Friday, July 22, 2005

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளம்...

வணக்கம்.

இன்று சிங்கப்பூரில் புதியதொரு சுற்றுலா தளம் திறப்புவிழா காணுகிறது. இது மற்ற சுற்றுலா தளங்கள் போலல்லாமல், பெரும்பாலும் சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கானது - சுற்றுலாப் பயணிகளும் இங்கு செல்ல தடையேதுமில்லை. இந்த புதிய இடம், இதுபோன்ற பழைய இடத்தை விட பல மடங்கு பெரியது. இது ஒரு கண்ணாடி மாளிகை. 16 தளங்களுண்டு, இடையிடையே கண்ணுக்கும், மனதுக்கும் ஆறுதலளிக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் மூலிகைகள். 16-வது தளத்தில் இருந்து சிங்கப்பூரை கண்களில் கொள்ளை கொள்ள வசதி. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு செல்ல அனுமதி இலவசம்



இன்று திறப்புவிழாகாணும்
புதிய தேசிய நூலகத்துக்கு
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...

புதிய மேம்படுத்தப்பட்ட இணையத்தளம்...

புதிய நூலகம் பல வசதிகளைக்கொண்டுள்ளது. தேசிய கலைகள் மன்றத்தின் நாடக அரங்கும் இங்கு ஒருங்கமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. மற்ற சிறப்புக்களை இங்கு பட்டியலிடுவதை விட, வாருங்கள் அங்கு சென்று கண்டு கேட்டு படித்து உண்டு வருவோம்...



மேலும் விபரங்களுக்கு...

தமிழ்த் தொகுப்பு பற்றிய விபரங்கள் நூலகத்தின் இணையத்தளத்தில் இருந்து....
( நன்றி: தேசிய நூலக வாரியம்)

லீ கொங் சியன் மேற்கோள் நூலகத்தின் தமிழ்ப் பிரிவில் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் அடங்கியத் தொகுப்புகளைக் காணலாம். தமிழ்ப்பிரிவில் அனைத்து நூல்பிரிவுகளிலும் புத் தகங்கள், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு, மெய்யியல், சமயம், சமூகவியல், மொழியியல், அறிவியல், கலைகள், இலக்கியம், புவி யியல், வரலாறு என்று எல்லாப்பிரிவுகளிலும் புத்தகங்களைக் காணலாம். உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலருக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களான பாரதியார், பாரதிதாசனார், கல்கி, அறிஞர் அண்ணா, அக லன் இன்னும் பலரின் சிறந்த படைப்புக்களும், தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புக்களும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் துறையின் சிறப்பம்சம்

இத்துறையின் சிறப்பம்சமாக சமயம், மொழியியல், கலை, இலக்கியம் ஆகிய நான்குப் பிரிவுகளைக் கூறலாம்.

சமயம்
குறிப்பாக, சைவ, வைணவத் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்கள், இந்துக்கலாச்சாரம், குலதெய்வ வழிபாடு கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், யோகம், போதனைகள், இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், தி ருவிளையாடற்புராணம் இஸ்லாமியப் புத்தகங்கள் மற்றும் பல சைவ வைணவ நூல்கள் அடங்கும்.

மொழியியல்
தமிழ் மொழி வரலாறு, சுவடி மொழிபெயர்ப்புகள், இலக்கண நூல்கள், அகராதிகள் போன்றவை அடங்கும்.

கலை
நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள், நாடக வரலாறு, மேடை நாடகம், கர்னாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துரையினரின் நினைவுகள், திரையிசை க் கலைஞர்களின் வரலாறு என்று பல தகவல்கள் அடங்கிய அரிய புத்தகங்கள் உள்ளன.

