Tuesday, April 19, 2005

செல்லினத்தின் கொ.ப.செ.

தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா வைபவம் (அவசர அவசரமாக) இனிதே நடந்து முடிந்துள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அதே நேரத்தில், விழா தொடர்பாக சன் டிவியில் விளம்பரம் வந்ததில் இருந்து ஆங்காங்கே புகையும் வந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பில் ஞாயிறு அதிகாலையன்று என்னுள் தோன்றியதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தேன். ஆனால், அதே வேகத்துடன் எழுதவேண்டாம் என்று விட்டு வைத்தேன்.

வெளியிடப்பட்ட வட்டில், இப்போது பெரும்பாலார்கள் பயன்படுத்தும் TSCIIயையே காணோம், தாப்/தாம்தான் என்று சில குழுமங்களில் பரபரப்பு. இன்று நண்பர் பத்ரியின் ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? பதிவைப் பார்த்தவுடன், என்னுள் தோன்றியதை இன்றே பதிவுசெய்யத் தோன்றியது.

இன்று கணிணியில் தமிழ் பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் தமிழ் எப்படி எப்படியெல்லாம், எந்தெந்த வழியிலெல்லாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று. இந்த கணிணித்தமிழுக்கு வழிவகுத்தவர்கள் எல்லாமே - 90 சதவீதத்துக்கு மேலாக அரசு சார்பற்ற, தன்னார்வமிக்க தொண்டூழியர்கள்தான். ஆனால், இன்று எல்லாத்துக்கும் நாங்கள்தான் காரணம் என்பதுபோல், ஒருபக்கம் பரபரப்பு நடக்கிறது. 30 லட்சம் குறுந்தகடு வெளியிடுவது, பத்திரிக்கைகளுக்கு உடனே கொண்டு சேர்ப்பது போன்றவை பாராட்டப்படத்தக்கது என்றாலும் - பலருடைய உழைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது.

எனக்குத்தெரிந்தவரை தமிழ் கணிணி வளர்ச்சிக்கு வருடாவருடம் நடந்துவரும் தமிழ் இணைய மாநாடு பெரிதும் செய்து வருகிறது. ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், உலகமுழுவதும் தமிழ் கணிணிக்காக பணிசெய்வோருக்கிடையேயான ஒத்துழைப்பு, யுனிக்கோடு அமைப்புடனான தொடர்பு என்று பல வழிகளில் பாராட்டத்தக்க பணிகள் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த குறுந்தட்டு வெளியீட்டில் உத்தமம் என்றழைக்கப்படும் INFITT ன் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

பலகாலம் தமிழுக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு - அமைச்சு மூலம் C-DAC தயாரித்ததாக வட்டு வெளியாகிறது. இதில் பரம்பரை பக்கா அரசியல் ஒருபக்கமும், தமிழ் இணையத்துக்கு உழைப்பவரிடையே நிலவும் அரசியில் ஒருபக்கமும் சேர்ந்து உண்மையை குழிதோண்டிப்புதைக்க ஒத்துழைத்துள்ளது.

ஃபயர் ஃபாக்ஸைப் பொருத்தவரை தமிழாவின் முகுந்த் பிப்ரவரி 22ல் வெளியிட்டார். ஒரு சில தினங்களிலேயே நானும் இறக்கி பயன்படுத்தி வருகிறேன்.

அதன் பின்னர், ழ-கணிணியின் ஜெயராதா மார்ச் 25 அன்று ஃபயர் ஃபாக்ஸ் தமிழில் முடிந்துவிட்டது என்ற ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது என் மனதுள் தோன்றியது: ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல், செய்ததை திரும்பச்செய்து அவர்களுடைய பொன்னான காலநேரத்தை வீணாக்குகிறார்கள் என்று. இருந்தாலும் ழ(RedHat) என்பதால் தனியாக வேண்டுமோ என்று விட்டுவிட்டேன்.

இப்போது புதிதாக, C-DAC மூலம் தாங்கள்தான் (உலகில்) முதன்முதலில் வெளியிட்டோம் என்று இன்னொரு ஃபயர் ஃபாக்ஸ்.

இதற்கு என்ன செய்யலாம் என்று இணையப்பொதுமக்கள் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, வருங்காலத்தில் என்ன செய்யலாம் என்று என்னுள் தோன்றுவது.

