Friday, June 10, 2005

புத்தக சங்கிலி... என்னோட பங்குக்கு...

வணக்கம்.

இந்த ஒரு சில வாரங்களாக வேலைப்பளு அழுத்துவதால் தமிழ்மணத்துக்குக் கூட அடிக்கடி வர இயலாத நிலை. இதற்கிடையில் இந்த புத்தகவிளையாட்டுத் தொடர் வேற ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது - அப்புறம் வேலை ஓடுமா... கொஞ்ச நேரத்துக்கொருதடவை இப்ப யாரு எழுதியிருக்கிறாங்க, என்னென்ன புத்தகங்கள், அவங்களோட அனுபவங்கள்னு ரொம்ப சந்தோசமா படிச்சிட்டிருந்தேன். அதிலும்
சிங்கை நூலகத்தின், வாசிப்போம் சிங்கப்பூர்! நிகழ்வின்போது இந்த புத்தகச்சங்கிலி அமைந்தது இன்னும் சிறப்பு. இந்தப் பதிவுகளைத் தொகுத்து ஒரே இடத்தில் இட்டால் பயனுல்லதாயிருக்கும், பார்க்கலாம்.

ஒருபக்கம் நம்பள யாரும் கூப்பிடல்லையேன்னு ஒரு யோசனை.... அதே நேரம் குமார், விஜய்னு புயல் நம்ப இடத்துக்கு நெருங்கிய உடனே அய்யய்யோ யாராவது நம்பளைக் கைகாட்டிட்டா என்னை எழுதுறதுன்னு ஒரு பயம்வேற... அப்படியே நேற்றைக்கு வேலையில், விட்டுட்டேன்.

இன்னிக்கு காலைல வந்துபார்த்தா நண்பர்கள் கோபி, பாலா, நவன் ஆகியோர் என்னோட பேரை தெரியாத்தனமா சொல்லிருக்கிறாங்க... அவங்களுக்கு என் நன்றி.

இப்போ என் பங்குக்கு... :

எல்லாரும் தன்னுடைய முதல் வாசிப்பாக குறிப்பிடுவது அம்புலிமாமா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ் வகையறாதான். ஆனால் எனக்கு அறிமுகமான முதல் புத்தகமே குமுதந்தேன்... தேன் குடித்தவண்டாய் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!?
(இத வச்சுட்டு இந்தப்பதிவ மேல படிக்கணுமா வேணாமான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க:)

அதுக்கு முன்னாலல்லாம் கிராமத்துல மடத்துல வர தினத்த்ந்தி, தினகரன், தினமலரை பெரிசுங்க இல்லாதநேரம் சண்டை போட்டுட்டு படம் பார்ப்போம். வாரயிறுதியில் ஊருக்குவரும் அப்பா வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் பையத்தொறந்து புது குமுதத்துக்கு அக்காவோடு ஒரு சண்டை நடக்கும். கொஞ்சநேரம் படம் பார்த்து, ஆறுவித்தியாசம் பார்த்து தூக்கிப்போட்டுட்டு பையுள் இருக்கும் மக்ரூன், மிக்ஸர் பக்கம் கவனம் போய்டும்...

இப்படியே போய்க்கிட்டிருந்த வாழ்க்கை, பக்கத்துவீட்டில் விடுமுறைக்கு கிராமத்துக்குவரும் ரேவதி குடும்பத்தார் ஊரிலிருந்து கொண்டுவரும் ராஜேஷ்குமார், பிகேபி, சுபா புத்தகங்களால் நாவல் படிக்கும் அளவுக்கு வளர்ந்து...(ரொம்ப முக்கியம்... :) பள்ளியிறுதிவரை இவர்கள் மட்டும்தான் பரிச்சயம். பின்னர் கல்லூரிக்கு சென்றபின் வயதுக்கேத்த எல்லா புத்தகங்களின் பரிச்சயமும் வந்தது.

இதற்கிடையில் சுஜாதா அறிமுகமாக, தினமணிக்கதிர் போன்றவற்றுல் வரும் கட்டுரைகளை புரியாமல் படித்துவைப்பேன். பின்னர் பாலகுமாரன் அறிமுகமானாலும் ஆனார்... பாலகுமாரன் என்று ஒரு பேப்பரில் எழுதியிருந்தால்கூட அதையும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியே கவிதைகள் கொஞ்சம் ஈர்த்தது. வைரமுத்து வசப்பட்டார். பாலகுமாரன்/வைரமுத்து கூட்டணி நண்பர்கள் மத்தியில் என்னை பிரபலப்படுத்தியதாலும், என்னைக்கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க வைத்ததாலும் முதன்முதலாக புத்தகங்கள் காசுகொடுத்து வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். ஒருமுறை ஏதோ படித்தவேகத்தில் கவிதைநடையில் ஒரு கடிதம் எழுது கவிஞருக்கு அனுப்பி, உங்களை சந்திக்க விழைகிறேன் என்று சொல்ல - ஈரோட்டில் வானமே எல்லை படவிழாவுக்கு வருகிறேன், முடிந்தால் வந்து சந்தியுங்கள் நண்பரேன்னு பதில் எழுதியது நண்பர்களிடம் மாட்ட - வைரமுத்துவின் பாஸ்கரன் லெவலுக்கு இந்த பாஸ்கர் பந்தா உட்ட காலமுண்டு.

அப்போதெல்லாம் வரும் நாவல் டைம், பாக்கெட் நாவல் அது இதுவென ஜி.அசோகன் (சார் இப்ப எப்படி இருக்காருன்னு தெர்ல) என்ன புத்தகம் போட்டாலும் வாங்கியகாலமுண்டு. சுஜாதா சார் வேற அப்ப, நான் மாதாந்திர நாவல்ல எழுதமாட்டேன் - அத பயணத்தின் போது படிச்சிட்டு இறங்கும்போது தூக்கிப்போட்டிருவாங்கன்னு சொல்லி - எண்ட்ட வாங்கி கட்டிண்டார்:)

அப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை அப்புறம் நான் கவிதை படிப்பேன்னு நாலுபேரு ஏத்தி விட்டதால கவிக்கோ, மீரா, மு. மேத்தா போன்றவர்கள் பக்கம் விரிவடைந்து அப்படியே போய்க்கொண்டிருந்த பயணம் இங்கு சிங்கப்பூரில் 96ல் வந்ததில் இருந்து கொஞ்சம் காசு கொடுத்து வாங்குவது அடங்கியது.

அப்புறம் இங்கு சிங்கை நூலகம் வாசிப்புக்கு பெரிய தீனி போட்டது... எனக்கு வேணும்னு நேரந்தவறாமல் சென்று நம்ப பங்குக்கு வாங்கினாலும் (முட்டியிலே பசித்ததால்) அதிகம் சாப்பிடுவதில்லை. இருந்தாலும் எனக்கு பிடித்த இடம் - புத்தகமும், புத்தகம் சார்ந்த இடங்களும்தான். அதிலும் சிங்கை நூலகங்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள வசதிகளுக்காகவே நேரம்கிடைக்கும்போதெல்லாம் சும்மா புத்தகத்தை நோண்டிண்டேயிருப்பேன்.

சிங்கை தேசிய நூலகத்தின் புதிய கட்டிடம வேறு அடுத்தமாதம் திறக்கப்பட இருக்கிறது. அதன் பிரமாண்டத்தையும், வசதிகளையும் பார்க்க...

வாரந்தவறாமல் நூலகம் போவேன் தொழில் சார்ந்த ஒரு நாலு தலையணைகள், தமிழில் சில என்று அள்ளி வருவேன். கொஞ்சநாள் கழித்து மின்னஞ்சலில் ஞாபகமுறுத்தல் வந்தால் மறுவாரம் கொண்டுசென்று போடுவேன் - பல நேரம் அபராதத்துடன். இருந்தாலும், திரும்பவும் ஒரு 8 புத்தகங்களோடு வீடு திரும்புவேன். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக இது வழக்கமாகிவிட்டது - இப்போது துணைக்கு மகள் எழிலும் அவள் பங்குக்கு 4.

