Friday, February 11, 2005

சிங்கை இணையுலக சந்திப்பு - ஒரு சீரியஸ் பார்வை

நேற்று (10/02/05 - வியாழன்) சிங்கையில் நடந்த வலைப்பதிவு, இணைய உலக நண்பர்கள் சந்திப்பு பற்றிய நண்பர் மூர்த்தியின் பதிவின் தொடர்ச்சி இது.

நான் ஒரு 5 மணி சுமாருக்கு செல்லும்போது அங்கு நண்பர்கள் பலர் ஏற்கனவே சங்கமித்து பேசிக்கொண்டிருந்தனர். குறிப்பாக முனைவர் நா. கண்ணன் வட்டார வழக்கு பற்றி. நான் சென்றவுடன் அனைவரும் வரவேற்று உபசரித்து... இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். நீங்களே அன்பாய் தன்னடக்கமில்லாமல் அறிமுகம் செய்துகொள்ளுங்கள், பின் ஒவ்வொருவராய் என்றனர். எனக்கு வழக்கம்போல தொடைநடுக்கம், அதனால் நான் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் வேறொருவர் ஆரம்பியுங்கள் என்று சொல்லிவைத்தேன்:)

என்னுடைய முந்தைய பதிவில் சிவப்பெழுத்தில் எழுதியிருந்தது தவிரவும் அல்லது அதையும் மீறி காதிலும்/மனதிலும் விழுந்த விஷயங்கள் சில:

கூட்டத்தில் பரவலாகப் பேசியது... வலைப்பதிவுக்கு பின்னூட்டம் மிக மிக அவசியம். அந்த வேளையை மூர்த்தி சிறப்பாக செய்கிறார். ஆனால் பலரும் அதைச் செய்வதில்லை. ஒரு பதிவு படித்தபின் தங்களுடைய அபிப்ராயத்தைத் தெரிவிப்பது எழுதுபவருக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும் - அதை வாழ்த்தியிருந்தாலும், திட்டியிருந்தாலும் - எதுவும் எழுதாமல் செல்வதைவிட. குறைந்தபட்சம் நல்லாருக்கு, இல்லை என்று சொல்லலாம் அதற்கு தமிழ்மணத்தின் புதிய மதிப்பிட்டு முயற்சி பெரிதும் உதவும். ஆனால் அதையும் கூட பலரும் பயன்படுத்துவதில்லை.

தமிழ்மணத்தை மேம்படுத்த காசி போடும் முயற்சிக்கு, ஓரளவுக்கு கூட வலைப்பதிபவர்கள் ஒத்துழைப்பது இல்லை. அவர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியவுடன் - தன்னுடைய வலைப்பதிவில் அதை இணைத்துக்கொள்ள முற்படுபவர்கள் தங்களது எழுத்தின் தரத்தை, வலைப்பதிவின் தரத்தை உயத்திக்கொள்ள மெனுக்கடுவதில்லை. அதே போல் இங்கு வலைப்பதிவை படிப்பவர்கள் பெரும்பாலும் கணிணி மென்பொருள் துறையில் இருப்பவர்கள். அதனால், இந்த தொழில்நுட்பம் அறிந்தவர்கள் தமிழ்மணத்தில் காசிக்கு பக்கபலாமாய் இருக்க முன்வரவேண்டும். அதுதான் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.

வலைப்பதிவு ஒரு நாட்குறிப்பு என்றாலும் கூட, அது பொதுவில் வைப்பதால் ஒரு திறந்த புத்தகம். அதிலும் தமிழ்மணத்தில் இணைக்கும்போது பலரும் படிக்கிறார்கள், அதனால் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு சமூக அக்கறை வேண்டும். அதனால், நான் நினைத்ததை எழுதுவேன் என்ற ஒரு தாந்தோன்றித்தனம் கூடாது.