இலக்கியம்
தமிழ்த் துறையின் முக்கிய அம்சமாக இப்பகுதி விளங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அக்கால இல க்கியத்திலிருந்து இக்காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்ப்ட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங் கள், இலக்கிய வரலாறுகள், இலக்கிய ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சைவ வைணவ இலக்கி யங்கள், பாரதியார், பாரதிதாசனார், அரிஞர் அண்ணா மற்றும் பலரின் இலக்கியப்படைப்புகள், மலேசி ய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழிக்கதைகள், என்று பரந்த அளவில் படைப்புகள் சேக ரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஒரு சிறந் த கருவூலமாக விளங்கும்.

சஞ்சிகைகள்
மொத்தம் 45 சஞ்சிகைகள் இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்ற து. இயல், இசை, சினிமா, அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், சிறுவர் மலர், வர்த்தகம், கணினி, மருத்து வம் என்று அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பத்திரிகைகள் வாங்கப்படுகின்றன.

Tuesday, July 05, 2005

No more kuppai.com - இனியெல்லாம் குப்பை.வணி (வாணி!?)

வணக்கம்.

வழக்கம்போல சிங்கை தகவல்தொழிநுட்பததின் மூலம் தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு செய்திருக்கிறது. தகவல் மேம்பாட்டு ஆணையம் (Infocomm Development Authority - IDA) வெளியிட்ட நேற்றைய அறிவிப்பின் படி இனி தமிழிலேயே வலைத்தளமுகவரி (URL - உரல்) வைத்துக்கொள்ள இயலும். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இங்கே...
இந்த திட்டம் முதல் ஆறுமாதத்துக்கு பரீட்சாத்தமுறையில் அமையும்.

இதைப்பற்றிய மேல் விபரத்திற்கு:http://www.idn.sg/

அது எப்படி செயல்படப்போகிறது?

பி.கு:
கடந்த நான்கைந்து வருடங்களாகவே இந்த முயற்சியில் i-dns.net என்ற நிறுவனம் இருந்தது தெரியும். அவர்களுடைய தளத்தில் இதுதொடர்பில் மேல்விபரம் உள்ளது. அந்நிறுவனத்தின் திரு. மணியம் சில தமிழ் இணைய மாநாடுகளில் இதுதொடர்பில் உரைநிகழ்த்தியதாக நினைவு.

Friday, June 10, 2005

புத்தக சங்கிலி... என்னோட பங்குக்கு...

வணக்கம்.

இந்த ஒரு சில வாரங்களாக வேலைப்பளு அழுத்துவதால் தமிழ்மணத்துக்குக் கூட அடிக்கடி வர இயலாத நிலை. இதற்கிடையில் இந்த புத்தகவிளையாட்டுத் தொடர் வேற ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது - அப்புறம் வேலை ஓடுமா... கொஞ்ச நேரத்துக்கொருதடவை இப்ப யாரு எழுதியிருக்கிறாங்க, என்னென்ன புத்தகங்கள், அவங்களோட அனுபவங்கள்னு ரொம்ப சந்தோசமா படிச்சிட்டிருந்தேன். அதிலும்
சிங்கை நூலகத்தின், வாசிப்போம் சிங்கப்பூர்! நிகழ்வின்போது இந்த புத்தகச்சங்கிலி அமைந்தது இன்னும் சிறப்பு. இந்தப் பதிவுகளைத் தொகுத்து ஒரே இடத்தில் இட்டால் பயனுல்லதாயிருக்கும், பார்க்கலாம்.

ஒருபக்கம் நம்பள யாரும் கூப்பிடல்லையேன்னு ஒரு யோசனை.... அதே நேரம் குமார், விஜய்னு புயல் நம்ப இடத்துக்கு நெருங்கிய உடனே அய்யய்யோ யாராவது நம்பளைக் கைகாட்டிட்டா என்னை எழுதுறதுன்னு ஒரு பயம்வேற... அப்படியே நேற்றைக்கு வேலையில், விட்டுட்டேன்.

இன்னிக்கு காலைல வந்துபார்த்தா நண்பர்கள் கோபி, பாலா, நவன் ஆகியோர் என்னோட பேரை தெரியாத்தனமா சொல்லிருக்கிறாங்க... அவங்களுக்கு என் நன்றி.

இப்போ என் பங்குக்கு... :

எல்லாரும் தன்னுடைய முதல் வாசிப்பாக குறிப்பிடுவது அம்புலிமாமா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ் வகையறாதான். ஆனால் எனக்கு அறிமுகமான முதல் புத்தகமே குமுதந்தேன்... தேன் குடித்தவண்டாய் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!?
(இத வச்சுட்டு இந்தப்பதிவ மேல படிக்கணுமா வேணாமான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க:)

அதுக்கு முன்னாலல்லாம் கிராமத்துல மடத்துல வர தினத்த்ந்தி, தினகரன், தினமலரை பெரிசுங்க இல்லாதநேரம் சண்டை போட்டுட்டு படம் பார்ப்போம். வாரயிறுதியில் ஊருக்குவரும் அப்பா வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் பையத்தொறந்து புது குமுதத்துக்கு அக்காவோடு ஒரு சண்டை நடக்கும். கொஞ்சநேரம் படம் பார்த்து, ஆறுவித்தியாசம் பார்த்து தூக்கிப்போட்டுட்டு பையுள் இருக்கும் மக்ரூன், மிக்ஸர் பக்கம் கவனம் போய்டும்...

இப்படியே போய்க்கிட்டிருந்த வாழ்க்கை, பக்கத்துவீட்டில் விடுமுறைக்கு கிராமத்துக்குவரும் ரேவதி குடும்பத்தார் ஊரிலிருந்து கொண்டுவரும் ராஜேஷ்குமார், பிகேபி, சுபா புத்தகங்களால் நாவல் படிக்கும் அளவுக்கு வளர்ந்து...(ரொம்ப முக்கியம்... :) பள்ளியிறுதிவரை இவர்கள் மட்டும்தான் பரிச்சயம். பின்னர் கல்லூரிக்கு சென்றபின் வயதுக்கேத்த எல்லா புத்தகங்களின் பரிச்சயமும் வந்தது.

இதற்கிடையில் சுஜாதா அறிமுகமாக, தினமணிக்கதிர் போன்றவற்றுல் வரும் கட்டுரைகளை புரியாமல் படித்துவைப்பேன். பின்னர் பாலகுமாரன் அறிமுகமானாலும் ஆனார்... பாலகுமாரன் என்று ஒரு பேப்பரில் எழுதியிருந்தால்கூட அதையும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியே கவிதைகள் கொஞ்சம் ஈர்த்தது. வைரமுத்து வசப்பட்டார். பாலகுமாரன்/வைரமுத்து கூட்டணி நண்பர்கள் மத்தியில் என்னை பிரபலப்படுத்தியதாலும், என்னைக்கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க வைத்ததாலும் முதன்முதலாக புத்தகங்கள் காசுகொடுத்து வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். ஒருமுறை ஏதோ படித்தவேகத்தில் கவிதைநடையில் ஒரு கடிதம் எழுது கவிஞருக்கு அனுப்பி, உங்களை சந்திக்க விழைகிறேன் என்று சொல்ல - ஈரோட்டில் வானமே எல்லை படவிழாவுக்கு வருகிறேன், முடிந்தால் வந்து சந்தியுங்கள் நண்பரேன்னு பதில் எழுதியது நண்பர்களிடம் மாட்ட - வைரமுத்துவின் பாஸ்கரன் லெவலுக்கு இந்த பாஸ்கர் பந்தா உட்ட காலமுண்டு.