1) உத்தமம் ஒரு பொதுவான பதிவு நிறுவனமாய் இருந்து தமிழ் கணிணிப்படுத்ததில் யார் என்ன புதிதான திட்டம் தொடங்கினாலும் அதன் விபரத்தை பதிவு செய்யலாம். திட்டத்தின் முழுவிளக்கம் கொடுக்காமல், ஆரம்பதேதி, செயல்படுபவர்கள் போன்ற விபரத்தை முதலிலேயே தெரிவிக்கலாம். அதுபோல், முடிவு/வெளியீடு தேதி, பதிவிறக்கம் செய்யும் தொடர்பு போன்றவை.

2) தமிழ் லினக்ஸ், டிஸ்கி, போன்ற பல இணையக்குழுமங்கள் இருந்தாலும், பலரும் பல பிரிவாக (குறிப்பாக RedHat, Mandrake Linux) என்று செயல்படும்போது உத்தமம் ஊடுபாலமாக செயல்படலாம்.

3) உத்தமம் தனது மின்மிஞ்சரியை வருடாந்திர தமிழ் இணைய மாநாட்டுச் சிறப்பிதழாக மட்டும் வெளியிடாமல், மாத மின்னிதழாக மாற்றி - ஒவ்வொரு மாதமும் தமிழ் கணிணியுகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், புதிய அறிவுப்புகள், மென்பொருள்கள், புதிய தளங்கள், தற்போது நடந்துவரும் திட்டங்களின் நிலைகள் போன்ற பல விபரங்களைத் தொகுத்தளிக்கலாம்.

4) புதிதாக வரும் அறிவிப்புகள், வெளியீட்டுகளுக்கு - அது மாநில அரசோ, மத்திய அரசோ, வேறு தன்னார்வ நிறுவனங்களாய் இருந்தாலும், அது உத்தமம் பார்வைக்கு(காவது) குறைந்தபட்சம் சென்று திரும்பவதாய் பார்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற இன்னும் பல ...லாம்கள்.

மைக்ரோசாஃப்ட்

ஒரு காலத்தில் நான், ஏன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - சீன, ஜப்பானிய, கொரிய மொழிகளிலெல்லாம் இயங்குதளங்கள், ஆஃபீஸ் பொதிகள் வெளியிடுகிறது, தமிழில் இல்லை என்றேன். பலரும் சொன்ன பதில், வாங்குபவர்கள் இருந்தால்தான் வெளியிடும் என்றார்கள். ஆனால், இப்போது இயங்குதளம், ஆஃபீஸ் எல்லாம் வருகிறது ஏன்?

நமது முகுந்த் போன்றவர்களின் கைவண்ணம்தான், பில் கேட்ஸையே மறுபரிசீலனை செய்யவைத்திருக்கிறது என்பது உண்மை.

முதல் விடயம், விண்டோஸுக்கு பரம எதிரியாக எளிதில் கிடைக்கும் லினக்ஸ். அதிலும் உள்ளூர் மொழிகளில், ஒப்பன் ஆஃபீஸ் போன்ற விண்டோஸிடன் இணைந்து வராத பல மென்பொருள்களுடன்.

இந்த சிறப்புக் கருதி சிங்கையின் தற்காப்பு அமைச்சு தனது 20,000 கணிணிகளில் பயன்படுத்தும் ஆஃபிஸ் 97க்குப் பதிலாக ஒப்பன் ஆஃபிஸுக்கு மாறப்போகிறது. அதற்கு முக்கியக்காரணம் - செலவு குறைவு. தமிழ் உட்பட சிங்கையின் 4 அதிகாரத்துவ மொழிகளும் இருக்கிறது. இது மற்ற அமைச்சுகளும் இதைப் பின் தொடரும்.

மலேசியாவில் சன் நிறுவனத்தின் ஸ்டார் ஆஃபிஸ் பல அமைச்சுகளில் பயன்படுத்த ஆரம்பித்து சில வருடங்களாகிறது. இந்தியாவிலும் பல அரசு துறைகளில் லினக்ஸ் மற்றும் திறமூல மென்பொருள்கள் உட் புகுந்து விட்டது.

இதற்குப்பதிலாக ஒரு மாற்றுதான், மைக்ரோசாஃப்டின் பாஷா இந்தியா. ஆனால், அதிலும் ஒரு திருப்தி - தமிழ் திட்டத்தை பொறுப்பேற்று செய்து தரும் நிறுவனம் விஷ்வக்

செல்லினத்தின் கொ.ப.செ.