ஒவ்வொருவரும் தான் எதற்கு வலைப்பதிகிறோம், தன்னுடைய வலைப்பதிவை அல்லது மொத்தத்தில் தமிழ் வலைப்பதிவுகளை வருங்காலத்தில் எதை நோக்கி எடுத்துச்செல்லப் போகிறோம்... என்ற உணர்வுடன் செயல்படவேண்டும்.

நா. கண்ணன்: ஒரு காலத்துல வலைப்பதிவு ஆரம்பகாலத்துல காசிக்கு சில ஆலோசனைகள், ஊக்கம் கொடுத்திருக்கேன். ஆனால் திடீர்னு அவரே தொழில்நுட்பத்தையும் கத்துக்கிட்டு எங்கேயோ போய்ட்டார். தமிழ்மணம் என்பது தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு மைல்கள். ஆனால், அதை சும்மா நானும் பிளாக் வைச்சுருக்கேன்னு எழுதாமல் பயனுள்ள வகையில் செய்ய ஆக்ககரமாக ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

நா. கண்ணன்: முன்னொருமுறை - வலைப்பதிவு காலத்துக்கு முன்னர் eBook என்றொரு விஷயம் கொண்டு வந்து அதில் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மதம்... போன்றவற்றின் அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளித்து அதை உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் இன்றைய தலைமுறை குழந்தைகள் பங்கு கொண்டு அதைப் படித்து மேலும் அவர்களுக்கு எழும்பும் கேள்விகளை அங்கேயே இட்டு (விநாயகருக்கு ஏன் ஆனைத்தலை இருக்கு? பொட்டு ஏன் வைக்கணும்?) அதற்கு உலகெங்கும் உள்ள விஷய்ம் தெரிந்தவர்கள் பதில் கூறும் படி செய்யவேண்டும். அப்படி செய்தால் அதுதான் உண்மையான eBook ஆக இருக்க முடியும். Organic விஷயமாய் இருப்பதால் அது அப்படியே மேலும் மேலும் வளரும். அதை நமது குழந்தைகள், வருங்கால சந்ததியினர் பலன் பெறுவர். அது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவுகள், இப்போதுள்ள இணையம், தொழில்நுட்பம் செய்ய முடியும். அதை வழிநடத்த, தொழில்நுட்பத்தில் உதவிசெய்ய விரும்பும் ஆர்வளர்கள் என்னைத்தொடர்பு கொண்டால் மேலும் விரிவாகப் பேசலாம். மேலும் Tamil.Net போன்ற வலை, மடலாடற்குழுவிலும் ஏகப்பட்டம் தகவல்கள், ஆராய்ச்சி விஷயங்கள் உண்டு அதையும் யுனிக்கோடு தமிழ் கொண்டு ஒருங்கிணைக்கவேண்டும். தமிழர்கள் நமக்கே உரிய குணம், ஏதாவது இதுமாதிரி பேசினால் - அபாராம், சபாஷ் என்பார்கள் அப்புறம் போய்ண்டே இருப்பாங்க. சீரியஸ் விஷயங்களுக்கெல்லாம் ஈடுபடுவதில்லை. நான் மடலாடற்குழுவிலிருந்தும், வலைப்பதிவிலிருந்தும் அவ்வப்போது சிறிது ஒதுங்குவது இதுபோன்ற விஷயங்களால்தான். என்னைப்பொருத்தவரை - என்ன செய்யப்போகிறோம் என்ற குறிக்கோளுடன் செயல்படவேண்டும். இதுமாதிரி அவ்வப்போது இனிமையாக எச்சரித்து:) சந்திப்பை உருப்படியாக்கினார்கள். அதுபோக அங்கோர்வாட் ஆலய சுற்றுப்பயணம் முடிந்து கொரியா திரும்பும் வழியில் எங்களுடைய சந்திப்பு கேள்விப்பட்டு வந்ததால், பயண அனுபவத்தையும் அங்கு வரலாற்று சின்னம் சிதிலமடைந்திருப்பதையும், சோழமன்னர் தொடர்பிருப்பதையும், அங்கு சந்தித்த லண்டணில் வசிக்கும் இந்தியப்பூர்விக குடும்பத்தின் ஆணிவேர் தேடலையும் எடுத்துகூறினார்கள். மனிதர் சுத்த சைவம், எப்படிதான் கொரியா, கம்போடியான்னு சமாளிக்கிறாரோ!? (கேட்டால் சர்வசாதரணாமாய் சொல்கிறார், பெரும்பாலும் சமைத்துவிடுவேன். அடிக்கடி இட்லி செய்வேன் (அதைச்சாப்பிட்ட நண்பர் யாரோதான் இட்லிக்கடை வச்சிருக்கிறதா சொன்னாங்களோ!?)