அப்போதெல்லாம் வரும் நாவல் டைம், பாக்கெட் நாவல் அது இதுவென ஜி.அசோகன் (சார் இப்ப எப்படி இருக்காருன்னு தெர்ல) என்ன புத்தகம் போட்டாலும் வாங்கியகாலமுண்டு. சுஜாதா சார் வேற அப்ப, நான் மாதாந்திர நாவல்ல எழுதமாட்டேன் - அத பயணத்தின் போது படிச்சிட்டு இறங்கும்போது தூக்கிப்போட்டிருவாங்கன்னு சொல்லி - எண்ட்ட வாங்கி கட்டிண்டார்:)

அப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை அப்புறம் நான் கவிதை படிப்பேன்னு நாலுபேரு ஏத்தி விட்டதால கவிக்கோ, மீரா, மு. மேத்தா போன்றவர்கள் பக்கம் விரிவடைந்து அப்படியே போய்க்கொண்டிருந்த பயணம் இங்கு சிங்கப்பூரில் 96ல் வந்ததில் இருந்து கொஞ்சம் காசு கொடுத்து வாங்குவது அடங்கியது.

அப்புறம் இங்கு சிங்கை நூலகம் வாசிப்புக்கு பெரிய தீனி போட்டது... எனக்கு வேணும்னு நேரந்தவறாமல் சென்று நம்ப பங்குக்கு வாங்கினாலும் (முட்டியிலே பசித்ததால்) அதிகம் சாப்பிடுவதில்லை. இருந்தாலும் எனக்கு பிடித்த இடம் - புத்தகமும், புத்தகம் சார்ந்த இடங்களும்தான். அதிலும் சிங்கை நூலகங்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள வசதிகளுக்காகவே நேரம்கிடைக்கும்போதெல்லாம் சும்மா புத்தகத்தை நோண்டிண்டேயிருப்பேன்.

சிங்கை தேசிய நூலகத்தின் புதிய கட்டிடம வேறு அடுத்தமாதம் திறக்கப்பட இருக்கிறது. அதன் பிரமாண்டத்தையும், வசதிகளையும் பார்க்க...

வாரந்தவறாமல் நூலகம் போவேன் தொழில் சார்ந்த ஒரு நாலு தலையணைகள், தமிழில் சில என்று அள்ளி வருவேன். கொஞ்சநாள் கழித்து மின்னஞ்சலில் ஞாபகமுறுத்தல் வந்தால் மறுவாரம் கொண்டுசென்று போடுவேன் - பல நேரம் அபராதத்துடன். இருந்தாலும், திரும்பவும் ஒரு 8 புத்தகங்களோடு வீடு திரும்புவேன். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக இது வழக்கமாகிவிட்டது - இப்போது துணைக்கு மகள் எழிலும் அவள் பங்குக்கு 4.

மற்றப்படி குடியிருப்பது தமிழ்மணத்தில் என்பதால் அதிகம் வெளியில் சென்று வாசிப்பதில்லை. தவிர அனுதின ஒருமணிநேரதுக்குமேலான பயணத்தில் பெரும்பாலும் படிப்பது நாள்/வார/மாத இதழ்கள்தான்... அதையும் மீறி

சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்:

தமிழ்மணம்
(தினசரி பலமுறை வாசிக்கும் தினசரி)

ஒலி 96.8
(தகவல், கலைக் களஞ்சியம்)

என் சோட்டுப் பெண்: தமிழச்சி
(பேராசிரியை சுமதி இவர் அருப்புக்கோட்டை/மல்லாங்கிணறு மறைந்த வே. தங்கப்பாண்டியன் அவர்களின் மகளாம் - கிராமத்துல பார்க்கிற பாட்டி, பக்கத்து வீட்டுப் பொண்ணு, மரம், குளம், மாடு மேய்க்கும் மூக்கையா, மாமன்... என்று எங்கள் ஊரில் இருக்கும் பலரையும் பற்றி எழுதிய கவிதைகள் போன்று இருந்ததால் மனதைத்தொட்டது. அதிலும் அவருடையை தந்தை அவர்மீது வைத்திருந்த பாசம், அவரின் இழப்பு பற்றிய கவிதைகள் கண்ணீரை வரவழைத்தது. புத்தக வடிவமைப்பு, புகைப்படங்கள், தரம் அருமை)