மற்றப்படி குடியிருப்பது தமிழ்மணத்தில் என்பதால் அதிகம் வெளியில் சென்று வாசிப்பதில்லை. தவிர அனுதின ஒருமணிநேரதுக்குமேலான பயணத்தில் பெரும்பாலும் படிப்பது நாள்/வார/மாத இதழ்கள்தான்... அதையும் மீறி

சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்:

தமிழ்மணம்
(தினசரி பலமுறை வாசிக்கும் தினசரி)

ஒலி 96.8
(தகவல், கலைக் களஞ்சியம்)

என் சோட்டுப் பெண்: தமிழச்சி
(பேராசிரியை சுமதி இவர் அருப்புக்கோட்டை/மல்லாங்கிணறு மறைந்த வே. தங்கப்பாண்டியன் அவர்களின் மகளாம் - கிராமத்துல பார்க்கிற பாட்டி, பக்கத்து வீட்டுப் பொண்ணு, மரம், குளம், மாடு மேய்க்கும் மூக்கையா, மாமன்... என்று எங்கள் ஊரில் இருக்கும் பலரையும் பற்றி எழுதிய கவிதைகள் போன்று இருந்ததால் மனதைத்தொட்டது. அதிலும் அவருடையை தந்தை அவர்மீது வைத்திருந்த பாசம், அவரின் இழப்பு பற்றிய கவிதைகள் கண்ணீரை வரவழைத்தது. புத்தக வடிவமைப்பு, புகைப்படங்கள், தரம் அருமை)

சோம. வள்ளியப்பன் எழுதிய் அள்ள அள்ள பணம் மற்றும், நேரமேலாண்மை பற்றிய "காலம் உங்கள் காலடியில்."
(பங்கு வர்த்தகம் பற்றிய சமகால உதாராணங்களுடன் கூடிய நல்ல புத்தகம்)
அதென்னவோ சில காலமாய் நான் படிப்பது (குறைந்தபட்சம் படிக்க நினைப்பது) எல்லாம் பணத்தைச்சுற்றி, வாழ்க்கையைச் சுற்றியே இருக்கிறது. சிங்கை நூலகம் நாளிதழில் எழுதும் புத்தக மதிப்புரைகளும் பெரும்பாலும் பொருளாதரம் தொடர்பானதாகத்தான் இருக்கிறது பாருங்களேன்.

துணையெழுத்து
(ரொம்ப அனுபவித்து, இனிய, சோக, கசப்பான, சந்தோசமான எல்லா உணர்வோடும் படித்தேன். அவரை மாதிரி நம்பளுக்கு ஊர்சுத்த முடியலையேன்னு கவலை வரவைத்ததது...)

ரா.கி.ரங்கராஜனின் "நாலு மூலையிலும் சந்தோசம்" படிக்கப் படிக்க இனிமை - இன்னொரு (சுஜாதா)ரங்கராஜன் என்று உணரவைத்த புத்தகம்.

மற்றப்படி இப்போது கைப்பையில்:
இன்றைய தமிழ்முரசு, சமீபத்திய The Week, DataQuest & India Today.

மொத்தக் கையிருப்பு:
ஒரு 150 தேறும் (வயிற்றுப்பிழைப்புக்கு வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை நீங்கலாக)

சமீபத்தில் தருவித்தது:
துணையெழுத்து
அம்மா வந்தாள்
சைக்கிள் முனி
டாலர் தேசம், மெல்லினம்
அண்ணா, குஸ்வந்த்சிங்
அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில்
தீபாவளி மலர்கள் உட்பட ஒரு 50 புத்தகங்கள்.

நான் படித்ததில் பிடித்தது:

வைரமுத்துவின் - சிகரங்களை நோக்கி
(திருஞானமாக மாறி பலமுறை வாசித்ததுண்டு. இப்போது இதை எழுதும்போதுகூட அந்த குளிர் காதில் உணரமுடிகிறது. மலைதேசத்து கேரட்டின் இனிமை தெரிகிறது.
பூட்டு - மனிதனுக்கெதிராக போட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானம். பூட்டு காற்றில் ஆடி அதை வழிமொழிந்தது
இது போன்ற பல வரிகள்...இப்போது நினைத்தாலும் எடுத்துட்டு உட்காந்திடுவேன்).

