Monday, August 30, 2004

அந்திமழையின் மேலும் சில துளிகள்...

***

SPB ஒவ்வொருமுறை பாடிமுடிக்கும்போதும் ஒரு பெண்மணி மேடையின் பின்புறம் இருந்து ஓடிவந்து யார்மூலமாவது அடுத்த பாடலுக்கான பக்கத்தைப் புரட்டுக்கொண்டுவந்து கொடுப்பதும், பாடிய நூலை வாங்கிச்செல்வதும் பல பாடலுக்குத் தொடர்ந்தது. ஆனால் மேடையின் முன்புறமோ, SPB-யிடம் நேரடியாகவோ வந்து வாங்கிச் செல்லவில்லை. ஒருபாடலின் இறுதியில் வழக்கம்போல் நோட்டை வாங்க வந்து ஓரத்தில் நிற்கும்போது SPB "நோட்டை கையை நீட்டிக் கொடுக்காமல், இங்க வாங்கம்மா, இங்க வாங்க, பக்கத்துல வாங்க, முன்னாடி வாங்கன்னு சொல்லிண்டே கிட்டத்தட்ட இழுத்தணைத்து அழைத்து வந்தார்..."
உடனே ஜானகிம்மா சொன்னாங்க, 'அவங்க Mrs. SPB' என்று... இப்போது சிலகாலமாக அவங்களும் உடன்வந்து, இப்படி உதவிகள் பல செய்கிறார்கள் என்று SPB சிலாகித்துக்கூறினார்கள்.

***

பிண்ணனி இசை அளித்த 'ரகுராஜ் சக்ரவர்த்தி' இசைக்குழு எனக்குத்தெரிந்து 80-களின் பின்பகுதியில் இருந்து சென்னையில் பலநேரம் அன்றாடம் நிகழ்ச்சி கொடுக்கும் ஒரு குழு. சென்னையின் பல சுவர்கள் - இவர்களுடைய நிகழ்ச்சி 'ராஜா முத்தையா மன்றத்தில்' நடைபெறுவதாக பெரிய பெரிய சுவரொட்டிகளை சுமந்து நிற்கும். அந்த அனுபவம் பெரிதாகக் கை கொடுத்தது.

***
இவையெல்லாவற்றுக்கும் மேலாக - வேறு பாடக, பாடகியர் இன்றி, இசையமைப்பாளர் யாருடைய ஆளுமையும் இல்லாத ஒரு சுதந்திரம் அவர்களுக்கு மேலும் ஆத்மார்த்தமாக பாட இயைந்தது.

***

இந்த இசை நிகழ்ச்சிகள் ஏன் கடற்கரை கலையரங்கு எஸ்பிளனேட் இசையரங்கில் (Concert Hall) அல்லாமல் நாடக அரங்கில் (Theatre) நடத்தப்படுகிறது? சற்றுமுன் அரங்கவாடகையை ஒப்பிட்டபோது ஒன்றும் அதிக வித்தியாசமில்லை. அவர்கள் குறிப்பிட்டுள்ள எல்லாத்தகுதியுமிருக்கிறது.

இந்த நேரத்தில் எஸ்பிளனேட் பற்றி:

சிங்கையை ஆசிய கலைகள் மையமாக ஆக்கவும், கலைகளை ஊக்குவிக்கவும் பெரும் பொருட்செலவில் 2002ம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தக் Esplanade - Theatres On The Bay - கடலோரக் கலையரங்கம். இது சிங்கப்பூரர்களால் அதிகம் ருசிக்கப்படும் டுரியன்* பழ வடிவிலேயே வடிவமைக்கப்பட்டது. சிட்னி ஓபரா ஹவுஸ், விக்டோரியா ஹால் போல இதுவும் பெயர்பெற முயற்சி நடக்கிறது.

*டுரியன் - சிங்கை, மலேசியா வந்திருந்தால் இதைப் பார்த்திருக்கும் வாய்ப்புண்டு. வராதவர்களுக்கு - சிங்கை அரசால் ரயிலில் எல்லாம் எடுத்துச் சென்றால் அதன் நறுமணம் 'வீசும்' என்ற தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அந்த வாடையை சகித்து சாப்பிட ஆரம்பித்தால் விடமாட்டார்கள்!. ருசி பிடித்தவர்களுக்கு பல உணவுவகைகள் டுரியன் சுவையில் கிடைக்கும். நான் இதுநாள் வரை ருசித்ததில்லை. நண்பரொருவர் கூறினார் - வாரயிறுதியில் டுரியன் வியாபாரம் சூடு பிடிக்குமாம், மலிவுவிலை வயாகரா என்பதால்!

No comments: