Tuesday, August 03, 2004

நவீன அம்மா

அம்மா,
பால் கொடுக்கவில்லையென
உன்பால் எனக்கில்லை கோபம்!

நீ கொடுக்கும் முத்தம்கூட
கடிகாரத்தின் துணையோடுதானே!

எந்தக் கோட்டையைப் பிடிக்க
அரைவேக்காடு அரிசியை
அள்ளிப்போட்டுக்கொண்டு
இப்படி ஓடுகிறாய்?
என்னுடைய 'டாட்டா'
காற்றில் வீணாய்ப்போகிறதே!

பள்ளிப் புத்தகத்தில்
'நிலா நிலா வா வா!', என
அம்மா சோறு ஊட்டுகிறாள்!
ஆனால்,
புறமுதுகிட்ட வீரனைப்போல்
சோர்ந்து திரும்பும் நீ,
அவசரச் சட்டம்போல்
சமையலறையில் புகும் உனக்கு,
அப்பாவின் புதுப்புது அர்ச்சனைகள்!
நீ தட்சணை கொடுத்தும்,
ஏன் இந்த அர்ச்சனைகள்?

நீ தூங்கம்மா, தூங்கு,
நான் உனக்குத்
தாலாட்டுப் பாடுகிறேன்!

- ஆர். ஆனந்தி

'தினத்தந்தி குடும்பமலர் - 25/07/2004' வந்த இந்தக் கவிதை இன்று
தினம் ஒரு கவிதையாக வெளியாகியுள்ளது.

நல்ல கவிதை கணையாழியில்தான்
வெளிவரவேண்டுமென்பதில்லை.
குடும்பமலர், வாரமலரிலும் வரலாம்.
நல்ல கவிதைகளைத் தேடி, தேடி
தினம் ஒரு கவிதை
கொணர்ந்தமெக்கு சேர்க்கும்
நண்பர் சொக்கனுக்கு
கோடானுகோடி நன்றி.



1 comment:

Boston Bala said...

>>நல்ல கவிதை கணையாழியில்தான் வெளிவரவேண்டுமென்பதில்லை ---

நல்லா சொல்லியிருக்கீங்க :-)