சோம. வள்ளியப்பன் எழுதிய் அள்ள அள்ள பணம் மற்றும், நேரமேலாண்மை பற்றிய "காலம் உங்கள் காலடியில்."
(பங்கு வர்த்தகம் பற்றிய சமகால உதாராணங்களுடன் கூடிய நல்ல புத்தகம்)
அதென்னவோ சில காலமாய் நான் படிப்பது (குறைந்தபட்சம் படிக்க நினைப்பது) எல்லாம் பணத்தைச்சுற்றி, வாழ்க்கையைச் சுற்றியே இருக்கிறது. சிங்கை நூலகம் நாளிதழில் எழுதும் புத்தக மதிப்புரைகளும் பெரும்பாலும் பொருளாதரம் தொடர்பானதாகத்தான் இருக்கிறது பாருங்களேன்.

துணையெழுத்து
(ரொம்ப அனுபவித்து, இனிய, சோக, கசப்பான, சந்தோசமான எல்லா உணர்வோடும் படித்தேன். அவரை மாதிரி நம்பளுக்கு ஊர்சுத்த முடியலையேன்னு கவலை வரவைத்ததது...)

ரா.கி.ரங்கராஜனின் "நாலு மூலையிலும் சந்தோசம்" படிக்கப் படிக்க இனிமை - இன்னொரு (சுஜாதா)ரங்கராஜன் என்று உணரவைத்த புத்தகம்.

மற்றப்படி இப்போது கைப்பையில்:
இன்றைய தமிழ்முரசு, சமீபத்திய The Week, DataQuest & India Today.

மொத்தக் கையிருப்பு:
ஒரு 150 தேறும் (வயிற்றுப்பிழைப்புக்கு வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை நீங்கலாக)

சமீபத்தில் தருவித்தது:
துணையெழுத்து
அம்மா வந்தாள்
சைக்கிள் முனி
டாலர் தேசம், மெல்லினம்
அண்ணா, குஸ்வந்த்சிங்
அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில்
தீபாவளி மலர்கள் உட்பட ஒரு 50 புத்தகங்கள்.

நான் படித்ததில் பிடித்தது:

வைரமுத்துவின் - சிகரங்களை நோக்கி
(திருஞானமாக மாறி பலமுறை வாசித்ததுண்டு. இப்போது இதை எழுதும்போதுகூட அந்த குளிர் காதில் உணரமுடிகிறது. மலைதேசத்து கேரட்டின் இனிமை தெரிகிறது.
பூட்டு - மனிதனுக்கெதிராக போட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானம். பூட்டு காற்றில் ஆடி அதை வழிமொழிந்தது
இது போன்ற பல வரிகள்...இப்போது நினைத்தாலும் எடுத்துட்டு உட்காந்திடுவேன்).

சாவியின் - வாஷிங்கடனில் திருமணம்.
(ரசித்து சிரித்தேன், சிரித்து ரசித்தேன்)

அகிலன்(தானே!?) - சித்திரப்பாவை
(நண்பர் மகன் ஒருவருக்கு பள்ளியில் தேவைப்படுகிறது என்று இங்கு நூலகத்தில் எடுத்து, எதேச்சையாக படிக்க ஆரம்பித்து - ஒரே மூச்சில்:) படித்து முடித்துவிட்டு வைத்தபுத்தகம்)

துணையெழுத்து
(புத்தகத்தோடு வாழமுடியும்)

வைரமுத்துவின் - இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள்
(பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துக்கு வித்திட்ட புத்தகம். ஆனால் அதில் பிடித்தது இப்போது ஞாபகம் வருவது: தாத்தா பொன்னையாத்தேவர், பாஸ்கரன், அந்த முடி போட்டு சமைத்த பாட்டி, நான்காவது பொன்னென்று உண்டென்றால் அதற்கு பாலு என்று பெயர்வைக்கலாம் "பாலு", யேசுதாஸ், சிவசங்கரி, ஏவி. எம். சரவணன்)

பாலகுமரான் - மெர்க்குரிப்பூக்கள்
(காரணம் ஏதும் சொல்லனுமா என்ன?
பாலகுமாரன் என்னை ஆக்ரமித்த ஒரு எழுத்தாளர். ஒரு காலத்தில் நண்பராக, தெரிந்தவராக தனது எழுத்து மூலம் பேசினார் - பின்னர் தாடி வளர்த்தபிறகு எனக்கு சாமியாகிவிட்டார்).

