன. என்னைப்பொருத்தவரை தனிப்பட்டமுறையில் இதுபோன்று நானும் எனக்குத்தெரிந்த தமிழில் படித்துப்புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இதுபோன்ற நிலையை நோக்கித்தான் நாம் முன்னேறுகிறோமா, இதற்காகத்தான் இந்தப் போராட்டங்களா?

Image hosted by Photobucket.com

சீனா, ஜப்பான் போல் இந்தியா மன்னிக்கவும் நம் தமிழகம் (மொழியில் ) ஆவது நல்லதா, கெட்டதா - வேணுமா, வேணாமா?

11 comments:

-L-L-D-a-s-u said...

நல்லவேலை ஜப்பானியருக்கு இங்கிலீஷ் புலமை இல்லை ..

Sri Rangan said...

உங்கள் நாக்கம் நல்லது!பதிவும் நல்லது.தாய்மொழியினில் கற்பவர்களே அதிசிறந்த பெறுபேறுகளைப் பெறமுடியும்.இதை எனது அநுபவத்தில் கூறுகிறேன்.தமிழ்,ஆங்கிலம்,டொச்சு,பிரஞ்சு என்று இந்த மொழிகளில் பரிச்சியமிருப்தால, கூறுகிறேன்:தமிழால் முடியாததென்பது பொய்!தமிழ் உலகமொழிகளோடு போட்டியிட முடியும்.ஆனால் அதற்கென்றொரு நாடுதாமில்லை.நாடும்,பொருளாதாரப்பலமுமிருந்தால் தமிழின் நிகர்சொல்லத்தேவையில்லை.ஈழத்தில் தமிழுக்கு உயிர்விடுவதும் இந்த மொழியைக் காக்கவே!

ஜேர்மனியில் தாய்மொழியைத்தாம் ஆழமாகத் தெரிந்துவைத்துள்ளார்கள். மற்றைய மொழிகளையொரு சிறப்புப் பாடமாகக் கற்கிறார்கள்,அவ்வளவுதாம்.தாய் மொழியைக் காத்தல் அந்தந்த மொழிபேசுபவர்களின் இருப்பைக் காத்தலாகும்.இதில் விமர்சனத்துக்கு இடமில்லை.

அன்பு said...

அன்புக்குரிய தாஸ் மற்றும் திரு. ரங்கன் உங்கள் பின்னூட்டத்துக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Voice on Wings said...

அன்பு, நல்லா கேட்டீங்க. சீனர்கள், ஜப்பானியர்களெல்லாம் இருக்குமிடம் வெகுதூரம். நாம் ஏணி வைத்தாலும் எட்ட முடியாதது. ஆனால் எனக்கென்னவோ இந்த போராட்டங்களெல்லாம் ஆக்கபூர்வமான ஒரு இலக்கை நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லை. தமிழில் ஒரு 500 பேர் வலைபதிவது அந்த இலக்கை நோக்கி ஒரு சிறிய முன்னேற்றம். 500 ஐந்தாயிரமோ, ஐந்து லட்சமோ ஆகுமானால், பெருவெற்றி. இருக்கும் 500 பேர்களும் இந்த போராட்டங்களைக் குறித்து நேரவிரயம் செய்து கொண்டிருப்பது அந்த இலக்கிலிருந்து ஒரு சிறிய பின்னடைவு என்று கருதலாம்.

அதுசரி, இந்தியா மன்னிக்கவும் தமிழகம்?

Vijayakumar said...

அன்பு, போர்டுல (சாரி பெயர் பலகையில) ஆங்கில பெயரை அழித்தால் மட்டும் தமிழ் அப்படியே தளைத்தோங்கி விடுமென்று எப்படி தான் மரமண்டைகளுக்கு தோன்றுகிறதோ தெரியவில்லை. போனவாரம் சிங்கப்பூர் வலைப்பதிவர் கூட்டத்தில் சிங்கை கிருஷ்ணன் கூறியதை கேட்டிருப்பீர்கள். அதாவது அவர் சிங்கப்பூரை சுத்த நகரமாக்க அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சியை சொன்னார். ஞாபகம் இருக்கிறதா?