ஒரு வழியாக தலைப்புக்கு வருகிறேன்:)
நண்பர்களிடம் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக, தமிழ் குறுந்தகவல் பற்றிய விடயம் வந்தது. அப்போது என்னைச் சுட்டிக்காட்டி இன்னொரு நண்பர் ஒருவர் கூறியது, "அதான் இங்க இருக்காரே, செல்லினத்தின் கொபசெ" என்றார். அப்போது சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.
ஆனால், அன்று எனக்குள் தோன்றியது இதுதான்:
நான் செல்லினத்துக்கு மட்டுமல்ல. முதன்முதல் கணிணியில் தமிழ் பார்க்க உதவிய நா.கோ அய்யாவின் கணியன் முதல், பின்னர் 1996ல் வாங்கிய கம்பன் எழுத்தோலை, பின்னர் முரசு அஞ்சல் என்று தொடங்கி, டிஸ்கி, யுனிக்கோடு, இ-கலப்பை, தமிழ்மணம் என்ற பல தமிழ் கணிணி/தொழில் நுட்ப முயற்சிகளுக்கு கொ.ப.செ-வாக, பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தே இருக்கிறேன். அதை இப்போதும் தொடர்கிறேன். அது என்னால் இயன்ற உதவியாக நினைக்கிறேன்.

இதை நான் மட்டுமல்ல, கணிணியில் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்துவதை, நல்ல விடயங்களை, நண்பர்களின் உழைப்பைப் பாராட்டி அடுத்தவருக்கு நம்மாள் இயன்ற நாளுபேருக்கு எடுத்து செ(சொ)ல்லாமல் இருப்பது தவறு, துரோகம் என்றே நான் நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் ஓரளவு செய்திருந்தாலே - இன்று தனியாக கூக்குரலிடும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்.

அதனால் இதுவரை இதை செய்யாதிருந்திருந்தாலும், இன்றிலிருந்தாவது தமிழ் கணிணித்துறையில் உள்ள முன்னேற்றங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக!

இந்தப் பதிவின் நீளம்கருதிதான் எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். இருந்தாலும், ஒருவழியாக என்னுள் தோன்றியதை சொல்லி விட்டேன். மேலும், இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள எந்த தனி மனிதருக்கோ, நிறுவனத்துக்கோ நான் சொந்தக்காரனோ, சண்டைக்காரனோ அல்ல. இது என்னுடைய தாழ்மையான கருத்து, அவ்வளவுதான்.


என்றென்றும் அன்புடன்,
அன்பு

5 comments:

பாலு மணிமாறன் said...

விரிவான, விளக்கமான பதிவின் மூலம் தெளிவாக சிந்தனைகளை முன் வைத்திருக்கிறீர்கள் அன்பு. உங்கள் பதிவின் ஆக முக்கிய விஷயமாக நான் புரிந்து கொண்டது - கணினித் தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்கிகளில் தீவு தீவாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுதல், அப்படிப்பட்ட ஒருங்கிணைப்பைச் செய்ய ஒரு அமைப்பை முன்னிலைப்படுத்துதல் என்ற 2 அம்சங்கள்.

நேரவிரயம் தவிர்க்கப்பட வேண்டுமென்ற உங்கள் கருத்தில் யாருக்கும் மறுப்பிருக்காது. இந்தியாவின் விஞ்ஞான ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது அப்துல் கலாம் என்ற தமிழர்தானே... WHY DONT WE TAKE A LEAF OUT OF HIS BOOK?

Vijayakumar said...

//நண்பர்களிடம் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக, தமிழ் குறுந்தகவல் பற்றிய விடயம் வந்தது. அப்போது என்னைச் சுட்டிக்காட்டி இன்னொரு நண்பர் ஒருவர் கூறியது, "அதான் இங்க இருக்காரே, செல்லினத்தின் கொபசெ" என்றார். அப்போது சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.//

அது யாரு என்று எனக்கும் தெரியும் :-)

அன்பு, அருமையான வழியெல்லாம் சொல்லியிருக்கீங்க. இருந்தாலும் என்னுடைய கமெண்ட் சிலவற்றிற்கு.

//ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல், செய்ததை திரும்பச்செய்து அவர்களுடைய பொன்னான காலநேரத்தை வீணாக்குகிறார்கள் என்று//

இது தானே மக்களோட புத்தியே. ஒன்னு சேர்த்திருவீங்களோ? இல்லேன்னா ஒன்னு தான் சேர்ந்திருவோமா? அட போங்கப்பா, என்னுடைய இஷ்டத்துக்கு நான் பண்ணிட்டு போறேன். உங்க வேலைய போய் நீங்க பாருங்க.

//தமிழ் இணைய மாநாடு//

என்ன பெரிய தமிழ் இணைய மாநாடோ. என்னத்த கிழிக்க முடியுதோ தெரியலை.என்ன தான் ஒருங்குறி,பலகுறி என்று மாநாடு மூலம் கொண்டு வந்தாலும் சூப்பரா லவட்டிக்கிட்டு போனாய்ன்ல பார்த்தீங்கள்ளா? நிறைய பேரு பாக்கெட் நிறம்புனது தான் மிச்சம்.

//1996ல் வாங்கிய கம்பன் எழுத்தோலை, பின்னர் முரசு அஞ்சல் என்று தொடங்கி, டிஸ்கி, யுனிக்கோடு, இ-கலப்பை, தமிழ்மணம் என்ற பல தமிழ் கணிணி/தொழில் நுட்ப முயற்சிகளுக்கு கொ.ப.செ-வாக, பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தே இருக்கிறேன்.//

இருங்க பிரச்சனையில்லை. கொஞ்சம் வளர முடியுமா தவிக்கிறவங்களையும் அப்பப்போ கண்டுக்கோங்க.

இன்னும் தமிழ்நாட்டுல பல இடத்துல விண்டோஸ்-98-யே தாண்டலே (திருனெல்வேலியில் அனுபவத்தில் உணர்ந்தது).அங்கே போய் பல பேர்கிட்ட சொல்லி என்னத்தே ஆகப்போகுதோ. நம்மள மாதிரி பாரின், மெட்ராஸ்-ல இருக்கிற மேட்டுக்குடி மக்கள் கிட்டயே சொல்லிக்க வேண்டியது தான். யாராச்சும் இந்த அடிமட்டம் வரைக்கும் கணித்தமிழை எப்படி கொண்டுப் போறதுன்னு திங்க் பண்றோமா?

அன்பு said...

யாராச்சும் இந்த அடிமட்டம் வரைக்கும் கணித்தமிழை எப்படி கொண்டுப் போறதுன்னு திங்க் பண்றோமா?

விஜய், அதுக்குத்தானப்பா எல்லாத்தையும் தமிழ்(ழை)ப்படுத்திட்டிருக்கோம். தாத்தா, பேரன்லாம் சேர்ந்து வட்டு வுட்டுட்டிருக்காங்க. அதெல்லாம், எனக்கும் உனக்கும(ட்டும)ள்ள... குறிப்பாக ஆங்கிலம் தெரியாத நம்மூர் மக்களுக்குத்தான்.

ஆனா, எனக்குத்தான் இங்கிலிபீஸு தெரியுமே - அதென்ன திற, மூடுன்னு கேலி பேசிட்டு அலைவது நம்மில் பலர். நமக்கு அதை தெரியாதவர்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பிருந்தும், பலரும் செய்வதில்லை. தமிழ்படுத்தலில் நடைபெறும் முன்னேற்றங்களை கண்டுகொள்ளக்கூட இல்லை என்றபட்சத்தில், எப்படி நம்மூர்காரனுக்கு எடுத்துச் செல்வது? அதில்தான் எனக்கு வருத்தம். எந்த தொழில்நுட்பத்தில் தமிழ் தெரிந்தாலும் - பெருமிதம் கொள்கிறேன், பரவசப்படுகிறேன்:)

Vijayakumar said...

//எந்த தொழில்நுட்பத்தில் தமிழ் தெரிந்தாலும் - பெருமிதம் கொள்கிறேன், பரவசப்படுகிறேன்:) //

பார்த்து அன்பு அண்ணே! எப்போதும் ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க :-) நான் சில நேரம் படுவேன். அப்புறம் பின்னிருக்கும் அரசியலை நினைத்து வெறுப்பேன். :-) எப்படியோ அடிமட்டம் போய் சேர்ந்த சரியப்பா...

Arul said...

உங்களை கொபசெ என்று விளித்த நண்பருக்கு இக்கணம் நன்றி கூற கடப்பாடுடையவனாகிறேன். அல்லேல் இத்தகு பதிவு வெளிப்பட்டிருக்குமா?