சுஜாதா - நகரம், ஸ்ரீரங்கத்து கதைகள், ஓரிரு எண்ணங்கள் மற்ற பல கட்டுரைகள்.

வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்:
உபபாண்டவம்
பாதியிலிருக்கும் "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்", "கள்ளிக்காடு இதிகாசம்", மெல்லினம், ராகாகி, அம்மா வந்தாள்...
God of Small Things (இதுவும் தமிழில் வருவதாக கேள்விப்பட்டேன், அதனால் விரைவில் வாசிக்க வாய்ப்பிருக்கிறது.

இது போன்று அவ்வப்போது வரும் எல்லாவற்றையும் எழுதிக்கொள்ளலாம்.

மற்றப்படி, என்ன... இவன் ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி எழுதவே இல்லை என்று ஒருவேளை உங்களுக்கு உறுத்தியிருந்தால்...
தமிழிலேயே ஒழுங்கா படிக்க நிறையா இருக்குதுன்னு சமாளித்தாலும்...

ஒருநாள் மகளின் (பாலர்பள்ளி) ஆங்கில வீட்டுப்பாடம் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தபோது,
என்னப்பா நீங்க இப்படி இருக்கிறீங்கன்னு மகள் கேட்க,
நீ தமிழ்ல்ல எதாவது டவுட் கேளுன்னு சொல்ல,
அதான் உங்களுக்கு க ங ச-வும் ஃபுல்லா தெரியலியேன்னு முறைக்க....

வேற வழியில்லாமல்,
அ ஆ இ ஈ.... A B C D யில்லிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...
அதனால அப்படி ஒரு லிஸ்ட் வேணும்னா அடுத்தபிறவில்ல ஒரு Book meme போடலாம்:)


நிற்க...

அடுத்து நான் இந்த ஆட்டத்துக்கு அழைக்க நினைப்பவர்கள்:

இகாரஸ் பிரகாஸ் (மறுபடியும் வாங்களேன், முதல் ரவுண்டில் புத்தகப் பட்டியல் மட்டும் இட்டுவிட்டீர்கள் - அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மறுபிரசுரம் செய்யுங்களேன் ப்ளீஸ்)

நாராயணன்
மானஸாஜென்
நா. கண்ணண்
வெங்கட்
காசி
அருணா ஸ்ரீநிவாசன்
கோவில்பட்டி கணேஷ்
டோண்டு ஐயா

இவர்களை யாராவது ஏற்கனவே சொல்லிருந்தாலும் பரவால்ல, இதுவரை எழுதலதான:)

மேலும், வலைப்பதிவு இல்லாவிட்டாலும் தமிழ்மணத்துக்கு தினம் வரும், புத்தகங்கள் படிக்கும்:
சிங்கை பிரஷாந்தன் (சாந்தன்)

மற்றப்படி புத்தகம் என்று நினைத்தால் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும்:
"தினம் ஒரு கவிதை" சொக்கன்
"ஒலி 96.8" மீனாட்சி சபாபதி

நன்றி வணக்க்க்க்க்கககம்.

Tuesday, May 24, 2005

வேணுமா... வேணாமா....

தமிழ்... தமிழ்... தமிழ்....