அவர் சொன்னதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்கிறேன். அதாவது சுத்தம் என்பது என்ன என்பதை வளர்ந்தவர்களுக்கு சொல்லி திருத்துவதை வீண் என்று அறிந்து, சுத்தம் பற்றிய பாடத்தையும், நடைமுறைகளையும் பள்ளிகளில் சிறார்களுக்கு போதித்தனர். அதன் பயன் உடனடியாக பார்க்க முடியவிட்டாலும், பல ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் அந்த பலனை அனுபவிக்கிறீர்கள். அவர் சொன்ன கருத்து மிக மிக ஆழமானவை.

அந்த அரசியல்வாதிகளின் நோக்கம் நல்ல நோக்கம். ஆனால் அத்துடன் விளம்பரம் என்ற சுயவிருப்பத்தையும் சேர்த்து நல்ல ஒரு நோக்கத்தை சாக்கடையாக ஓட விடுகின்றனர். தமிழை அழிவில் இருந்து காப்பாற்ற பிரச்சனையின் அடிவேரைப் பிடித்துப் பார்க்காமல் கிளைகளை வெட்டி என்ன செய்யபோகிறார்கள் (வெட்டுவது தான் கைவந்த கலையாச்சே). திரும்ப திரும்ப பிரச்சனை துளிர் விட்டு கிளைத்து ஓங்கி வளரும். தமிழ் அழிவை தடுக்க ஏன் வளரும் குழந்தைகளை தயார்படுத்தக் கூடாது. இன்று நட்ட மரத்தில் நாளை கனி பறிக்கலாம்.

அதோ அப்துல்கலாம் ஏன் பள்ளி மாணவர்களையே குறி வைக்கிறார்?

அரசியல்வாதிகள் கொஞ்சம் சிந்தித்தால் நல்லதுல்ல.

அன்பு said...

ஆமாம் கிருஷ்ணண் ஐயா* சொன்னது உண்மை - ஆனால் அதுக்கும் அங்கே வழியில்லையே. பாலர் பள்ளியிலிருந்தே ஆங்கிலம் - ஆங்கிலம் - ஆங்கிலமட்டுமே அத பத்தி ஓரிருவருடங்கள் முன்னர் பேசும்போதும் இதேபோன்று ஒருகூட்டம் அதுக்கும் ஏதெதோ சொல்லி உச்சநீதிமன்றம் வரை சென்று தடைவாங்கியது.

அதனால என்ன பண்ணலாம்?

எனக்கு சீன, ஜப்பானியர் போல எங்கும் என்மொழி என்று பார்க்கத்தான் கனவு என்றாலும் - குறைந்தபட்சம் நான் தமிழில் பேசினால் சக தமிழன் தமிழ் பேசினால் போதும். அதே நிலை நாளை என்னுடைய மகளுக்கும், பேரனுக்கும்... அதற்கு வழியில்லையென்றால் ஏதாவது செய்யோணும்.

* கடந்த திங்கள்கிழமை காலை வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் இயக்குநர் 'பொன்னுமணி' உதயகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் - நிகழ்ச்சியை வழிநடத்திய பெண்மணி (ரேவதியோ/கௌரியோ - எவ்ளோ ஒலக அறிவு:)

"ரொம்ப நன்றி ஐயா"
உடனே அவர், என்னங்க ஐயா, ஐயா-ன்னு சொல்லி கொஞ்சம் வயதான தோற்றத்தைக் கொண்டுவந்துட்டீங்க என்றார்.

யோசித்துப்பார்த்தால், சார் என்று சொல்லும்போது தோன்றாத அந்த உணர்வு ஐயா என்று சொல்வதில் ஏன் தோன்றுகிறது. அல்லது "சார்" என்பதற்கு மாற்றுச்சொல் என்ன? நாம் Dear Sir என்ற அதே தொனியில் "அன்புக்குரிய ஐயா" சொல்வதில்லை ஏன்?