நான்

திருமதி. ஜெயந்தி சங்கரின் கதைகள் பலவும், நான் என்றே தன்மையில் பேசி பலவேளைகளில் கதைபடித்துக்கொண்டிருக்கும்போதே இது ஜெயந்தி-க்கு நடந்ததோ என்ற பயம் ஏற்பட்டதாக பலரும் கூறினோம். அதற்கு ...

ஜெயந்தி:
அப்படி ஒரு பயம் ஏற்பட்டால் நான் எதிர்பார்த்ததை அடைந்துவிட்டேன். அதாவது, நான் ஒரு விஷயத்தை கேள்விப்படும்போது அதை அப்படியே உள்வாங்கி மனதுள் நினைத்து நினைத்து அசை போடுகிறேன். அது சில காலம், சில வருடம் கழித்து வரும்போது - விஷய்ம் நடந்தவர்களை முன்னிறுத்தி எழுதுவதை விட, எனக்கே நடந்ததாய் நினைந்து எழுதும்போது இன்னும் ஈடுபாட்டுடன், உள்ளுணர்வுடன் எழுத முடிகிறது.

சித்ரா ரமேஷ்:
அதெப்படி முடியும் ஜெயந்தி? நீங்க ஒரு வேலைக்காரியைப் பற்றி எழுதும்போது அது என்னதான், வேலைக்காரியாய் மாறி நான் என்று எழுதினாலும்... நீங்க ஓரளவு நல்ல நிலையிலிள்ள பெண். அந்த நடுத்தரவர்க்க பெண்ணாகவே... நான் திருடியது தவறு என்பதுபோல் உங்கள் கதை செல்கிறது. ஆனால் அந்த வறுமையில் உழலும் வேலைக்காரி, ஒருவேளை "நாம் தேவைக்காக திருடிவிட்டோம். இதிலிருந்து எப்படி தப்பிப்பது, எப்படி மறைப்பது" போன்ற சிந்தனைகள் வரலாம் அல்லவா?

அருள்:
இதுமாதிரி என்னோட அறிவியல் புனைகதையொன்றில் எழுதியிருந்தேன். ஒருவனுக்கு பெண்ணுடைய உணர்வுகளை கொடுத்து, பின்னர் எடுத்துவிட்டால் அவன் என்னவாய் இருப்பான்!?

நா. கண்ணன்:
இந்த தலைப்பு நீண்ட விவதாத்துக்குரியது. ஆண்டாள் பெண்ணாய் மாறி எவ்வளவுதான் உருகினாலும் அந்த ஆண் உள்ளே இருப்பான் தானே... அப்படியானால் எவ்வளவு சதவீதாம் ஆண்/பெண்ணாய் மாறி எழுதமுடியும்...!? அதனால் நான் - என்பது பற்றிய நிறைய விவரணைகள் தேவை...
(அன்பு: இதுமாதிரி பொருட்பட கூறினார்கள், ஏதோ சொதப்பிருக்கேன்னு தெரியுது, எங்கேன்னு தெர்ல, அது தெரிஞ்சா ஏன் சொதப்பல்:)