சாவியின் - வாஷிங்கடனில் திருமணம்.
(ரசித்து சிரித்தேன், சிரித்து ரசித்தேன்)

அகிலன்(தானே!?) - சித்திரப்பாவை
(நண்பர் மகன் ஒருவருக்கு பள்ளியில் தேவைப்படுகிறது என்று இங்கு நூலகத்தில் எடுத்து, எதேச்சையாக படிக்க ஆரம்பித்து - ஒரே மூச்சில்:) படித்து முடித்துவிட்டு வைத்தபுத்தகம்)

துணையெழுத்து
(புத்தகத்தோடு வாழமுடியும்)

வைரமுத்துவின் - இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள்
(பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துக்கு வித்திட்ட புத்தகம். ஆனால் அதில் பிடித்தது இப்போது ஞாபகம் வருவது: தாத்தா பொன்னையாத்தேவர், பாஸ்கரன், அந்த முடி போட்டு சமைத்த பாட்டி, நான்காவது பொன்னென்று உண்டென்றால் அதற்கு பாலு என்று பெயர்வைக்கலாம் "பாலு", யேசுதாஸ், சிவசங்கரி, ஏவி. எம். சரவணன்)

பாலகுமரான் - மெர்க்குரிப்பூக்கள்
(காரணம் ஏதும் சொல்லனுமா என்ன?
பாலகுமாரன் என்னை ஆக்ரமித்த ஒரு எழுத்தாளர். ஒரு காலத்தில் நண்பராக, தெரிந்தவராக தனது எழுத்து மூலம் பேசினார் - பின்னர் தாடி வளர்த்தபிறகு எனக்கு சாமியாகிவிட்டார்).

சுஜாதா - நகரம், ஸ்ரீரங்கத்து கதைகள், ஓரிரு எண்ணங்கள் மற்ற பல கட்டுரைகள்.

வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்:
உபபாண்டவம்
பாதியிலிருக்கும் "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்", "கள்ளிக்காடு இதிகாசம்", மெல்லினம், ராகாகி, அம்மா வந்தாள்...
God of Small Things (இதுவும் தமிழில் வருவதாக கேள்விப்பட்டேன், அதனால் விரைவில் வாசிக்க வாய்ப்பிருக்கிறது.

இது போன்று அவ்வப்போது வரும் எல்லாவற்றையும் எழுதிக்கொள்ளலாம்.

மற்றப்படி, என்ன... இவன் ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி எழுதவே இல்லை என்று ஒருவேளை உங்களுக்கு உறுத்தியிருந்தால்...
தமிழிலேயே ஒழுங்கா படிக்க நிறையா இருக்குதுன்னு சமாளித்தாலும்...

ஒருநாள் மகளின் (பாலர்பள்ளி) ஆங்கில வீட்டுப்பாடம் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தபோது,
என்னப்பா நீங்க இப்படி இருக்கிறீங்கன்னு மகள் கேட்க,
நீ தமிழ்ல்ல எதாவது டவுட் கேளுன்னு சொல்ல,
அதான் உங்களுக்கு க ங ச-வும் ஃபுல்லா தெரியலியேன்னு முறைக்க....

வேற வழியில்லாமல்,
அ ஆ இ ஈ.... A B C D யில்லிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...
அதனால அப்படி ஒரு லிஸ்ட் வேணும்னா அடுத்தபிறவில்ல ஒரு Book meme போடலாம்:)


நிற்க...