அன்பு said...

தமிழ் ஆர்வலர்களின் போராட்டம் தேவையா? என்ற தலைப்பில் பிபிசி-யில் வந்துள்ள செய்தியும், பேராசிரியர் நன்னன், முனைவர் திருமலை உடனான செவ்வியும்.

அன்பு said...

VoW உங்கள் கருத்துக்கு நன்றி.
(அதுக்கெதுக்கு நன்றியா.... அதுதான், அதுக்குத்தான்:)

Voice on Wings said...

//அதுதான், அதுக்குத்தான்:)//

அன்பு, சுத்தமாக விளங்கவில்லை :)

எனினும் உங்கள் பதிவு என்னைக் கவர்ந்ததன் காரணம், ஏறக்குறைய இதே கருத்துக்களை நான் ஆங்கில வலைப்பதிவொன்றில் பதித்திருக்கிறேன். பொதினப் பரிமாற்றங்களெல்லாம் (business transactions ;-) ) தமிழில் நடந்தேறினால் அவற்றில் பங்குபெறும் மக்கட்தொகையும் அதிகரிக்கும் வாய்ப்புண்டு. நாட்டில் காணப்படும் பொருளாதார வளர்ச்சிகளும் கடைநிலை மக்கள் வரை பரவும் சாத்தியமுமுண்டு. இது நனவாக வேண்டுமென்றால் இராம. கி. மற்றும் சிறீ ரங்கன் அளவிற்கு தமிழை கையாளும் திறனை பற்பலர் அடைந்திருக்க வேண்டும். (நுட்ப சாத்திரங்களையெல்லாம் தமிழில் குறிக்கவேண்டுமல்லவா?) அது நடந்தால் தமிழிலேயே அலுவல்களை நடைபெறச் செய்யலாம். எப்படி வசதி? :)

Online Security Tips and Tricks for Kids said...

அன்பு, நல்ல தலைப்பு உங்கள் வலைபதிப்பு.. கண்டிப்பா வேணும்..வேணும்... உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், தமிழ்நாட்டில் பள்ளிகளில் முதல் பாடமாக தமிழும், இரண்டாம் பாகமாக ஆங்கில அல்லது இந்தி அல்லது பிரஞ்சு எடுக்கலாம்.. ஆகவே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஒன்றும் ஆங்கிலத்தை அல்லது நமது சந்ததியினர் ஆங்கில புலமை அடைவதை தடுக்க முடியாது.. ஆனால் தமிழை கட்டாயமாக்கவிட்டால் கண்டிப்பாக தமிழில் எழுத நம் சந்ததியினர் ரொம்ப கஷ்ட பட வேண்டும்.. (நீங்கள் எனது வலைபதிவை பார்த்தீர்களா, எத்தனை எழுத்து பிழை, ஏன் என்றால், நான் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது.. )ஆகவே எங்கும் தமிழ் எதிலிலும் தமிழ் வேண்டும் வேண்டும்.. கூடவே ஆங்கிலமும் இருந்தால் தப்பில்லை..

enRenRum-anbudan.BALA said...

அன்பு,

//சீனா, ஜப்பான் போல் இந்தியா மன்னிக்கவும் நம் தமிழகம் (மொழியில் ) ஆவது நல்லதா, கெட்டதா - வேணுமா,
வேணாமா?
//
தெரியலையேம்மா !!! (நாயகன் படத்தில், "நீங்கள் நல்லவரா, கெட்டவரா ?" என்ற கேள்வி வரும்போது, கமல்
சொல்வதை நினைத்துப் பார்க்கவும் :))

பார்க்கவும்:
http://balaji_ammu.blogspot.com/2005/06/book-meme.html

என்றென்றும் அன்புடன்
பாலா