அப்புறம் நம்ப அருள்குமரன். அவர் அடிப்படையில் ஒரு ரசாயணப்பொறியாளர். ஒரு காலத்தில் பெயிண்ட் கலக்கிட்டு இருந்தவரு:) இப்போதும் பல்லூடகத்தொழில்நுட்பத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் கணிணித்துறையில் இப்போது முழுநேரப்பணி புரிந்துவந்தாலும் தனது முழுஆர்வத்தில், உழைப்பில் தனியாக ஏதும் கணிணிதுறைசார்ந்த படிப்பேதுமில்லாமல் முன்னேறி கலக்கி வருகிறார். அருள் ஃபிரெஞ் ஆயில் போல Flash சர்வத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து வருகிறார். அது சும்மா படம் காட்டுவதற்கு மட்டுமல்லாமல் சுனாமி கலந்துரையாடல் போன்ற தமிழ் கலந்துரையாடலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இதில் உள்ள சிறப்பு மற்றவை போல் ஏதும் நமது கண்ணியில் இறக்காமல், எழுத்துறு பற்றிய கவலையில்லாமல் எந்தக் கணிணியிலும் செயல்படும் வகையில் அமைத்திருக்கிறார். தொழில்நுட்பம், பல்லூடகம் பற்றியே சிந்திப்பதால் அறிவியல் புனைக்கதைகளும் எழுதி வருகிறார் இப்போது. இதுபோன்ற பல நுட்பங்கள் அவர்கைவசம்... ஆனால் அது அவர்கையிலேயே இருப்பது அவருக்கும் பயனில்லை, அடுத்தவருக்கும் பயனில்லை. அதனால் அவரிடம் உள்ள பல toolsகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். அதுபற்றி சுட்டிகளுடன், விரைவில் அருள் எழுதுவார் என்று நம்புவோம்.

என்னைப்பொருத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே கணிணித்துறையில் கற்று/இருந்து வருபவர்களை விட(என்னைப்போன்று:), மற்ற துறையிலிருந்து மென்பொருள்துறைக்கு மாறுபவர்கள் அதிகவேகத்துடன், ஈடுபாட்டுடன் அதைக்கற்று, புதியன அறிந்து கலக்கி எடுக்கிறார்கள். அதற்கு உதாரணம் தமிழ்மணம் காசி மற்றும் இந்த அருள்குமரன் அவர்கள்.

மற்றொரு அதிசயத்தையும் நேற்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவர்தான் தம்பி ஈழநாதன். அவரைப்பற்றிதான் அவருடைய எழுத்து/பதிவுகள் பேசுகிறதே நான் என்ன சொல்வது? அவர் தமிழ்துறையில்தான் ஈடுபடவேண்டும் ஆர்வமிருந்ததாயும் ஆனால் பெற்றொர் கட்டாயத்தால் பொறியியல்துறைக்கு வந்துவிட்டதாயும் ஆனால் இப்போது முடிந்தவரை தமிழ்துறையில் ஈடுபட்டுவருவதாயும் கூறினார். அவர் பெற்றோருக்கு மனதுள் நன்றி சொன்னேன். இல்லாவிடில் தமிழில் பட்டம் வாங்கிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் ஆசிரியப்பணி செய்திடாமல் - அதைவிட சிறப்பான உலகம் பயனுறும் தமிழ் சேவைகள் செய்துவருகிறார் இப்போது இவர் இருபத்திமூன்று இளையர் என்பது அவரிடம் பேசும்போது, அவரைப்படிக்கும்போது மறந்துவிடுகிறது. அவருடைய நோக்கம் பல தமிழ் நூட்கள், கட்டுரைகள், இதழ்கள் இருக்கிறது, வருகிறது -அதை நம் உலகத்தமிழ் மக்கள் அறியச்செய்ய வேண்டும். அதற்கு ஈழத்தமிழ் இலக்கியம் அதிகம் பரிச்சயமென்பதால் படிப்பகம் மூலம் எழுதிவருகிறேன். அதுபோல் நீங்களும் மற்ற தமிழ் நூல்கள் பற்றி எழுதுங்கள், வாருங்கள் இணைந்து செய்வோம் என்கிறார். மதியின் புத்தகவாசமும் மிகுந்த பலனளிக்க இயலும் என்று நம்புகிறார்.