அடுத்து நான் இந்த ஆட்டத்துக்கு அழைக்க நினைப்பவர்கள்:

இகாரஸ் பிரகாஸ் (மறுபடியும் வாங்களேன், முதல் ரவுண்டில் புத்தகப் பட்டியல் மட்டும் இட்டுவிட்டீர்கள் - அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மறுபிரசுரம் செய்யுங்களேன் ப்ளீஸ்)

நாராயணன்
மானஸாஜென்
நா. கண்ணண்
வெங்கட்
காசி
அருணா ஸ்ரீநிவாசன்
கோவில்பட்டி கணேஷ்
டோண்டு ஐயா

இவர்களை யாராவது ஏற்கனவே சொல்லிருந்தாலும் பரவால்ல, இதுவரை எழுதலதான:)

மேலும், வலைப்பதிவு இல்லாவிட்டாலும் தமிழ்மணத்துக்கு தினம் வரும், புத்தகங்கள் படிக்கும்:
சிங்கை பிரஷாந்தன் (சாந்தன்)

மற்றப்படி புத்தகம் என்று நினைத்தால் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும்:
"தினம் ஒரு கவிதை" சொக்கன்
"ஒலி 96.8" மீனாட்சி சபாபதி

நன்றி வணக்க்க்க்க்கககம்.

12 comments:

அன்பு said...

சொல்ல நினைத்ததில் பலது மறந்ததுபோல்
கேட்கநினைத்ததிலும் முக்கியமான விடயமொன்றை மறந்தது திரும்ப படித்தபோதுதான் உரைத்தது:

இதுபோன்ற புத்தக வாசிப்பு போன்றவிடயங்கள் மிகுந்த சந்தோசம் அளித்தாலும், இங்கு சிங்கையில் கோடி கோடியாய் கொட்டி நூலகம் புதியநூல்களாக வாங்கிக்குவித்தாலும் "கைபடாமல்" இருக்கும் புத்தகங்கள் பல. அதைத் தவிர்க்க நூலகங்களும் பலவகையில் முயன்று வருகிறது.

புத்தகவாசிப்பை ஊக்குவிக்க உங்களுக்குத் தோன்றும், நீங்கள் பின்பற்றும் நல்ல சில யோசனைகளை இங்கே சொல்லுங்களேன். புண்ணியம் கிட்டும்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

லதா said...

வலைப்பதிவர் ஐநூற்றுச் சொச்சம் மக்கள் அனைவரையும் இந்தப் புத்தக விளையாட்டில் பங்கேற்கச் சொல்லிவிட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் இதுவரை படிக்காத புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப்பற்றிதான் அடுத்த பதிவில் எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்

தமிழ் மணத்திற்கு சில நாள்கள் விடுமுறை விடச் சொல்லலாம். தினமும் தமிழ்மணப் பதிவுகளைப் படிப்பதால் மற்ற புத்தகங்களைப் படிக்க முடியவில்லை :-))

Ganesh Gopalasubramanian said...

அன்பு அழைப்புக்கு நன்றி.
நாளை வேலை நிமித்தமாக வெளியூர் செல்லலாம் என நினைக்கிறேன்.
நாளை மறுநாள் எழுதிவிட்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேண்

Aruna Srinivasan said...

புத்தக விளையாட்டு அழைப்புக்கு மிக்க நன்றி அன்பு. பவித்ராவும் அழைத்திருந்தாங்க. படிச்ச/பிடிச்ச புத்தகங்கள் என்று எழுதணும் என்று நினைத்தாலே ஒரு பக்கம் மலைப்பா இருக்கு. அந்தந்த வயதில் எவ்வளவோ படிகிறோம். நம்முடனே நம் புத்தகப் பழக்கமும் கூடவே வருகிறது - ரசனைகள் மாறி, எண்ணங்கள் மாறி, எப்பவுமே இன்னும் நிறைய தெரியலையே என்று ஒரு பக்கம் உறுத்தலாய்....அப்புறம் பல சமயம் புத்தக விமர்சனம் படிக்கும்போதெல்லாம் - கட்டாயம் இதை வாங்கிப்படிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டு -சில நாளிலேயே அதில் ஆர்வம் மங்கிப்போய்....... எதை எழுத..?.எதை விட... ?இது ரொம்ப personal ஆன - அதே சமயம் மலைப்பான விஷ்யம். புத்தகம் பற்றி எழுதுவது நம்ம வாழ்க்கையையே ஒரு புரட்டு புரட்டுவது மாதிரியான சமாசாரம். ஹ்ம்ம்... என்னாலே இப்போதைக்கு முடியும் என்று தோணலை....:-) பார்க்கலாம்.... எதிர்காலத்தில் ஒரு நாள் யோசித்து உட்கார முடியுமா என்று :-) இப்போதைக்கு ஜூட்.