என்று (வலைப்பதிவு)உலகில் எங்கு சென்றாலும் ஒலிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ, அசிங்கமோ தமிழில் ஒலிக்கிறது. தமிழைப் பழித்தாலும் இங்கே வருகிறது, தமிழைப் பாராட்டினாலும் இங்கே வருகிறது. கடந்த சிலவருடங்களாக இணையத்தின் மூலமும், குறிப்பாக இப்போது வலைப்பதிவுகள் மூலமாகவும் முன்னெப்பேதும் இல்லாத அளவு தமிழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் கணிணி மென்பொருட்களை தமிழ்படுத்துததல், தமிழ் வழி கல்வி, தமிழிலேயே அனைத்தையும் படிக்கவேண்டும் போன்ற பல கருத்தாடல்கள் இங்கே.

அதுக்கென்ன இப்போ...
இதான் விடயம்.... ஒரு சந்தேகம்:

சீனாவிலும் (கொரியா, தைவான், ஹாங்காங்), ஜப்பான் போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில், கக்கூசில் எங்கும் இருக்கிறது. ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது என்ற ஒரு கூற்று ஒரு புறமும், அவர்கள் அவர்கள் மொழியிலேயே படிப்பதால் - ஆங்கிலமே தெரியாமல் சிரமப்படுகின்றனர் என்பது இன்னொருபுறமும் தெரியவருகிறது.

இங்கு சிங்கை நூலகத்துக்குச்சென்றால் மாண்டரின்(சீன) மொழியில் எல்லா வகையிலான நூல்களும் வெளிவருகிறது.

Image hosted by Photobucket.com

எங்களுடைய நிறுவனத்தின் சுசோவ் (Suzhou - China) பிரிவிலிருந்து வருபவர்கள் கணிணியிலிருந்து பார்ப்பதெல்லாம் சீன மொழியில்தான் வருகிறது. ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வருத்தப்படுகின்றனர். இதே நிலை ஜப்பானியர்களுடன் தொடர்புகொள்ளும்போதும்.

மெக்ரா-ஹில் போன்ற பிரபல பதிப்பகங்களே புத்தகங்களை வெளியிடுகின்றன. என்னைப்பொருத்தவரை தனிப்பட்டமுறையில் இதுபோன்று நானும் எனக்குத்தெரிந்த தமிழில் படித்துப்புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இதுபோன்ற நிலையை நோக்கித்தான் நாம் முன்னேறுகிறோமா, இதற்காகத்தான் இந்தப் போராட்டங்களா?

Image hosted by Photobucket.com

சீனா, ஜப்பான் போல் இந்தியா மன்னிக்கவும் நம் தமிழகம் (மொழியில் ) ஆவது நல்லதா, கெட்டதா - வேணுமா, வேணாமா?

Monday, May 16, 2005

(என்னுடையதல்லாத) பழைய பதிவுகள்...

ஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்

'அப்பா, ஐ டொன்ட் வான்ட் டு பி எ கேர்ல்' என்று என்னிடம் வந்து அழுதது குழந்தை. விசாரித்தேன். என் மகளின் பள்ளித்தோழி, அவளும் ஒரு இந்தியரின் குழந்தை, அவள் வீட்டில் ஒரு தம்பி பிறக்கப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தன் அம்மாவின் வயிற்றுக்குள் இப்போது இருக்கிறான் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அம்மாவின் வயிற்றை கத்தியால் வெட்டித் தான் குழந்தையை எடுப்பார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறாள். அதிலிருந்து ரெண்டு நாளைக்கு கண்ணில் மிரட்சியுடன், இதே புராணம். பெரிதானால் தன் வயிற்றையும் வெட்டுவார்கள் எனவே நான் பெண்ணாக இருக்க விரும்பவில்லை. இது எப்படி இருக்கு?.....
.......
......
.....

தமிழும் மற்ற மொழிகளும்...