இதுபோக நான் சந்தித்த இன்னொரு நபர் திருமதி சித்ரா-வின் கணவர் திரு. ரமேஷ். அவரும் பொறியியல்துறையில் இருந்தாலும் பரந்த வாசிப்பனுபவம். இணையத்தின் அனைத்து மடலாடற்கு குழுக்களுக்கும், இணைய இதழுக்கும் சென்று வாசிப்பது அவர் பேச்சில் தெரிந்தது. இதுபோன்று தமிழார்வம் உடைய இணை இணையக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அதனால்தான் சித்ரா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் கழகம், பட்டி மன்றம், கவிமாலை, இணைய உலகம் என்று கிளைபரப்ப இயல்கிறது. அவர்கள் திண்ணை, மரத்தடியோடு - இங்கு வலைப்பதிவொன்றும் தொடங்கி கலக்க வரவேற்கிறேன்:)

அப்புறம் திருமதி. ஜெயந்தி சங்கர். அவர்கள் முதன்முதலில் அறிமுகமானது/பேசியது அவள்விகடன்/தமிழ்முரசு பிரச்னையின்போதுதான். அப்போது அந்தக் கலக்கதில்தான் மிக மெதுவாக பேசுகிறார் என்று நினைத்தேன். ஆனால் நேற்று சந்திப்பின் போதுதான் தெரிந்தது, அவருடைய சாந்தம், அமைதி, தன்னடக்கம், வெட்கம்... அவர் தன்னுடைய அவள் விகடன் கட்டுரையை குறள் சொல்லி ஆரம்பித்தற்குப் பதில் தமிழ்முரசு லதாவின் தீவெளி கவிதை நூலில் உள்ள என்னாலா மைக்? கவிதை சொல்லி ஆரம்பித்திருந்தால் தப்பியிருப்பார். பிள்ளைகள் நேரம்கொடுக்கும்போதெல்லாம் எழுத்தே தவமாய் நிறைய எழுதுகிறார்.

சரி இதுவரை போதும்... எழுத இருக்கு இன்னும் பல விஷயம், ஆனால் வீடு வா வாங்குது:) அதனால் மீதியை மற்ற மக்கள் கவனிச்சுக்கோங்கப்பா.

3 comments:

meenamuthu said...

நன்றி அன்பு, சதுர மேஜையில் கலந்து
கொள்ள வைத்து! அப்படியே சுவையான
பலகாரவகைகளையும்!சேர்த்துக்
கொடுத்துவிட்டீர்கள்!
விரிவான பதிவு சுவாரஸ்யமாக
இருக்கிறது

வசந்தன்(Vasanthan) said...

பதிவுகள் நன்றாக இருக்கிறது. விரிவான சுவையான தகவல்கள்.

Kasi Arumugam said...

//தமிழர்கள் நமக்கே உரிய குணம், ஏதாவது இதுமாதிரி பேசினால் - அபாராம், சபாஷ் என்பார்கள் அப்புறம் போய்ண்டே இருப்பாங்க.//
இது ரொம்ப முக்கியம். ஊக்குவிக்கிறேன் பேர்வழின்னு எல்லாதையும் பாராட்டினாலும் தப்பு. மறுமொழியும்போதும் முடிந்தவரை அதில் ஒரு கூடுதல் கருத்தோ தகவலோ இருந்தால் நல்லது. அப்படி இல்லாதபோது அருமை-எருமை;-)ன்னு ஒரு குத்து குத்திடலாம்:-)