Anonymous said...

அன்பு,
ஆனந்த விகடனெ தொடவே இல்லெ போல தெரிகிறது. இப்ப பழெய மாதிரி இல்லென்னாலும் (சினிமா அதிகம்) நடு நடுவே நல்லக் கட்டுரைகளை இட்டு விமோசனம் பெற்று விடுகிறார்கள்.

மரவண்டு (கணேஷ்) சமீபத்தில் எழுதியுள்ள வலைப்பூவைப் படிக்கவும். அதில் உள்ள எழுத்தாளர்களை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

புதுமைபித்தனின் கதை தொகுப்பு, சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் கண்டிப்பாக படிக்கவேண்டியவை.

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, கருப்பு, வெளுப்பு, சிகப்பு (பெயர் தவறாக இருக்கலாம்), தி.ஜாவின் அம்மா வந்தாள், மரப்பசு
படிக்கவும். ஜெயமோகன், பிரபஞ்சன், சமுத்திரம், அசோகமித்திரன், வண்ணநிலவன்....

இன்னும் நிறைய இருக்கு, அப்புறம் எழுதறேன்.

மஞ்சூர் ராசா

Ganesh Gopalasubramanian said...

தங்கள் வேண்டுகோளுக்கிணங்க புத்தகங்கள் பற்றிய எனது பதிவு.
தங்கள் அழைப்புக்கு நன்றி
கோ.கணேஷ்

http://gganesh.blogspot.com/2005/06/blog-post_16.html

Anonymous said...

I am practiced to read books before go to bed. It will give pleasant sleep with good thoughts.

This adv. given by one of my respectable Leader..

I think this idea will improve our reading practice.


Anbudan
Amudhu

துளசி கோபால் said...

அன்பு,

'துணையெழுத்து'திரும்பிவந்துருச்சா?

என்றும் அன்புடன்,
துளசி.

ramachandranusha(உஷா) said...

துளசி, நீங்க "துணையெழுத்து"ன்னு சொன்னது புத்தகத்தையா அல்லது
" தலையெழுத்து" தையா :-))

அன்பு said...

அச்சச்சோ அக்கா... உங்களுக்கு எப்படியும் திரும்பவரவழைத்துக்
கொடுத்துவிடுகிறேன் - கவலைப்படாதீங்க...
(ஆனால் நான் அப்படிக்கொடுக்கிறவரை துணையெழுத்தோ/தலையெழுத்தோ படிக்கமாட்டென்ற ஒரு மன உறுதி
ஒங்களுக்கு இருக்கோணும்:)

இல்லைங்க... அவளதான் விட்டுட்டேன்... நல்ல புத்தகம் அதனால யாரோ
பாதுகாத்துட்டாங்க - நல்ல விஷயம்தானே...

Anonymous said...

உங்கள் செய்தி முலம் இந்த வாரம் எழத்தாளர் சிவசங்கரி அவர்களின் வாசிப்போம் சிங்கப்பூர் கலந்துரையாடல் சென்றேன். நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது.

நன்றி அன்பு!

அன்புடன்
அரசி

Anonymous said...

புத்தக விளையாட்டு, எனக்கு புதுசா இருக்கு அன்பு.
நான் சமீபத்தில் படித்த புத்தகங்கள், சுஜாதா எழுதிய 'பதினாலு நாட்கள்' 'விரும்பிச் சொன்ன பொய்கள்'
ஆங்கிலத்தில், 'Blink'.
கைப்பையில் இப்போது இருக்கும் புத்தகங்கள், 'விவேகானந்தர் வாழ்வில் நூறு சுவையான நிகழ்ச்சிகள்' (Not so interesting), கண்ணதாசனின் 'அற்தமுள்ள இந்துமதம், முதல் பாகம்'

நன்றி.
-BBசரவ்.