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பார் பாரதியார். இன்னொரு இடத்தில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என்பார் அவரே. எது உண்மையில் சிறந்த மொழி? ஒவ்வொரு மொழியும் அதை நன்கு அறிந்து ரசிப்பவருக்கு இனிமைதான். ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் போட்டி நடத்துவது, 'என் அம்மாவின் பாசம் உயர்ந்ததா, உன் அம்மாவின் பாசம் உயர்ந்ததா' என்று கேட்பதற்கு சமம். முதலில் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது என்பது வீண்வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. 'கணினிக்கு சம்ஸ்க்ருதம் ஏற்றது, இசைக்கு தெலுங்கு ஏற்றது, இதுக்கு இந்தி ஏற்றது, அதுக்கு ஆங்கிலம் ஏற்றது' என்பதெல்லாம் சரியெனப்படவில்லை.

எது ஒருவருக்கு சமூக அடையாளம்?

என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் சமூகம், பொழுதுபோக்கு, சமயம், அரசியல் என்ற பல விஷயங்களில் ஒருவர் தன் மொழிப் பின்புலத்துக்கேற்பத் தான் பங்கேற்கிறார். இங்கு ஒன்றை அவதானிக்கலாம்: ஒரு நாட்டில் பிறந்தவரை அடையாளப்படுத்தும்போது அவர் நாட்டையோ, மதத்தையோ, நிறத்தையோ யாரும் முன்னிறுத்துவது இல்லை. ஒரு ஆங்கிலேயரை, He is an Englishman என்கிறார்கள், He is an Englandman என்பதில்லை. அதே போல், French, Dutch, Polish, Spanish, Italian, Chinese, Japanese...என்றுதான் சொல்கிறார்கள். முறையே, Franceman, Netherlandman, Polandman, Spainman, Chinaman, Japanman.. என்று சொல்வதில்லை. இது ஏனென்றால், ஒருவர் மதம் மாறலாம், குடியுரிமை பெற்று வேற்று நாட்டு குடிமகனாகலாம், அவரால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரே அடையாளம் தாய்மொழி. அதன் காரணமாகவே இவ்வாறு என்றும் நிரந்தரமான அடையாளத்தால் ஒருவரை அழைப்பது. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, இக்கருத்துடன் ஒத்துப் போனாலோ போகாவிட்டாலோ, தமிழர் குடும்பத்தில் பிறந்து தமிழரோடு வளர்ந்தவர் அனைவரும் சாகும்வரை தமிழரே. புலம்பெயர்ந்தோருக்கும் இது பொருந்தும்.

தமிழ் வாழ ஏதும் செய்ய வேண்டுமா?

'நாம் தமிழுக்கு என்ன செய்தோம்' என்பது அவ்வளவு முக்கியமான கேள்வியல்ல. இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் சுற்றமும் நட்புமே சுருங்கிக் கொண்டு வருகையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் தேவையும் இருக்கிறது? ....
..........
..........
.........

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking)

அன்று ஒரு நாள் Broadband Wireless Router ஒன்றை வாங்கியதில் கிடைத்த அனுபவங்களை (லாபங்களையும்!) எழுதியிருந்தேன். ஒரு ஆர்வத்தில் அதை வாங்கப் போய் அதில் உள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களில் லயித்துப் போய் நிறையத் தெரிந்தும் கொண்டேன். அதில் சிலதை இங்கு பதிக்கிறேன், இதில் புதிதாய் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது பிரயோசனப்படும் என்பதால்................
...............
............

=================================

இதெல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி இருக்குதுன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா... நீங்கள் வலைப்பதிவில் பழம்தின்று எதையோ போட்டவர். அதனால் உங்களுக்கு ஒரு சலாம்... போய்ட்டு வாங்கண்ணே....

அப்படியில்லாத என்னைப்போன்றவர்களுக்காக இங்கே....

"தமிழ்மணம்" காசி இப்போதான் அத்திபூத்தார்போல் எழுதுகிறார்... அவர் அந்தக் காலத்தில் இதுபோன்ற பல பதிவுகள் எழுதியிருக்கிறார் (என்பது எனக்கும் இன்றுதான் தெரியும்:) மேலே படிக்க, அவருடைய பழைய வீட்டுக்குச் செல்லுங்கள்:
காசியின் பழைய பதிவுகள்...