Monday, June 14, 2004

சற்றே நிமிர்ந்தேன்... தலைசுத்திப் போனேன்...

வணக்கம்.

ஓரிரு வாரங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருதை பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா இங்கு சிங்கையிலும், மலேசியாவிலும் நடந்தது. விழாவில் பேசிய அனைவரும் இது தொடக்கம்தான், விரைவில் நோபல் பரிசு பெற்றுத்தர வேண்டும் என்று வேண்டினார்கள்.
கவிப்பேரரசு பேசும்போது, தமிழ் செம்மொழியாகும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறுதியிட்டு, உறுதியுடன் கூறினார்கள். இப்போது அறிவிப்பு வெளியாகிவிட்டது. நன்றி.

விழாவன்றுதான் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' வாங்கினேன், படித்த வரை மிகவும் சிறப்பாக இருக்கிறது, நல்ல அனுபவம் - கிராமத்து வாழ்வை பேயத்தேவருடன்
நாமும் வாழ முடிகிறது.

விழாவுக்கு முதல்நாளிரவு கவிஞருடைய "கேள்விகளால் ஒரு வேள்வி"
(வெவ்வேறு நேரத்தில், வடிவத்தில் வந்த கவிஞரின் கேள்வி/பதில் தொகுப்பு)
புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன் அதிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி: நீங்கள் ரசித்த சில புதுக்கவிதைகளைச் சொல்ல முடியுமா?

பதில்:
அழகாகச் சொல்லுவேன். அது எனக்கு ஆனந்தமல்லவா?

அண்ணன் மீராவின் அச்சுக்கு வராத ஒரு கவிதையைப் பார்க்க
நேர்ந்தது.

அப்படியே சொக்கிப் போனேன்.

புதுக்கவிதையென்பது அழகியலுக்கு அந்நியமானது என்ற கருத்து
பரவலாகப் பரப்பப்படுகிறது.

அல்ல; அப்படியல்ல.....

(என்று தொடர்கிறது... இடையில்...)

இன்னும் ஒரு கவிதை.

அங்க வர்ணனையக்கூட ஒரு கவிஞன் எவ்வளவு அழகாகச்
சொல்லியிருக்கிறான்
என்று வியந்து வியந்து வியப்பின் உச்சிக்குச் சென்று விழுந்து
விட்டேன்.

நுட்பமான ஒரு விஷயத்தையும் அவன் செப்பமாகச் சொல்லியிருக்கிறான்.

நான் படித்த அந்தக் கவிதை நயமாக இருக்கிறது.
ஆனாலும் உங்களுக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது.

தன் காதலியைப் பார்த்து அவனது கவிதை கண்ணடிக்கிறது.

பிறகு சொல்கிறது;

"உன் இடையப்
பார்த்தபோது
பிரம்மன் கஞ்சன் என்று நினைத்தேன்.
சற்றே நிமிர்ந்தேன்
அவன் வள்ளலென்று
கண்டு கொண்டேன்."

இப்படியெல்லாம் அழகுணர்ச்சியின் அடையாளங்களாக மட்டுமல்ல -
போர் முரசின் குரல்களாக ஒலிக்கும் புதுக்கவிதைகளையும்
ஓராயிரம் உதாரணம் காட்ட முடியும்.

(என்று பதில் மேலும் தொடர்கிறது).

இந்த நூல் ஆறேழு வருடமாக என்னிடம் இருந்தாலும் கூட
அந்தப்பக்கத்தை அன்றுதான் வாசித்த நினைவு.
படித்தவுடன் உண்மையில் மிகுந்த (இன்ப) அதிர்ச்சி.

ஜீன்ஸ் -திரைப்பாடல்கள் வெளியானதிலுருந்து இன்று வரை
இந்தப் பாடல் வரிகளைக்குறிப்பிட்டு
கவியரசையும், ஐஸ்வர்யாவையும் புகழ்ந்து வந்திருக்கிறோம்.
ஆனால் அந்த புதுக்கவிதைக்கு சொந்தக்காரன் யாரோ!?

பி.கு:
என்னிடம் இருப்பது நூலின் மூன்றாவது பதிப்பு - ஜனவரி 1995ல்
வெளியானது.
அதில் கவிஞர் கையெழுத்திட்டுருப்பது 15.11.84 என்ற தேதியுடன்,
அதனால் நூலின் முதல் பதிப்பு 1984-லேயே வெளியாயிருக்கிறது.
அதை எப்படிப் பயன்படுத்தியுள்ளார் பாருங்கள்...
அந்த அழகுணர்ச்சி பாராட்டுக்குரியது.
முன்னர் ரோஜா வெளியானபோது,
"சின்ன சின்ன ஆசை..."யைக்கூட யாரோ என்னோடது என்ற
செய்தி படித்த நினைவு.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

No comments: